அம்பிகாவின் போராட்டத்திற்கு தமிழர்கள் ஆதரவு வழங்க வேண்டும் - பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு


திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்களின் சாத்வீகப்போராட்டமும், தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோரிக்கை அடையும் வரையிலான சுழற்சி முறையிலான உண்ணா மறுப்புப் போராட்டமும் எம்மினத்தின் நீதியை கேட்கும் உன்னத அர்ப்பணிப்புமிக்க முன்னெடுப்புக்களாகும் என்று பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு இன்று 10.03.2021 புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின் முழுவடிவம் வருமாறு:-

“ அன்று தொட்டு இன்று வரை தமிழரின் போராட்டம் அறவழியைத் தழுவியே நிற்கின்றது. அகிம்சை வழியிலும் சரி, ஆயுத வழியிலும் சரி தமிழர்கள் வரித்துக் கொண்ட போராட்டம் தர்மத்தின் நியமத்தில் நெறிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்தத் தார்மீக அடிப்படையே எமது போராட்டத்தின் ஆன்மீக பலமாகவும் இருந்து வருகின்றது ’’ – தமிழீழத் தேசியத்தலைவர் – சிந்தனை

10.03.2021

பிரித்தானியாவில் தனது கோரிக்கை நிறைவேறும் வரை உணவு தவிர்ப்புப் போராட்டத்தை பெப்.27 ஆம் நாள் முதல் ஆரம்பித்திருக்கும் திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்கள் உலகத்தமிழர்களிடம் விடுத்திருக்கும் வேண்டுகோள்!

4 அம்சக்கோரிக்கைகளை முன்னிறுத்தி சர்வதேசத்திடம் ஈழத்தமிழ்மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தொடரும் தனது அகிம்சை ரீதியான உண்ணா மறுப்பு சாத்வீகப் போராட்டத்திற்கு உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் தங்கள் பரிபூரணமான ஆதரவை நல்க வேண்டும் என்பதே!

திருமதி அம்பிகா செல்வக்குமார் அவர்களின் சாத்வீகப்போராட்டமும், தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோரிக்கை அடையும் வரையிலான சுழற்சி முறையிலான உண்ணா மறுப்புப் போராட்டமும் எம்மினத்தின் நீதியை கேட்கும் உன்னத அர்ப்பணிப்புமிக்க முன்னெடுப்புக்களாகும். இலட்சிய வழியில் கொண்ட கொள்கையில் குன்றிடாது நடாத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும், முன்னெடுப்புகளுக்கும் உலகெங்கும் வாழும் தமிழீழ மக்கள் ஒன்றுபட்ட சக்தியாக அணிதிரள வேண்டும்.

உணர்வோடும், நம்பிக்கையோடும், தேசவிடுதலைப், பற்றுறுதியோடும் வாழும் பிரான்சு வாழ் தமிழீழ மக்களாகிய நாம் ஒன்றிணைந்து உலகநீதியின் முன் தொடர்ந்து நியாயம் கேட்டு நிற்போம் வாருங்கள்.

தாயகத் தமிழ் மக்களோடு உலகத்தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைவோடு பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் நாமும் இணைந்து கொள்வோம்; வலிமை சேர்ப்போம். 

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு


No comments