எவிடம்? எவிடம்? ஜெனிவா! ஜெனிவா! பனங்காட்டான்


ஜெனிவா மனித உரிமை ஆணையம் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றிய தனது 46-1 இலக்கத் தீர்மானத்தை வலுவுடையதாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அத்தீர்மானத்துக்கு இணங்க தனிச்செயலகம் அமைக்கும் பணிக்கு நிதி பெறப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 48வது அமர்வில் மேலும் இறுக்கமான இன்னொரு தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளது. இப்போதுள்ள நிலையில் ஈழத்தமிழரின் அடையாளமாக ஜெனிவாவே காணப்படுகிறது.


முள்ளிவாய்க்கால் படுகொலையும் உறைநிலையும் பன்னிரண்டு வருடங்களைக் கடந்துவிட்டது. இது தொடர்பான ஜெனிவாத் தீர்மானமும் பத்தாண்டுகளைத் தாண்டிவிட்டது. இவைகளின் நினைவுகூரலுடன் இந்தப் பத்தியை ஆரம்பிப்பது பொருத்தமாக இருக்கும்.

பிரித்தானியர்கள் இலங்கையை சிங்களவர்களிடம் கையளித்துவிட்டு - இதற்குப் பெயர் சுதந்திரம் - சென்றதுடன் ஆரம்பமான தமிழரின் தாய்மண் உரிமைப்போர் இதுவரை பல வடிவங்களைக் கண்டுள்ளது.

சிங்கள அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை, கிழித்தெறியப்பட்ட ஒப்பந்தங்கள், சாத்வீகப் போராட்டங்கள், சிங்கள அரசாங்கங்களுடன் சேர்ந்து இயங்கியமை, ஏமாற்றங்கள், கழுத்தறுப்புகள், தனிநாட்டுக் கோரிக்கை, அரச ஆயுதப்படைகளை ஆயுதங்களால் சந்தித்த போராட்டம் என்று நீண்ட நெடும்பயணம் மேற்கொண்ட தமிழர் இப்போது ஜெனிவாவில் தரித்து நிற்கின்றனர்.

சொல்லப்போனால், ஜெனிவாதான் ஈழத்தமிழரின் அடையாளமாக இப்போது இருப்பதாகக் கூறினால் அது தவறாக இருக்காது.

வருடத்துக்கு மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம் ஜெனிவாவில் கூடும்போதே ஈழத்தமிழரின் தேசியத் தலைவர்கள் என்பவர்கள் தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வர். ஏதாவது அறிக்கைகள் தயாரிப்பர். பின்னர் தங்களுக்குள் அடிபடுவர். ஜெனிவா முடிய மீண்டும் தூக்கத்துக்குச் சென்றுவிடுவர்.

மனித உரிமை ஆணையத்தின் நாற்பத்தெட்டாவது அமர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) பதின்மூன்றாம் திகதி ஆரம்பமாகி அக்டோபர் எட்டாம் திகதிவரை இடம்பெறும். வழக்கம்போல் புகலிடத் தமிழர் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் ஈருருளிப் பயணங்களையும் மேற்கொள்வர். ஜெனிவா முன்றலில் பாரிய ஊர்வலம், கண்காட்சி, பொதுக்கூட்டம் என்பவை நடைபெறும்.

புகலிடத் தமிழ் உணர்வாளர் தங்களால் முடிந்தளவுக்கு சில காரியங்களை நிறைவேற்றுகின்றனர். சில தமிழர் அமைப்புகள் பல்வேறு நாடுகளின் பிரமுகர்களைச் சந்தித்து தீர்மானங்களுக்கு ஆதரவு கோருவர். ஓரளவுக்கு இம்முயற்சி நிறைவேறுவதற்கு இந்நடவடிக்கைகள் பலம் சேர்க்கின்றன.

சமகாலத்தில், தாயகத்திலுள்ள தேசிய நாம அரசியல் தமிழ்த் தலைவர்கள் புலம்பெயர் தமிழரின் செயற்பாடுகளை பலவீனப்படுத்துவதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், மனித உரிமை ஆணையாளர்களாக 2004ம் ஆண்டுக்குப் பின்னர் பணியாற்றி வருபவர்களால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் தீர்மானங்கள் ஏதோவொரு வகையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதேசமயம், இந்த ஆணையாளர்கள் இனவாத எதேச்சாதிகார மதவெறி கொண்ட இலங்கை ஆட்சியாளர்களால் பதம் பார்க்கப்பட்டு வருகின்றனர்.

