வடமராட்சியில் தனிமைப்படுத்தல்:அமைச்சரிற்கு விதிவிலக்கு!வடமராட்சியில் 50வது பிறந்தநாள்,  மற்றும் குழந்தையை தொட்டிலிடும் நிகழ்வு மற்றும் கோயில் நிகழ்வுகள் போன்றவற்றை கட்டுப்பாடுகளை மீறி செயற்பட்ட கோயிலின் தலைவர்,  பொருளாளர் உட்பட 10 பேர் கட்டாய சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆயினும் தனது சகாக்கள் சகிதம் இந்நிகழ்விற்கு வருகை தந்திருந்த அரச அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  உள்ளிட்டவர்களிற்கு தனிமைப்படுத்தலில் விலக்களிக்கப்பட்டுள்ளது .

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்  கற்கோவளம் பகுதியில் கோவிட் கட்டுப்பாடுகளை மீறி பிறந்தநாள் மற்றும் தொட்டிலிலிடும் கொண்டாட்டங்கள் நடாந்துள்ளது. 

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சுகாதார பிரிவினர் மேற்கொண்ட பரிசோதனையின் போது கட்டுப்பாடுகளை மீறி நிகழ்வுகளை ஒழுங்கமைத்தவர்கள் இனங்காணப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை அவர்கள் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தப்பட்டுமுள்ளனர். இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.கற்கோவளம் பருத்தித்துறை  பகுதியில் இருவர் தமது 50வது பிறந்த நாள் நிகழ்வை ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் பகல் மற்றும் இரவு வேளைகளில் மக்களை ஒன்று கூட்டி பொது சுகாதார நடைமுறைகளுக்கு முரணான விதத்தில் நிகழ்வுகளை நடத்தியுள்ளனர்.குழந்தை பிறந்து முப்பத்தோராம் நாள் நிகழ்வுகளை அதிகளவான மக்களை கூட்டி நிகழ்த்தியமையும் தொடர்பாக இனங்காணப்பட்ட குறித்த குடியிருப்பவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதேபோல் மாதனைப் பகுதியில் கோவில் திருவிழா பொதுமக்களை ஒன்று கூட்டி நடாத்தப்படக் கூடாது என பொது சுகாதார பரிசோதகர்களால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்ட போதும் அதனை மீறி அதிகளவான மக்கள் ஒன்றுகூடி பொங்கல் நிகழ்வுகளை நடத்தியமை நேரடி பரிசோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டது. இதனடிப்படையில் கோயில் நிர்வாகத்திற்கு பொறுப்பான தலைவர் மற்றும் பொருளாளர் ஆகியோர் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி மக்களை ஒன்று திரட்டிய குற்றத்திற்காக சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். தற்போது நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் அது சமூகத் தொற்றாக மாறி இருக்கின்ற நிலையில் இவ்வாறு அதிகளவான மக்களை ஒன்று கூட்டி நிகழ்வுகளை நடத்துவது சமூகத்தை மிகப்பெரிய ஆபத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால் பொதுமக்கள் சமூக அக்கறையுடன் செயற்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


No comments