அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் - இரா.சம்பந்தன்


இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வரலாற்று ரீதியிலும் வாழ்விட, கலாசார மற்றும் மொழியியல் ரீதியிலும் தமிழ்மக்கள் கொண்டிருக்கும் உரிமையைப் பல்வேறு அரசதலைவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள்.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை இருக்கின்றது என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே தமிழ்பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்கவேண்டும். பிளவுபடாத நாட்டிற்குள் தமிழ்மக்களுக்கான முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும் வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட 'தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று' என்ற ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆரம்ப உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் கூறியதாவது,

இந்நிகழ்வில் ஓரிரு வார்த்தைகள் பேசுவதற்காக என்னை இணைத்துக்கொண்ட ஏற்பாட்டாளர்களுக்கு நன்றிகூறவிரும்புகின்றேன். நில அபகரிப்பு என்பது இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில்வாழும் தமிழ்மக்கள் எதிர்கொண்டுவரும் முக்கிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

தமிழ்பேசும் மக்களிடன் பூர்வீக வாழ்விடங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு - கிழக்கு மாகாணங்களில் காலத்திற்குக்காலம் இடம்பெற்ற இனத்துவப்பரம்பல் தொடர்பான சில புள்ளிவிபரங்களை இங்கு சுட்டிக்காட்டவிரும்புகின்றேன். 1947 ஆம் ஆண்டு தொடக்கம் 1981 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சிங்கள மக்களின் சனத்தொகையில் 27 சதவீத அதிகரிப்பு அவதானிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இக்காலப்பகுதியில் (1947 - 1981) கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் சனத்தொகை 818 வீதத்தினால் அதிகரித்துள்ளது. அதன்படி கிழக்கு மாகாணத்தில் பெருமளவு சிங்களக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டுள்ளமையினை அவதானிக்கமுடிகின்றது.

இந்நிலைவரம் தொடர்பில் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவுடன் செல்வநாயகம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அதனைத்தொடர்ந்து 1957 ஆம் ஆண்டில் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதுமாத்திரமன்றி கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் சிங்களவர்கள் பெருமளவில் குடியமர்த்தப்படுவது குறித்துப் பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன. அதன்தொடர்ச்சியாக 1965 ஆம் ஆண்டில் டட்லி - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்விரு ஒப்பந்தங்களும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ்மக்கள் வாழ்விட மற்றும் மொழியியல் ரீதியில் கொண்டிருக்கும் உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மூன்றாவதாக 1987 ஜுலை மாதத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அவ்வொப்பந்தத்தின் ஊடாக வட - கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் கொண்டிருக்கும் வாழ்விட மற்றும் மொழியுரிமை தொடர்பான கருத்தியல் அங்கீகரிக்கப்பட்டது.

எனவே இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து அதன்பின்னரான காலகட்டங்களில் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் தமிழ்மக்களின் வரலாற்று மற்றும் கலாசார, பாரம்பரிய அடிப்படையிலான வாழ்விடம் என்பதை பண்டாரநாயக்க, டட்லி சேனாநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்தன உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்த்தின் ஊடாக முழுமையான அதிகாரப்பரவலாக்கம் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டது.

அதேபோன்று காலத்திற்குக்காலம் தமிழ்மக்களுக்கான பல்வேறு விதமான அரசியல் தீர்வுத்திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழ்பேசும் மக்கள் தமது வாழ்விடங்களில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கான அந்தஸ்த்தைப் பெற்றிருக்கவேண்டும்.

ஏனெனில் வடக்கு, கிழக்கு உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் வாழும் தமிழ்மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கான தமது வலுவான பங்களிப்பை வழங்கியிருக்கின்றார்கள். இது புதியதொரு விடயமல்ல. ஸ்கொட்டிஷ் மக்கள் ஸ்கொட்லாந்தில் வாழ்கின்றனர். வேல்ஸ் மக்கள் வேல்ஸில் உள்ளனர். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அந்தந்த இனமக்கள் வாழ்கின்றனர்.

அதேபோன்று தமிழ்மக்களுக்கும் பிரிக்கப்படாத நாட்டிற்குள் முழுமையான அதிகாரப்பரவலாக்கம் வழங்கப்படவேண்டும். சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டத்தின் பிரகாரம் வரலாற்று ரீதியான வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்கும் சுயமரியாதையுடனும் கண்ணியத்துடனும் வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிட்டார். 

No comments