மாவிலாறில் போர் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் மனித உரிமை ஆணையாளராகப் பணியாற்றியவர் லூயிஸ் ஆர்பர் அம்மையார். கனடாவில் உயர் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர் இவர். இலங்கையின் மனித உரிமை மீறல்களை இவர் அவ்வப்போது சுட்டிக்காட்டியதால் இலங்கையின் ஆட்சியினர் இவருக்கு வெள்ளைப்புலி என பட்டம் சூட்டினர். 2008ல் மீளவும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டபோது வெறுப்புக் காரணமாக இவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

2008 - 2014ம் ஆண்டு காலத்தில் ஆணையாளராக இருந்தவர் நவநீதம் பிள்ளை அம்மையார். தென்னாபிரிக்காவில் நீதித்துறையில் உயர் பதவி வகித்தவர். இவர் தமிழினத்தை பூர்வீகமாகக் கொண்டவர். 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நேர்மையாக விசாரித்ததோடு போர் இடம்பெற்ற இடத்துக்கு நேரடியாகச் சென்று தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தவர்களை சந்தித்து உண்மைகளை வெளிக்கொணர்ந்தவர்.

இதனால் காத்திரமான தீர்மானங்களை அப்போது ஆணையம் நிறைவேற்றியது. இவருக்கும் புலிச்சாயம் பூச இலங்கை தவறவில்லை.

2014லிருந்து 2018வரை ஆணையாளராக இருந்த செயித் அல் ஹ_சேன் முன்னையவர்களைப் போன்று தமது பணியைப் பிசகின்றித் தொடர்ந்தார். இவரது காலத்திலும் இலங்கை மீதான தீர்மானங்கள் தொடர்ந்தன.

2018ல் ஆணையாளரான மிச்சேல் பச்லட் அம்மையாரின் இன்றைய காலம் வரலாற்றுப் பதிவுக்குரியது. அமெரிக்கா கொண்டு வந்த பொறுப்புக் கூறல், சர்வதேச நீதிவிசாரணைக்கான பொறிமுறை என்ற தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கிய இலங்கை அரசு, பின்னர் அதிலிருந்து தன்னை விலத்திக் கொண்டதன் விளைவாக கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட 46-1 இலக்கத் தீர்மானத்தின் பின்னணியில் மிச்சேல் பச்லட்டின் பங்கு நிறையவே உண்டு.

சிலி நாட்டின் ஜனாதிபதியாக இரண்டு தடவை பணியாற்றிய இவர் நீண்டகால மனித உரிமைப் போராளி. இதனால் இவரும் இவரது பெற்றொரும் சிறைவாசம் அனுபவித்தவர்கள். தந்தையார் சிறைக்குள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு மரணத்தைச் சந்தித்தவர். இவரும் இவரது தாயாரும் சில வருடங்கள் அந்நிய தேசத்தில் அரசியல் புகலிடம் பெற்றவர்கள்.

சத்திரசிகிச்சை நிபுணரான பச்லட் அம்மையார், ராணுவத் தந்திரோபாயங்கள் தொடர்பாக பல்கலைக்கழக பட்டம் பெற்றவர். இதனால் இவருக்கு யுத்த அவலங்கள், கைதுகள், சித்திரவதைகள், படுகொலைகள் பற்றி நிறைய அனுபவங்கள் உண்டு. 46-1 இலக்கத் தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னும் பின்னும் இவரால் வெளியிடப்பட்ட கருத்துகள் நீதி நியாயத்துக்கு உட்பட்டவையாக இருந்ததால் இலங்கை அரசு இவர்மீது ஆத்திரமடைய நேர்ந்தது.

இலங்கை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டியவைகளை, கால வரையறை வகுத்து மனித உரிமை ஆணையம் மார்ச் மாதம் தீர்மானம் நிறைவேற்ற, இவரால் சமர்ப்பிக்கப்பட்ட முற்கூட்டிய அறிக்கை  மூலமாக அமைந்தது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக விசாரணை நடத்தி ஆவணப்படுத்த விசேட செயலகம் ஒன்று அமைக்க வேண்டுமென்று 46-1 இலக்கத் தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டது. போர்க்கால சான்றுகள், ஆவணங்கள் என்பவற்றைச் சேகரித்துப் பாதுகாக்க அமைக்கப்படும் விசேட செயலகத்துக்கு 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் தேவையென கோரப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஐ.நா. பொதுச்சபை நிராகரித்துவிட்டதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன ஊடகங்களுக்குத் தெரிவித்த சில நாட்களின் பின்னர், இந்த நிதி வழங்கப்படுவதாக தகவல் வெளியானது.

