மக்களைக் குழப்பக்கூடாது!! கண்விழித்தார் சம்பந்தன்!!


தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்கும் இலக்கு நோக்கி கூட்டமைப்பாக பயணிக்கும் அனைவரும் பொதுவெளியில் கருத்துக்களை பகிர்ந்து சாதாரண மக்களை குழப்பாதீர்கள் என்று அனைத்து உறுப்பினர்களிடத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான சித்தார்த்தன் எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி ஆகியோர் ஊடகவியலாளர்கள் சந்திப்புக்களில் பரஸ்பர கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலும் மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்திருக்கிறார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்:-

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஒரே கொள்கையில் ஒரே இலக்கு நோக்கி பயணிக்கின்ற அமைப்பாகும். தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற விடயத்தில் எமக்குள் எவ்விதமான மாறுபட்ட நிலைப்பாடுகளும் கிடையாது. இதற்காகவே அனைவரும் செயற்பட்டு வந்துகொண்டிருக்கின்றோம்.

அவ்விதமானதொரு சூழலில் அண்மைய நாட்களில் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பொதுவெளியில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்கள். கூட்டமைப்பு ஒரு ஜனநாயக கட்டமைப்பு என்ற அடிப்படையில் அனைவருக்கும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு தாரளமான உரித்துள்ளது. அவ்விதமாக வெளிப்படும் கருத்துக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையை சீர்குலைக்காத வகையில் அமைய வேண்டும்.

அதுமட்டுமன்றி சாதாரண மக்களையும் குழப்புவதாக அமைந்து விடக்கூடாது. ஆகவே இந்த விடயத்தில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புணர்ந்து கருமங்களை ஆற்ற வேண்டும். தற்போதைய சூழலில் கொரோனா நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக கூட்டமைப்பாக ஒன்று கூடி கலந்துரையாட முடியாத நிலையில் இருக்கின்றோம். 

விசேடமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் நான் சந்திப்புக்களை தவிர்த்துள்ளேன். ஆகவே தான் பொதுவெளியில் பேசப்படுகின்ற விடயங்கள் பற்றிய கலந்துரையாடல்கள் உள்ளிட்ட ஏனைய கருமங்களை முன்னெடுக்க முடியாத நிலைமைகள் காணப்பட்டு வருகின்றன.

எனினும், இந்த விடயங்களுக்கு எல்லாம் அப்பால், கூட்டமைப்பாக நாம் எமது மக்களின் நீதிக்கோரிக்கை, பொறுப்புக்கூறல், நிரந்தர அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை ஒன்றுபட்டு முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments