வேலி போட வந்தவர்கள் மக்களால் முற்றுகை!!


மட்டக்களப்பு, கல்லடி பாலத்திற்கு அருகிலுள்ள வடிச்சல் நிலப் பகுதியை, இன்று (02) காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியையே சிலர் இன்று வேலியடைக்க முற்பட்டுள்ளனர்.

அப்பகுதியில் உள்ள கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச கிராம சேவையாளர் உட்பட கிராம மக்கள் அப்பகுதிக்கு விரைந்து, அதைத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, அங்குவந்த பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.


சில காலங்களாக போலி உறுதிகளைக்கொண்டு குறித்த பகுதியை அபகரிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தாம் அதனைத் தடுத்து நிறுத்தி வருவதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வடிச்சல் பகுதி ஊடாகவே மழைகாலங்களில் நொச்சமுனை தொடக்கம் கல்லடி வரையான பகுதிகளில் உள்வரும் வெள்ள நீர்கள் வடிந்து, கல்லடி வாவியில் கலப்பதாகவும் அப்பகுதியை அடைத்தால் அப்பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டினர்.

எனவே, குறித்த பகுதியை பாதுகாப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் உரிய அதிகாரிகளும் விரைவாக நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

அந்தச் சம்பவம் காரணமாக, கல்லடி பாலம் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டதுடன், போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டன.

No comments