இலங்கைக்கு எதிரான தீர்மானம்! தேர்தல் பிரச்சாரமாக முழங்கும் நாம்தமிழர்;


தமிழகத்தில் தேர்தலில் இலங்கைப் பிரச்சினை, தேர்தல் முடிவுகளை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியப் பிரச்சினையாக 1991 தேர்தலைத் தவிர (ராஜீவ் படுகொலை) இருந்ததில்லை என்றபோதும், எப்போதுமே முக்கியமான விவாதப் பொருளாக இருந்திருக்கிறது.

அந்த வகையில் இந்தத் தேர்தலிலும் தற்போது ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் தீர்மானம் பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிராக ஐ.நா மனித உரிமை அவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் வெற்றியடைந்துள்ளது. ஆனால், அந்தத் தீர்மானத்தில் இந்தியா பங்கேற்காமல் வெளிநடப்பு செய்திருக்கிறது.

இலங்கையில் அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே, 2009-ல் நடந்த இறுதிக் கட்ட போரின்போது, மனித உரிமைகள் மீறப்பட்டதாக பல்வேறு வகைகளில் புகார்கள் எழுந்தன.

“ தமிழ் குழந்தைகள், பெண்கள் கொத்துக் கொத்தாக கிளஸ்டர் குண்டுகள் வீசி கொல்லப்பட்டனர். நோ வார் சோன் எனப்படும் போர் அல்லாத பகுதிகள் மீதும் குண்டுகள் வீசப்பட்டன. செஞ்சோலை எனப்படும் ஆதரவற்ற குழந்தைகள் விடுதி மீது குண்டுகள் வீசப்பட்டன” என்றெல்லாம் கடுமையான புகார்கள் இலங்கை அரசுக்கு எதிராக எழுந்தன.

இவை தொடர்பாக, இலங்கைக்கு எதிராக இனப் படுகொலை விசாரணை நடத்தப்பட வேண்டும் என, ஐ.நா.,மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இலங்கை அரசு எடுத்த பல்வேறு உலகளாவிய முயற்சிகள் மூலம் 2012, 14 ஆண்டுகளில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையில் தோல்வி அடைந்தன. அந்த வகையில் இந்த ஆண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டத்தில் இலங்கையின் மனித உரிமைகள் மீதான புகார்கள் பற்றி விசாரிக்க வேண்டி பிரிட்டன், ஜெர்மனி, கனடா உள்ளிட்ட பல நாடுகள் ஒரு தீர்மானம் கொண்டு வந்தன.

இந்தத் தீர்மானத்தின் வாக்கெடுப்பு இன்று (மார்ச் 23) நடைபெற்ற நிலையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும் எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்துள்ளன. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாஜகவின் கூட்டணிக் கட்சியான அதிமுக உள்பட தமிழகத்தில் இருந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்த நிலையில், இந்தத் தீர்மானத்தின் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் வெளிநடப்பு செய்துவிட்டது இந்தியா.

இலங்கைக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான்,கியூபா உள்ளிட்ட நாடுகள் வாக்களித்துள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. ஒரு இலட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009 தொடக்கத்தில், தமிழர்களை பட்டினி போட்டு கொன்றது இலங்கை அரசு.

இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார்.

அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்புச் செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும். தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்புச் செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப்போட்டு இருப்பார்கள்”என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

2009, 2012, 2013, 2014 ஆகிய நான்கு முறை நடைபெற்ற வாக்கெடுப்பில் இந்தியா மூன்று முறை மட்டுமே வாக்களித்துள்ளது. 2014ஆம் ஆண்டு வாக்களிக்கவில்லை. தற்போது நடைபெற்ற வாக்கெடுப்பிலும் இந்தியா பங்கேற்கவில்லை. இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் பாஜக அரசுக்கு எதிரக கடும் கண்டனங்கள் எழுந்து ஈழப் பிரச்சனை இப்போது மீண்டும் விஸ்பரூபம் எடுத்துள்ளது , அதுவும் கூடுதலா தமிழ்தேசியம் பேசும் நாம்தமிழர் கட்சி இதனை தங்கள் அரசியல் பிரச்சரகமாகவும் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments