புதுவருடம்:யாழ்.நகரை திறக்க அழுத்தம்!யாழில் கொரோனா சமூகமயமாகியுள்ள நிலையில் அதனை புறந்தள்ளி புதுவருடத்திற்கு கடைகளை திறக்க அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவருகின்றது.

கடந்த 26ஆம் திகதி முதல் யாழ்.நகர் பகுதி மற்றும் நவீன சந்தை கட்டட தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 

அதனால் பண்டிகை கால வியாபாரங்கள் இல்லாமையால் வர்த்தகர்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர் நோக்குவதனால் , வர்த்தக நிலையங்களை மீள திறக்க அனுமதிக்க வேண்டும் என வர்த்தக சங்கம் கோரி உள்ளது.  அதனை அடுத்து, பிசிஆர் பரிசோதனைகளில்தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை நாளை காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார். 

அத்துடன் யாழ் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை  ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும், தற்போது காணப்படும் அபாய நிலை இன்னும் நீங்கவில்லையாதலால் பொது மக்களது ஒன்று கூடலை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

 

இதனிடையே யாழில் மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 


யாழ்.நவீன சந்தை கட்டட தொகுதி வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , பணியாளர்கள் 460 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகள் முல்லேரியா ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் 54 பேருக்கு தொற்று உறுதியாகியள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். 


அதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 702 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவற்றின் முடிவுகள் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியாகி இருந்தன அதில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.No comments