தொண்டமானாறு கடற்பகுதியில் 50 மில்லியன் கஞ்சா மீட்பு! மூவர் கைது!!


இலங்கை கடற்படையினரால் தொண்டமானாறு கடற்பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையொன்றின்போது சுமார் 168.750 கிலோ கிராம் கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த கடத்தல் நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட டிங்கி படகுடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதியானது சுமார் 50 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் 21 முதல் 28 வயதுடைய சிலாவத்துறை மற்றும் மாமுனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா தொகை, படகு மற்றும் கைதான சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கற்பிட்டி, இப்பன்தீவின் கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் வடமேற்கு கடற்படையினரால் நடத்தப்பட்ட மற்றொரு சிறப்பு நடவடிக்கையில் 650 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயன்படுத்திய படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொற்றுநோய் கவலைகள் காரணமாக இந்த சிறப்பு நடவடிக்கைகள் கொவிட்-19 நெறிமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

No comments