நம்பிக்கை என்று கூறவே நம்பிக்கை வருகுதில்லை! பனங்காட்டான்


அரசியல் என்றாலும் சொந்த வாழ்க்கை என்றாலும் எல்லாமே நம்பிக்கையில்தான் தங்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் மாநிலமான தமிழ்நாட்டிலும் எவர்தான் பதவிக்கு வந்தாலும் அவர்களை நம்பியே இருப்பை இழந்து வருபவர்கள் ஈழத்தமிழர்கள். இதனால் இப்போது இவர்கள்மீது நம்பிக்கை வைக்கலாமென கூறவே நம்பிக்கை வருகுதில்லை. என்ன செய்யலாம்!

இந்தியாவில் ரொக்கட் வேகத்தில் அதிகரித்துச் செல்லும் கொரோனா பேரிடரின் பாதிப்பு நினைத்துப் பார்க்க முடியாதது. நாளொன்றுக்கு எத்தனை மனிதரென்று சரியான எண்ணிக்கை இறுதிவரை வராமலே போகலாம். 

அமெரிக்கா, கனடா, பிரித்தானியா போன்ற மனிதாபிமான நாடுகள் தாராளமாக இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. ஆனால் இந்த உதவிகள் அந்நாடு சந்திக்கும் சவாலுக்கு அவல் பொரி போன்றது. 

இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தால் அதற்கு அயலிலுள்ள குட்டித்தீவான இலங்கை எதிர்பார்க்கப்பட்ட சோதனை வலயமாகியுள்ளது. அரசியல், சாதி, மத, இன பேதமின்றி இந்நோய் இங்குள்ளவர்களை ஒட்டுமொத்தமாக தாக்க ஆரம்பித்துள்ளது. 

சில மாதங்களுக்கு முன்னர் நோய்த்தடுப்பில் முன்னணி வகுத்ததாக உலக சுகாதார நிறுவனத்தினால் பாராட்டுப் பெற்ற இலங்கையில் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. தடுப்பூசிக்குள்ளும் அரசியல் கலப்பு ஊடுருவியுள்ளது. 

ஒருபுறத்தில் இலங்கையையும் இந்தியாவையும் கொரோனா பிய்த்தெறிந்து வருகின்ற போதிலும், இங்கு அரசியல் விளையாட்டுகளுக்குப் பஞ்சமில்லை. இப்போதைக்கு இந்தியாவை மட்டும் பார்ப்போம். அங்குள்ள ஐந்து மாநிலங்களில் கடந்த மாதம் இடம்பெற்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியானதையடுத்து அதுவே இப்போது பிரதான பேச்சுக் களமாகியுள்ளது. 

இந்தியாவை ஆட்சி புரியும் மோடியின் பாரதிய ஜனதா கட்சி, மூன்று மாநிலங்களின் நேரடி மோதலில் குப்புற சரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரணமல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மமதா பனர்ஜியிடம் மோடி கற்றுக் கொண்ட பாடம் அவரது வரலாற்றில் மிகையான பதிவுக்குரியது. 

மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள பனர்ஜி மூன்றாம் தடவையாகவும் முதலமைச்சராகியுள்ளார். விரைவில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தல் ஒன்றில் இவர் பெறப்போகும் வெற்றி, மோடியை தலைநிமிர்த்த முடியாமல் செய்யுமென நம்பலாம். 

தமிழ் நாட்டில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்க்கப்பட்டவாறும், கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டவாறும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  வெள்ளிக்கிழமை 7ம் திகதி ஸ்டாலின் முதன்முறையாக - குடும்ப வாரிசு என்ற நாமத்துடன் முதலமைச்சராக பதவி ஏற்றார். இவரது கன்னி அமைச்சரவையில் இரண்டு பெண்கள் உட்பட 34 பேர் இடம்பெற்றுள்ளனர். 

இவர்களுள் இருபதுக்கும் அதிகமானோர் பழைய முகங்கள். சுமார் பத்து வரையானோர் முதன்முறை வெற்றி பெற்றவர்கள். தி.மு.க. இளைஞரணித் தலைவரான தமது மகன் உதயநிதிக்கு அமைச்சரவையில் ஸ்டாலின் இடம் கொடுக்கவில்லை. எடுத்த எடுப்பிலேயே அமைச்சரவையில் சேர்த்துவிட்டால் வாரிசு அமைச்சர் என்ற பெயர் வந்துவிடலாமென அவர் நினைப்பது தெரிகிறது. எனவே சில வருடங்களின் பின்னர் (சிலவேளை சில மாதங்களில்) அமைச்சரவையில் மாற்றம் ஒன்றைச் செய்யும்போது அமைதியாக அமைச்சராக்கும் தந்திரம் ஸ்டாலினுக்கு பரம்பரையாக வரக்கூடிய கலை. மு.க.வின் மகன் அல்லவா?

