கொரோனாவின் தோற்றம்! விசாரணைக்கு உத்தரவு!


கொரோனாவின் ஆய்வக-கசிவு கோட்பாடு குறித்து விசாரிக்க அமெரிக்க அதிபர் பிடென் மீண்டும் உத்தரவிட்டுள்ள நிலையில், சீனா கோபமடைந்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் முதன்முதலில் ஒரு விலங்கு மூலத்திலிருந்து தோன்றியதா அல்லது ஆய்வக விபத்தில் இருந்து வெளிவந்ததா என்பது குறித்து அடுத்த மூன்று மாதங்களில் தனக்கு அறிக்கை அளிக்குமாறு ஜனாதிபதி பிடென் அமெரிக்க புலனாய்வு அமைப்புகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வக-கசிவு கோட்பாடு, ஆரம்பத்தில் சீனாவாலும் உலக சுகாதார அமைப்பாலும் மிகவும் சாத்தியமில்லை என்று நிராகரிக்கப்பட்டது. எனினும் முந்தைய டிரம்ப் நிர்வாகம் இதை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், தற்போது பிடென் நிர்வாகமும் கையிலெடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வுஹானில் உள்ள ஒரு வைராலஜி ஆய்வகத்தில் இருந்து வைரஸ் தோன்றியிருக்கலாம் என்ற கோட்பாட்டை சீனா முற்றிலுமாக நிராகரிக்கிறது. அதற்கு பதிலாக அமெரிக்கா சதித்திட்டங்களைத் தூண்டுவதாகவும், அங்குள்ள அதிக இறப்பு விகிதங்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப தொற்றுநோயை அரசியலாக்குவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

தொற்றுநோய் குறித்து புதிய விசாரணையின் அவசியத்தை நிராகரித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், பிடென் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

“அமெரிக்க உளவுத்துறை சமூகத்தின் இருண்ட வரலாறு நீண்ட காலமாக உலகிற்கு அறியப்படுகிறது.” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் மேலும் கூறினார். அமெரிக்காவின் பேரழிவு ஆயுதங்கள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை குறிப்பிடுகையில், அது ஈராக் மீதான படையெடுப்பை நியாயப்படுத்தியது என அவர் மேலும் கூறினார்.

No comments