கிளியில் பாலைப்பழம் பிடுங்குவதும் குற்றமாம்?



கிளிநொச்சியை கடடியெழுப்ப போவதாக மீண்டும் அண்மைக்காலமாக குத்தி முறிபவர் டக்ளஸ் தேவானந்தா.அங்கயனிற்கு இடம் கொடுத்து கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸை அரசு நியமித்தது.

ஆனாலும் அவருக்கு நேரமில்லாததால் அவரது அல்லக்கைள் மட்டும் அதிகாரிகள் முதல் தொழிலாளிகள் வரை மிரட்டும் பரிதாபம் நடக்கின்றது.

முடியுமானால் கிளிநொச்சியிலிருப்பவர்களிற்கு ஒரு கொரோனா தடுப்பூசியினையாவது பெற்றுக்கொடுக்க முடியுமாவென அங்கயன் தரப்பு சீண்ட ஒரு மாதிரியாக 60 வயதிற்கும் மேற்பட்ட ஒரு பகுதியினருக்கு ஊசி பெற்றுக்கொடுத்து பெருமூச்செறிகிறது டக்ளஸ் தரப்பு.

இதனிடையே அன்றாட வாழ்வாதாரத்திற்காக பூநகரி வீதியில் தமது வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம் பறித்தவர்களை விரட்டியடித்த வனவளத்திணைக்கள அதிகாரிகள் அவர்களின் கத்திகளை பறித்துச் சென்றுள்ளனர்.

நேற்று செவ்வாய் மாலை 5 மணியளவில் பூநகரி வீதியில் ஜெயபுரத்தினைச் சேர்ந்த மக்கள் பாலைப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்தனர்.

இதன்போது அவ்விடத்திற்கு வருகை தந்த வனவளத் திணைக்களத்தினர் பாலைப் பழம் பிடுங்க வேண்டாம் எனக் கூறி அவர்களிடமிருந்த நான்கு கத்திகளையும் பறித்துச் சென்றுள்ளனர்.  

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்கின்ற கூடுதலான மக்கள் சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பாலைப் பழ சீசன் காலத்தில் பல குடும்பங்கள் பொருளாதார நிலைமை காரணமாக பாலை மரங்களின் கிளைகளை வெட்டி பழம் பிடுங்குவார்கள்.  



இப்பழத்தினை வற்றலாக மாற்றுதல், பாணி காய்ச்சுதல், உடன் உண்ணுதல், வியாபாரம் செய்தல் என்பது காலம் காலமாக இடம் பெற்று வருவது. 

பாலை மரங்களின் கிளைகளை வெட்டுதல், மரங்களை வெட்டுவதாக அமையாது. பொருளாதார நெருக்கடியில் ஜெயபுரம் மக்கள் வியாபாரத்துக்காக பாலைப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்த போது அம் மக்களின் கத்திகளை வனவளத் திணைக்களத்தினர் எடுத்துச் சென்றுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் நாளாந்தம் பல நூறு பாலை மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுவது தொடரும் நிலையில் கண்முடிக்கிடக்கும் வனவளத் திணைக்கள  அதிகாரிகளுக்கு வறுமையை போக்க பாலைப் பழம் பறிப்பதை தடுக்க வாகனங்களில் ஓடிவருவது வேடிக்கையாக உள்ளது.

இது பற்றியெல்லாம் வாயே திறக்கமாட்டாரா அமைச்சரென பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர்.


No comments