பிரான்சில் முதல்வருடன் தமிழர் கட்டமைப்பின் மற்றுமொரு வரலாற்றுச் சந்திப்பு


பிரான்சின் புறநகர்ப்பகுதியில் ஒன்றானதும், தமிழ்மக்களும் அதிகம் வாழும் ஒரு நகரமாகிய ஒபவில்லியே (Ville de Aubervilliers) மாநகர முதல்வருடன் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழர் கட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்திப்பு ஒன்றை செய்திருந்தனர்.

29.05.2021 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு ஒபவில்லியே மாநகரசபை மண்டபத்தில் முதல்வரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம் பெற்றது. மாநகர முதல்வர் Mme. Karine Francle அவர்கள் இவர் 2e vice-présidente de Plaine Commune en charge du Développement économique, Conseillère métropolitaine பொறுப்பாகவும் இருந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் Monsieur Benjamin  LLORET : Directeur-adjoint de cabinet (Ville de Aubervilliers). பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ஐீவரட்ணம் ராசு அவர்கள் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினர் இளையவர் செல்வன். தவராசா சஞ்ஐித் அவர்களுடன் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ்சங்கங்களின் கூட்டமைப்பின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் திரு. பாலகுமாரன் அவர்கள், தமிழீழ மக்கள் பேரவையின் உறுப்பினர், தமிழ் இளையோர் அமைப்பின் பொறுப்பாளர் செல்வன் . நிந்துலன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இக்கலந்துரையாடலில் தமது பிரதேசத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் பிராங்கோ தமிழ்ச்சங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும், தாய்மொழிக்கல்வி கற்றுத்தரும் தமிழ்ச்சோலையின் செயற்பாடுகள் பற்றியும் ஆர்வத்துடன் முதல்வர் அறிந்து கொண்டனர். தமிழ் இளையோர் அமைப்பினரும், மக்கள் பேரைவயினரும் ஈழத்தமிழ் மக்களின் புலம்பெயர் வாழ்வின் காரணத்தை தெரிவித்ததோடு இலங்கைத்தீவில் ஆங்கிலேயர் காலத்தில் சுதந்திரம் கொடுத்த நேரத்திலிருந்து இன்று வரை தமிழ்மக்கள் சிங்கள தேசத்தினால் புறக்கணிக்கப்பட்டதும் தமிழின இனஅழிப்பை சிங்கள  பௌத்த தேசம் இனக்கலவரங்கள் மூலம் மேற்கொண்டதையும், அதிலிருந்து உயிர் தப்புவதற்காக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப்போராடியதும் அது எவ்வாறு 2009 ல் அழிக்கப்பட்டதும், இதில் பல இலட்சம் தமிழீழ மக்கள் கொல்லப்பட்டதும்,  ஆனால் தமிழ்மக்கள் தமது போராட்டத்தை அரசியல் ரீதியாக உலகத்தின் முன் வைத்திருப்பதையும், 2009 ல் இலட்சக்கணக்கான தமிழீழ மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும், 70 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதையும், புலத்தில் தமிழ் மக்களால் அரசியல் சனநாயகப் போராட்டங்கள் பற்றியும்,  ஐ. நாடுகளின் 46 ஆவது கூட்டத்தொடர்த் தீர்மானங்கள் பற்றியும் ஆதாரத்துடன் விவரணமாக கணனித்திரையில் காட்சிப்படுத்தியிருந்தனர். 

சர்வதேசத்திலும், ஐரோப்பிய நாடுகளிலும், பிரான்சிலும் தாய் கட்டமைப்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவும், அதன் கீழ் அனைத்துத் தேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் உப கட்டமைப்புகளின் செயற்பாடுகள் பற்றியும் அவர் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தார். தமிழ் மக்கள் வளர்ந்து வரும் தமது அடுத்த தலைமுறைமீதும், கல்வியிலும், தாய்மொழியிலும் கொண்டுள்ள  அக்கறையை தான் பாராட்டுவதோடு தமிழ்ச்சோலை (தமிழ்ப்பாடசாலை) நடாத்துவதற்கு தான் நிரந்தரமாக ஒரு இடத்தை பிராங்கோ தமிழச்சங்கத்திற்கு வழங்குவதாகவும் உறுதியளித்திருந்தார். 

அரசியல் ரீதியாக பிரான்சில் ஏனைய மாநகரங்களில் தமிழீழ தேசத்துக்காகவும், தமிழின அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டிக்கொண்டு வரப்பட்ட தீர்மானங்களின் எழுத்து மூலமான பிரதிகள் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. அனைத்தை ஆர்வத்துடன் வாசித்துப்பார்த்த முதல்வர் தமிழ் மக்களின் இக்கோரிக்கையை முன்கொண்டுவர தானும் முயற்ச்சிப்பதாகவும் கூறியிருந்தார். 

இப்பிரதேசத்தில் இருந்த பிரெஞ்சு அரசியல் நிலைப்பாடுகள் நீண்ட காலமாக அரசியல் ரீதியான சந்திப்புக்களை மேற்கொள்ளும் வாய்ப்பை தமிழர் தரப்பிலும், பிராங்கோ தமிச்சங்கத்தினருக்கு ஏற்படாத போதும் முடிந்தளவு தாய்மொழிக் கல்வியை தமிழ்ச்சோலை மூலமாக நடாத்திக் கொண்டே வந்திருந்தனர். கடந்த 2020 மார்ச் மாதம் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்ப்பெண் இளையவர் ஒருவர் எதிர்க்கட்சியில் போட்டியிட வாய்ப்பும் அளித்திருந்தனர். இம்மாநகரத்திலேயே மாவீரர் லெப். கேணல் நாதன், கப்டன் கஐன், கேணல் பரிதி ஆகிய மாவீரர்களின் துயிலுமில்லம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பு முதல்வர் உட்பட தமிழர் தரப்பிலும் நல்லதொரு ஆரோக்கிமான மனநிறைவைத் தருகின்ற சந்திப்பாக அமைந்திருந்ததாக அனைவராலும் கொள்ளப்பட்டது.

No comments