நினைவேந்தலை மாற்றாதீர்கள்:மறவன்புலோ சச்சி!



போரில் இறந்தோரை நினைவுகூரும் வழமையான நாளை மாற்றாதீர். கலகத்தைக் கிளறாதீர் என ஆயர் பேரவையிடம் மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இறந்தோரை நினைவுகூரும் சடங்குகளைச் சைவர்கள் போர் காலங்களிலேயே தீர்மானித்துள்ளனர். 

போர் முடிந்த பின்பும் இறந்தோரை நினைவுகூர்ந்து சடங்குகள் இயற்றி வரும் சைவர்களைத் திசை திருப்பாதீர். 

உரோம கத்தோலிக்க கிரிகோரியன் நாட்காட்டிக்கமைய நினைவு கூர்க எனப் புதிய நாளைக் கத்தோலிக்க ஆயர் கூட்டம் சைவர்களை நோக்கிக் கூறுவதைக் கண்டிக்கிறேன்.

ஏற்கனவே வழமையில் இருந்த சந்திராயன நாட்காட்டியின் வளர்பிறை தேய்பிறைக் கணிப்பில் வானியல் அறிவின் துணையுடன் சைவர்கள் இறந்தோரை நினைவுகூரும் வழக்கத்தை மாற்றக் கத்தோலிக்க ஆயர்கள் முயல்வதைக் கண்டிக்கிறேன்.

கிறித்து பிறந்தநாளில் இருந்து வருகின்ற நாட்காட்டியைக் கொண்டு சைவராகிய இறந்தோரை நினைவுகூரும் நாளை நிர்ணயிக்காதீர்.

சைவர்களைக் கிருத்தவ மயமாக்கும் கடந்த 400 ஆண்டுகால முயற்சியின் தொடர்ச்சியாகவே ஆயர்கள் கூட்டம் நினைவு கூரும் நாளை அறிவித்துள்ளதைக் கண்டிக்கிறேன்.

சைவர்கள் வழமைபோல இறந்தோரை வழிபாட்டுடனும் உணர்வு மீநிற்க உறவுகள் நடுவணாக, நினைவுகூர்வர்.

கத்தோலிக்க ஆயரின் அடிமை மோகக் கோரிக்கைக்கு அமையச் சைவர்கள் தம் நினைவு கூர்தல் முறைமைகளை வழமைகளை மாற்றமுடியாது. 

கத்தோலிக்க ஆயர்களும் குருமாரும் கத்தோலிக்கத் தேவாலயங்களில் இறந்த கத்தோலிக்கர்களுக்குத் தாம் விரும்பிய நாளில் அல்லது நாள்களில் வழிபட்டு நினைவுகூர்தலையே சைவர்களாகிய நாங்கள் ஆதரிக்கிறோம்.

கத்தோலிக்க கிரிகோரியன் நாட்காட்டியை சைவர்கள் மீது திணித்துச் சைவ மரபுகளை உடைத்தெறிய முயலும் கத்தோலிக்க ஆயர் கூட்டத்தின் அறிவித்தலை எச்சரிப்புடன் கண்டிக்கிறேன் என மறவன்புலோ சச்சிதானந்தன் விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளார்.


No comments