கோபாலபுரத்தில் தாயாரின் பால் மட்டும் குடித்து ஸ்டாலின் அரசியலுக்கு வரவில்லை. தந்தையான கலைஞரின் கரம் பற்றி அவர் தோளில் தொங்கிய சால்வையைப் பிடித்து பாதம் பதித்தவர் என்பதை மறந்துவிடக்கூடாது. 

தி.மு.க.வின் வெற்றிக்கு முதலில் வாழ்த்துக் கூறியவர் பிரதமர் மோடி. ஒன்றிணைந்து பணியாற்றுவோம், கொரோனாவை ஒழிக்க செயற்படுவோம் என்றவாறு இவரது வாழ்த்து இருந்தது. தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுமென்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துச் செய்தி தயாராக இருப்பதாகவும் மோடி தரப்பிலிருந்து தேர்தல் முடிவு வெளிவருவதற்கு முதல் நாள் அறிவிக்கப்பட்டது. ஆனால், வாழ்த்து வந்தது ஸ்டாலினுக்கு. இருவருக்குமே மோடியின் வாழ்த்துச் செய்தி தயாராக இருந்திருக்கிறது. ஸ்டாலின் வென்றதால் அவருக்குக் கிடைத்தது. 

அடுத்த கடிதம் சில நாட்களில் ஸ்டாலினுக்கு மோடியிடமிருந்து வரக்கூடும். அதன் பின்னரே அரசியல் சடுகுடு ஆட்டம் அங்கு ஆரம்பமாகும். ஸ்டாலின் இணைய (அடங்க) மறுத்தால் கலைஞர் ஆட்சியும், எம்.ஜி.ஆர். ஆட்சியும் முன்னைய ஆட்சித் தரப்புகளால் கலைக்கப்பட்ட வரலாறு அவருக்கு நினைவூட்டப்படலாம். இப்படி இடம்பெறவில்லையென்றால், அது இந்திய அரசியலாக முடியாது. 

பிரதமர் மோடி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூற முன்வந்தது போன்று இலங்கையின் ஆட்சியாளர்களான அண்ணனுக்கும் தம்பிக்கும் இன்னமும் மனசு வரவில்லை. தி.மு.க.வுக்கு வாழ்த்துக் கூறினால் தங்களை ஆட்சிக் கதிரைக்குக் கொண்டுவந்த சிங்கள மகாஜனங்கள் கோபம் கொள்வார்களென நினைக்கிறார்கள் போலும். 

தமிழ்நாடு இலங்கையைவிட எல்லா வகையிலும் மூன்று மடங்கு பெரிதானது. இலங்கையின் துணைத் தூதரகமொன்று தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இயங்குகிறது. அந்த வகையில் மோடி சம்பிரதாயத்துக்கு வாழ்த்துக் கூறியதுபோல ராஜபக்சக்களும் செய்திருக்கலாம். ஆனால், அந்த எண்ணம் அவர்களுக்கு இன்னமும் வரவில்லை. 

அதனாலென்ன, பரவாயில்லை! இலங்கை அரசியலின் முக்கியமான தமிழ்த் தலைவர்கள் விரைந்து விழுந்து விழுந்து தங்கள் வாழ்த்தை அனுப்பி அரும்பெரும் சாதனைகள் புரிந்துள்ளனர். அதுவும் ஒரு வீட்டுக்குள்ளிருந்தே அரை டசினுக்கும் மேலான தனித்தனி வாழ்த்துகள். இவற்றுள் சிலவற்றை மட்டும் இங்கு பார்க்கலாம்.......

தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா: ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமைவதால் தமிழினம் விடுதலை பெறக்கூடிய வாய்ப்புண்டு (ஆரூடம்).

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன்: தொடர்ச்சியான இனவழிப்புக்கு நீதியையும், ஈழத்தமிழர்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரவும் தமிழகத்திலிருந்து ஸ்டாலின் தலைமையில் வலுவான குரல் ஒலிக்குமென நம்பிக்கை கொள்கிறோம் (பொறுத்திருப்போம்).

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்: உலகவாழ் தமிழ் மக்களுக்கு தலைவராக ஸ்டாலின் இயங்கி வழிகாட்ட வேண்டும் (கலைஞரும் உலகத் தமிழர் தலைவராக இருந்தவரல்லவா?). 

புளொட் இயக்கத் தலைவர் சித்தார்த்தன்: தமிழ் மக்கள் பிரச்சனையைத் தீர்க்க இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தீர்ப்பு பெற்றுத் தர வேண்டும் (மோடிக்கு பாலர் வகுப்பு நடத்த வேண்டுமா?). 

ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன்: இலங்கைத் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி உதவ வேண்டும் (எடுப்பார் கைப்பிள்ளையின்  கோரிக்கை). 

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி: உங்கள் தந்தை கலைஞரின் பணியை தொடருங்கள் (மீண்டும் அதே உண்ணாவிரதமா?). 

தமிழர் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்: இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த தமிழர் பிரச்சனையை தீர்ப்பதற்கு ஸ்டாலின் அரசு முன்வர வேண்டும் (இலங்கைக்கான பொதுவான வேண்டுகோள்). 

