கைது: புதிய புலிகள் முகநூலிலாம்!


சமூக ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை வெளியிடுபவர்களை முடக்குவதில் இலங்கை அரசு மும்முரமாகியுள்ளது.

ஏற்கனவே மட்டக்களப்பில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட ஊடகவியலாளர் ஒருவரை கைது செய்துள்ள இலங்கை காவல்துறை தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட மற்றும் ஒருவரை நேற்று(02) கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏறாவூர் – செங்கலடி பகுதியில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

சமூக ஊடகங்களை பயன்படுத்தி சந்தேகநபர், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் – செங்கலடி பகுதியைச் சேர்ந்த 56 வயதான நவனீதன் பிள்ளை மோகன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் கூறினார்.

சந்தேக நபரிடம் இருந்து ஐ.பேட் மற்றும் ஐ-போன் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


No comments