யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்களின் 30ஆவது அகவை நிறைவு விழா

யேர்மனி சார்லான்ட் மாநிலத்தில் உள்ள ஐந்து தமிழாலயங்கள் தமது 30 ஆவது அகவை நிறைவு விழாவினை 24.7.2021 சனிக்கிழமை மிகச்சிறப்பாக

கொண்டாடின. சார்புறுக்கன் தமிழாலயம், டில்லிங்கன் தமிழாலயம், சுல்ஸ்பாக் தமிழாலயம், கொம்பூர்க் தமிழாலயம் ஆகிய நான்கு தமிழாலயங்களும் தமது 30ஆவது அகவை நிறைவு விழாவினையும் கொன்ஸ் தமிழாலயம் தனது 15ஆவது அகவை நிறைவு விழாவினையும் ஒரே மேடையில் நடாத்திய காட்சி அவர்களின் ஒற்றுமையின் பலத்தைப் பறைசாற்றி நின்றது.

இந்த வாரம் சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையான கறுப்பு யூலை மாதமானதால் நிகழ்வு ஆரம்பமாவதற்கு முன்பு இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு தீபமேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.அத்தோடு சார்புறுக்கன் தமிழாலயத்தில் நீண்டகாலம் பணியாற்றி சாவடைந்த அமரர் தேனுகாதேவி கந்தசாமி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர் தூவிய பின்பு அவரின் பெயர் சூட்டப்பட்ட அரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

அகவணக்கம் நிறைவடைந்ததும் ஐந்து தமிழாலய மாணவர்களும் மேடையில் நின்று தமிழாலய கீதத்தினை பாடி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். இந் நிகழ்வில் பல யேர்மனிய மக்கள் கலந்து கொண்டது சிறப்பாக அமைந்தது. சுல்ஸ்பாக் நகர முதல்வர் திருவாளர் மிசெல் அடம் (Michael Adam) அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்புரையும் ஆற்றினார். நிகழ்வின் ஆரம்பத்தின் போது யேர்மனியில் வெள்ள அனர்த்தத்தினால் உயிரிழந்த மக்களுக்கும் அகவணக்கம் செய்யப்பட்டது. அதனைச் சுட்டிக்காட்டி பேசிய நகரமுதல்வர் தமிழர்களின் பண்பைப் பாராட்டினார்.

பின்பு மாணவர்களுக்கான நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டது. ஐந்து தமிழாலய ஆசிரியர்கள் நிர்வாகிகள் பாடல்களுடன் அழைத்துவரப்பட்டு மேடையில் கல்விக்கழகப் பொறுப்பாளர் திரு. செல்லையா லோகானந்தம் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர். ஐந்து தமிழாலய நிர்வாகிகளும் தமிழர் ஒருங்கிணைப்புப் பொறுப்பாளர் திரு யோ.சிறிரவிந்திரநாதன் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டனர்.

ஐந்து தமிழாலயங்களின் சிறப்பு மலர்;களும் தனித்தனியாக தமிழாலயப் பெற்றோர்,மாணவர்கள்,ஆசிரியர்கள் புடைசூழ குதூகலமாக மேடைக்கு கொண்டுவரபப்பட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்ட காட்சி மிக அற்புதமாக அமைந்தது.

கொரோனா விசக்கிருமியின் தாக்கத்தின் சட்ட விதிமுறைகளைப் பேணியபடி முதல்முறையாக மண்டபத்தில் கூடியிருந்த மக்கள் அச்சம் தவிர்த்து ஆர்வமாக இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.

No comments