மலையக மக்கள் முன்னணித் தலைவர் வே. இராதாகிருஸ்ணன்: இலங்கைத் தமிழர் இனப்பிரச்சனைக்கு ஸ்டாலின் உதவ வேண்டும் (மத்திய அரசுடன் மோதும் பலம் இவருக்கு உண்டா?)

இவர்களைத் தவிர கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன் ஆகியோரும் தங்கள் பங்கை வாழ்த்தாக நிறைவேற்றியுள்ளனர். கூட்டமைப்பின் தோழர்களான ஒவ்வொருவரும் தனித்தனியாக வாழ்த்துக் கூறியபோதிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அமைதி காக்கிறார். நேரில் சென்று ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கூற அவர் விரும்புவதாக ஒரு தகவல். இவரது அறிக்கை எழுத்தாளரான, கனடாவிலிருந்து பதவி எதிர்பார்த்து சென்ற குகதாசனின் ஒத்துழையாமையே வாழ்த்துச் செய்தி  வெளிவராததற்குக் காரணமென இன்னொரு தகவல். எது சரியோ?

இத்தனைபேர் தாயகத்திலிருந்து வாழ்த்துத் தெரிவித்தும் ஒன்றை மட்டுமே தி.மு.க.வின் முரசொலி பத்திரிகை பிரசுரித்துள்ளது. அது சி.வி. விக்னேஸ்வரனுடையது. எந்த அடிப்படையில் இந்த தெரிவு இடம்பெற்றது என்று தெரியவில்லை. வாழ்த்தின் விடயதானமா, உள்ளடக்க நிதானமா, சட்டமும் நீதியும் அறிந்தவர் என்ற வல்லாண்மையா அல்லது வடமாகாண முன்னாள் முதலமைச்சர் என்ற தகுதியா?

இதனூடாக முக்கிய பொறுப்பொன்று விக்னேஸ்வரன் அவர்களிடம் விடப்பட்டிருப்பது தெரிகிறது. அதாவது, தாமதமின்றி தமிழகம் சென்று ஸ்டாலினை நேரடியாகச் சந்தித்து தாயக மக்களினதும், தமிழகத்திலுள்ள ஈழ அகதிகளதும் நிலைவரத்தை நேரடியாக தெரிவிக்க வேண்டும். 

ஈ.பி.டி.பி. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், யாழ் மாவட்ட எம்.பி. அங்கஜன் ராமநாதன் ஆகியோரும் தங்கள் வாழ்த்தினை ஸ்டாலினுக்கு அனுப்பியிருக்கிறார்கள். கனடாவிலிருந்தும் சில முன்னாள் பிரமுகர்கள் தம்பாட்டுக்கு அறிவாலய முகவரி தேடி கடிதம் எழுதியுள்ளனர். (இது அவர்களின் தனிப்பட்ட தேவைக்கானது).

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமாரின் வாழ்த்து இதுவரை வெளிவரவில்லை. பொதுவாக இவ்வாறான அறிக்கைகளில் இவர் மிகவும் கம்மி. எதிலும் அவசரப்படக்கூடாது என்ற கொள்கை வழியானதாக இருக்கலாம். 

மறுபுறத்தில், தமிழக புதிய முதலமைச்சர் ஸ்டாலின் ஈழத் தமிழர் விவகாரத்தில் தமது நல்லெண்ணத்தை எவ்வாறு வெளிப்படுத்தப் போகிறாரென்று அறிவதற்கு பலரும் ஆவலோடு காத்துள்ளனர். இதற்கான முதல் அறிகுறியாக ஆகக்குறைந்தது அந்த ஏழு பேரையும் சட்டப்படி அவர் விடுதலை செய்யலாமல்லவா? செய்வாரா? 

தேர்தலின்போது ஈழத்தமிழர் பற்றி சீமான் தரப்பினரைத் தவிர வேறு எவருமே மறந்தும் வாய் திறக்கவில்லை. பதவிச் சுகத்தில் இன்பம் துய்க்கும் தமிழகத்தில் ஆட்சித் தரப்பு, கட்சிகள் தரப்பு, அரச அதிகாரிகள் தரப்பு, வாக்காளர் தரப்பு என்பவை ஒன்றிணையாத நான்கு துருவங்களாக இருக்கும்வரை ஈழத்தமிழர் பற்றி எவராவது சிந்திக்க இடமுண்டா?

எதிலும் நம்பிக்கை வையுங்கள், நம்பிக்கை வைத்தால் நல்லது நடைபெறுமென்று பிரித்தானிய தமிழ் வானொலி ஒன்றின் நிகழ்ச்சித் தயாரிப்பு நண்பர் ஒருவர் கடந்த வாரம் என்னிடம் கூறினார்.

அதற்கு நான் கூறிய பதில்: நம்பிக்கை என்று சொல்லவே நம்பிக்கை வருகுதில்லையே என்பது. ஏனென்றால், இது அரசியல்...... இது இந்திய அரசியல்!

No comments