இங்கிலாந்தில் ஊரடங்கு மேலும் நீட்டிக்க வாய்ப்பு - பிரதமர்


இங்கிலாந்தில் பி.1.617.2 என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று அங்கு பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் சரியாக மேற்கொண்டால், இங்கிலாந்தில் ஜூன் 21-ம் திகதியோடு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் முடிவுக்கு வரும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது பரவி வரும் உருமாறிய கொரோனா தொற்றால் ஊரடங்கை தளர்த்துவதற்கு மேலும் சில காலம் காத்திருக்க வேண்டிய நிலை வரலாம் என போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் பணி மிகப்பெரிய அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறுகையில், 

தற்போது உள்ள நிலவரப்படி ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாது. உருமாறிய கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் கொரோனா பரவல் விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 

No comments