உணக்வுக்கா கூரையை உடைத்து யானை

உணவுக்காக அதிகாலையில் கூரையை பெயர்த்து யானை அட்டகாசம் செய்துள்ளது. இச்சம்பவம் நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3

மணியளவில் இடம் பெற்றுள்ளது

பொத்துவிலையடுத்துள்ள கோமாரிப்பிரிவிலுள்ள செல்வபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. அதேவேளை கோமாரி பிரதேசத்தில் மரவள்ளி மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக இடம் பெற்று வரும் யானைத்தாக்கத்தால் கோமாரிக்கிராமமே அச்சத்தில் மூழ்கியுள்ளது.

அங்கு புகுந்த காட்டு யானைகள் சின்னதம்பி செல்வராசா என்ற குடும்பஸ்தரைத் தாக்கிவிட்டு அவரது வீட்டின் கூரையை உடைத்து உள்ளிருந்த நெல், அரிசி, பச்சை இலைக்கறிகளை உண்டது. வீட்டையும் துவம்சம் செய்தது. நித்திரையிலிருந்த செல்வராசா என்ற குடும்பஸ்தர் ஓடி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அத்துடன் நின்றுவிடாது அருகிலுள்ள மரவள்ளிமரங்களையும், பயிர்பச்சைகளையும் சேதப்படுத்தியுள்ளது. இவ்வாறு சேதமாக்குவதால் கிழங்கு பெரிதாக முன்னரே நேற்று அவற்றைப்பிடுங்கி வீதிகளில் விற்பனை செய்வதைக் காணக்கூடியதாயிருந்தது.

இது தொடர்பாக த.தே.கூட்டமைப்பின் பொத்துவில் பிரதேசசபை உறுப்பினர் த.சுபோதரன் நேரில் சென்று பார்வையிட்டு சேதவிபரத்தை கிராம சேவை உத்தியோகத்தரிடம் அறிவித்துள்ளார். கூடவே கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் ஜோய் நோக்கிரட்டும் சென்றுள்ளார்.

உறுப்பினர் த.சுபோதரன் இது விடயத்தை லாகுகலையிலுள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார். 

இதற்கு முன்னரும் இவ்வாறு பலதடவைகள் அவர்களிடம் தெரிவித்தபோதிலும் அவர்கள் வந்து பார்ப்பதில்லை  என பொதுமக்களும் உறுப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

அதேவேளை கிராமசேவை உத்தியோகத்தர் மேல் நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட அக் குடும்பம் நிர்க்கதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments