தடை தாண்டி அன்னை பூபதிக்கு நினைவஞ்சலி!தடை தாண்டி மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அன்னை பூபதியின் சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

அன்னை பூபதி யின் நினைவு தினத்தை அவரது சமாதிக்கு சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி  மட்டு. ஊடக அமையத்தில் நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.  

இந்நிலையில் அச்சுறுத்தல்களை மீறி மட்டக்களப்பு நாவலடி பகுதியில் அமைந்துள்ள அன்னைபூபதியின் சமாதியில் நினைவஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.  

மட்டக்களப்பை சேர்ந்த அன்னைபூபதி 1932ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் திகதி பிறந்தார். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளராவர். 

இந்திய அமைதிப்படைக்கும் , விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற கால பகுதியில் , போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் , புலிகளுடன் பேச்சு நடாத்தி தீர்வு காணவேண்டும் என இரண்டம்ச கோரிக்கையை முன் வைத்து 1988ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வர் ஆலயத்திற்கு முன்பாக நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்தார். 

அவரது போராட்டத்தை முடக்க இந்திய இராணுவம் பல வழிகளில் முயற்சித்தது. உண்ணாவிரதத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் , அன்னை பூபதியின் பிள்ளைகள் என சிலரை கைது செய்தனர். ஆனாலும் அவர் போராட்டத்தை கைவிடாது உறுதியாக முன்னெடுத்தார். 

அவரது கோரிக்கைகள் எதுவும் ஏற்றுக்கொள்ளபடாத நிலையில் போராட்டத்தை ஆரம்பித்து 31ஆவது நாளான 1988ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி உயிர் நீத்தார். 

No comments