தேர்தல்:விகிதாசார முறைமை வேண்டும்!

 


மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த   இப்போது அரசு இணங்கியுள்ள நிலையில்  விகிதாசார தேர்தலை கைவிட பெரும்பான்மை சிங்கள கட்சிகள் முற்பட்டுள்ளன. 

 “விகிதாசார முறைமை வேண்டாம்”,  “தொகுதி முறையே வேண்டும்” என தெரிவுக்குழுவில் பெரும்பான்மை, குறிப்பாக அரசாங்க கூட்டணி அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டார்கள். விகிதாசார முறைமை என்பது நாட்டில் சிதறி வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை உறுதி படுத்தும் ஒரேயொரு முறைமை என நாங்கள் ஒரே குரலில் சொன்னோம். எங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட்ட பெரும்பான்மை கட்சிகளும் ஆதரவளித்தார்கள் என தெரிவித்துள்ளார் மனோகணேசன்.     

பாராளுமன்றமும், மாகாணசபைகளும் தேசிய, மாகாண சட்டமூலங்களை விவாதிக்கும் நிறுவனங்களாகும். ஆகவே இங்கே உள்ளூர் தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் அவசியம் கிடையாது.

ஆனால், நீர், மின்சாரம், வீதிகள் உட்பட மக்களின் நாளாந்த விவகாரங்களை கையாளும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வட்டார உறுப்பினர்களாக இருப்பது அவசியம். 

ஆகவே உள்ளூராட்சி மன்றங்களில், அவ்வந்த மன்றங்களின் வட்டாரங்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களுக்கான அவசியம் இருக்கின்றது. 

ஆகவே பாராளுமன்றம், மாகாணசபைகளுக்கு தொகுதி முறை தேவையில்லை என நாம் கூறினோம். உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொகுதி (வட்டார) உறுப்பினர்கள் இருக்கலாம் எனவும் நாம் கூறினோம். அதேபோல்தான், விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்ச கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர், அந்த கட்சி தலைமை முன் நிறுத்தும் வேட்பாளருக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து, விருப்பு வாக்கு மூலம் தப்புகிறார். 

கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை தனக்கு பிடித்த வேட்பாளரை தெரிவு செய்ய ஒவ்வொரு வாக்காளருக்கும் ஜனநாயக சுதந்திரத்தை, “விருப்பு வாக்கு” வழங்குகிறது.  இதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். 

“விருப்பு வாக்கு  வேண்டாம்”,  “விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோசங்கள் பெரும்பான்மை இன பெரிய கட்சிகளின் கோசங்கள்தான். 

தமிழ், முஸ்லிம் நம்மவர்கள் கூட - பொதுமக்களும், அரசியல்வாதிகள் சிலர் கூட- இவைபற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு  வேண்டாம்”,  “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோசங்களை எழுப்புகிறார்கள் எனவும் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.


No comments