சர்வதேச நியாயாதிக்க எல்லை, நாட்டுக்கு வெளியே உள்ள அதிகார எல்லை தொடர்பான விடயங்கள் மற்றும் தொடர்புடைய ஐ.நா. வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஏனைய பொறுப்புக்கூறல் நோக்கங்களுக்காக தேசிய மட்டத்திலான அதிகாரிகளிடம் சேகரிக்கப்படும் தகவல்களை ஒருங்கிணைத்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் மத்திய நிலையமாக விசேட செயலகம் அமைந்திருக்குமென தீர்மான வாசகம் தெரிவித்துள்ளது.

ஒரு மூத்த சட்ட ஆலோசகரும், இரண்டு சட்ட ஆலோசகர்களும் பணியாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

எக்காரணம் கொண்டும் விசேட செயலக அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்களென இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அறிவித்திருப்பது, விழுந்தும் மூக்கில் மண் படவில்லையென்ற இயலாமையை அம்பலப்படுத்துகிறது.

ஐ.நா.வின் நிரந்தர அலுவலகம் ஒன்று இலங்கையில் இயங்குகிறது என்பதையும், நாளாந்த அடிப்படையில் தேவையான தகவல்களை இந்த அலுவலகம் தலமைப்பீடத்துக்கு வழங்கி வருகிறது என்பதையும் ஏனோ அமைச்சர் மறந்துவிட்டார்.

மிருசுவிலில் படுகொலைகள் புரிந்து மரண தண்டனை பெற்ற சுனில் ரத்னாயக்க என்ற ராணுவ அதிகாரி, சகோதர நாடாளுமன்ற உறுப்பினரைக் கொலை செய்து  மரண தண்டனை பெற்ற துமிந்த சில்வா ஆகியோருக்கு ஜனாதிபதி வழங்கிய விடுதலை, பதினொரு தமிழ் இளைஞர்களை படுகொலை செய்த வழக்கிலிருந்த கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கருணகொடவை விடுதலை செய்தது போன்ற இந்த வருடத்தின் முக்கிய மனித உரிமை மீறல்கள் அடுத்த மாத அமர்வில் பிரதிபலிக்கவுள்ளன.

இதற்கு ஏதுவாக இன்னொரு கடுமையான இலங்கை மீதான தீர்மானத்தை, முக்கியமாக பொருளாதார - பயணக் கட்டுப்பாடுகளை கொண்டுவரும் வகையில் அடுத்த மாத அமர்வில் நிறைவேற்ற ஏற்பாடாகி வருகிறது. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, மசிடோனியா, மென்ரொனிகா ஆகிய நாடுகள் கூட்டாக இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

46-1 தீர்மானத்தின் பின்னர்... என்ற பார்வையில் மனித உரிமை ஆணையாளர் பச்லட் அம்மையார் சமர்ப்பிக்கும் அறிக்கை நிச்சயமாக இலங்கைக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது. சீனப் பிரதமரின் இலங்கைக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயம், கோதபாய ராஜபக்ச திட்டமிட்டிருக்கும் பிரித்தானிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கான விஜயம் என்பவை மனித உரிமைகள் ஆணையத்தின் 48வது அமர்வின் பிரதிபலிப்பா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

முன்னைய தீர்மானங்களைவிட அடுத்த மாத தீர்மானம் ஏதோ ஒரு வகையில் மிக இறுக்கமானதாக அமையப்போவது முற்கூட்டியே தெரிகிறது. தமிழ்த் தலைவர்கள் தங்களின் கையாலாகாத்தனத்துக்கு ஜெனிவா கைகொடுக்குமென நம்புகின்றனர்.

முன்னைய எவிடம் எவிடம், புளியடி புளியடி என்ற வாசகம் இப்போது எவிடம் எவிடம், ஜெனிவா ஜெனிவா என்றாகியுள்ளது. இன்னும் எத்தனை வருடங்களுக்கு இப்படிப் போகப்போகிறது?

No comments