யாழ்.பல்கலை ஆசிரிய சங்கமும் எதிர்ப்பு!


கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில்  தற்போதைய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

இராணுவ மற்றும் பாதுகாப்புத்துறைசார் பயிற்சி நெறிகளினை இராணுவத்தில் சேவையாற்றுபவர்களுக்கு வழங்கும் நோக்குடன்  உருவாக்கப்பட்ட சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனமானது இச்சட்ட வரைவின் மூலம் தேசிய பல்கலைக்கழகம் எனும் அந்தஸ்த்தினை பெற்றுக்கொள்வதுடன், இலங்கையில் உள்ள ஏனைய அரச பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படுகின்ற பாடத்திட்டங்களினையும் இலவசமாக அல்லாது பணத்திற்காக வழங்குகின்ற அதிகாரம் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படவுள்ளது. இப் பல்கலைக்கழகமானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஆளுகைக்குள் உட்படாது, சுயாதீனமான முறையில், பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு பல்கலைக்கழகமாகத் தொழிற்படவுள்ளது.  நாட்டிலுள்ள பொதுவான பல்கலைக்கழகக் கட்டமைப்புக்களுக்கும், பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டவரையறைகளுக்கும் முரணான வகையில் இந்தப் பல்கலைக்கழகத்தினை நிறுவுவதற்கு இந்தச் சட்டமூலம் வாய்ப்பளிக்கின்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இறையாண்மை, சுயாதீனத்தன்மை என்பன இந்தச் சட்டமூலத்தினால் அச்சுறுத்தலுக்கு ஆளாவதுடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நிர்வாகத்துக்குச்  சமாந்தரமாகச் செயற்படக்கூடிய வகையில்  இந்த நிறுவனம் அமையப்போகின்றது.

புதிய சட்டமூலத்தின் ஊடாக மேற்படி பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக நியமிக்கப்படுபவர்கள் புத்திஜீவிகளும் கல்விமான்களும் அல்ல. மாறாக, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர், முப்படைகளின் தளபதிகள், பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர், நிதியமைச்சினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் உள்ளிட்ட தரப்பினரே. இவர்களே இப் பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபையில் அங்கம் வகிக்கப் போகின்றார்கள். ஆகவே பாதுகாப்பு அமைச்சின் கட்டளைகளே இந்த நிர்வாகசபையின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும். 

இந்தச் சட்டமூலமானது நாட்டின் உயர்கல்வித்துறை மிகவும் தீவிரமான முறையில் இராணுவமயப்படுத்தப்படுவதனை வெளிக்காட்டுகிறது. இராணுவமயமாக்கம் காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கடந்த காலங்களிலே பாதிக்கப்பட்டது. இராணுவத்தின் தலையீடு எமது பல்கலைக்கழகத்தின் சுயாதீன செயற்பாடுகளுக்குப் பல வழிகளிலும் பங்கம் விளைவித்தது. இன்று இந்தச் செயன்முறை இலங்கையின் ஒட்டுமொத்த உயர்கல்வித் துறையினையும் மோசமாகப் பாதிக்கும் ஒரு விடயமாகும். இந்தச் சட்டமூலத்தினால் சகல சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்படுவார்கள். 

இந்தச் சட்ட வரைவு நிறைவேற்றப்படுமாயின் அது இந் நாட்டுமக்களின் இலவசக் கல்வி உரிமை  பறிக்கப்படுவதற்கான சூழ்நிலையினை உருவாக்கும். அத்துடன், பணத்திற்காகக்  கல்வி வழங்கப்படுகிற  சூழ்நிலையும் உருவாகும். இது அரசாங்கத்திற்குச் சொந்தமான தனியார் பல்கலைக்கழகமாகவே செயற்படப் போகின்றது. இதனால் உயர் கல்வியின்  தரம் இல்லாமல் போவதுடன் சமூக ஏற்றத்தாழ்வுகளும் எதிர்காலத்தில் அதிகரிப்பதற்கான சூழ்நிலைகளும் உருவாகும். அத்துடன் இந்த நடவடிக்கை இராணுவமயப்படுத்தப்பட்ட கல்வித் திட்டங்களினை  சமூகமயப்படுத்துவதற்கான செயற்திட்டத்தினை  நோக்கி மக்களை திசைதிருப்புவதாகவும் அமையலாம்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட  தனிமைப்படுத்தல் சட்டத்தினை அரசாங்கமானது ஜனநாயகப் போராட்டங்களினை நசுக்குவதற்கு பயன்படுத்துவதானது மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது. அண்மையில் இந்தச் சட்டமூலத்துக்கு எதிரான போராட்டம் ஒன்று இடம்பெற்ற போது சிலோன் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் வேறு பலரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் பின்னர் தனிமைப்படுத்தப்பட்டமையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே இந்தச் சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் அதேவேளை, நாட்டினதும் பொதுமக்களினதும் ஜனநாயகத் தன்மைக்கு மதிப்பளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றௌம்.

கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தினை நாம் எதிர்க்கும் அதேவேளை, இந்தச் சட்டமூலத்தினை நாட்டின் உயர்கல்வி, கல்வித் துறையினைச் சேர்ந்த அனைத்து ஊழியர் சங்கங்களும் எதிர்க்க வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கின்றோம். இது தொடர்பில் இடம்பெறும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு எமது சங்கம் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கும். நாட்டின் முற்போக்குச் சக்திகளும், ஜனநாயகத்தினை வலியூறுத்தும் சக்திகளும், இலவசக் கல்வியினை வலியுறுத்தும் சக்திகளும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும். இலவசக் கல்விக்கும், ஜனநாயக பூர்வமான கல்விக்கும் விரோதமான இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் அழைப்பு விடுக்கின்றது.

No comments