தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசா வழங்கிய ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் பல ஆண்டுகள் கழித்த பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்துக்கு இணைப்பு விசாக்களை வழங்கியுள்ளதாக ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரியாவும் நடேசலிங்கமும் வேலை செய்ய, கல்வி கற்க அனுமதிக்கப்படுவார்கள். 

இக்குடும்பத்துக்கு மருத்துவ உதவிகள், பிற உதவிகள் மட்டுமின்றி அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவியும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, இவர்கள் சமூகத் தடுப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் அவர்கள் கல்விப் பெறவோ வேலை செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனச் சொல்லப்பட்ட நிலையில், தற்போது அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 

ஆஸ்திரேலியாவிலிருந்து சுமார் 3000 கி.மீ. அப்பால் உள்ள கிறிஸ்துமஸ் தீவு தடுப்பிலிருந்து தமிழ் அகதி குடும்பம் பெரும் போராட்டத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தற்காலிகமான ஒரு விடுவிப்பு எனக் கூறப்படும் நிலையில்,  அவர்களின் எதிர்காலம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும் எனப்படுகின்றது. 

No comments