ஜெனிவா அரசியலில் ஈழத்தமிழர் அறிவியல்! பனங்காட்டான்


இனநாயக நாடாக மாறியுள்ள ஒரு நாட்டைப் பாதுகாக்கும் நோக்குடன் மனித உரிமைகள் பேரவையின் நாடுகள் தொடர்ந்து இயங்குகின்றன. பொறுப்புக்கூறலுக்கும், நீதிப் பொறிமுறைக்கும் கால நீடிப்புத்தான் இவர்களின் தீர்ப்பு என்றால் மனித உரிமைகள் பேரவை என்பதன் பெயரே கேள்விக்குரியதாகின்றது. சர்வதேச அரசியலில் ஈழத்தமிழரின் அறிவியலுக்கு எப்போது நீதி கிடைக்கும்?  

பெரும்பாலான தமிழர் மத்தியில் இன்று எழுந்திருக்கும் முக்கியமான கேள்வி, ஜெனிவாவில் இம்முiறை என்ன நடைபெறும் என்பதே. ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ளும்போதும் இதே கேள்விதான் எழுகிறது. 

ஒரு வார்த்தையில் பதில் சொல்வதானால், சத்திரசிகிச்சை வெற்றி - நோயாளி படுக்கையில்.

கடந்த பல வருடங்களாக ஜெனிவா அமர்வு ஆரம்பிக்கும்போது ஏதோ ஒருவகை நம்பிக்கை வெள்ளித் துருவமாக காட்சி தரும். அமர்வு முடியும்போது முன்னைய காலங்கள் போல சப்பென்றாகிவிடும். இதுதான் வரலாறு.

ஓரளவுக்கு இதையெல்லாம் முற்கூட்டியே தெரிந்து கொண்டதால்தான் இலங்கை அரசு எதற்கும் அச்சப்படாமல், எல்லாவற்றையும் தூக்கியெறிந்து பேசுவதை நடைமுறையாகக் கொண்டுள்ளது. 

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் 47 நாடுகள் கூடி, அதில் 24 நாடுகள் பெரும்பான்மையாகி, இலங்கை மீது பொறுப்புக் கூறலையும் சர்வதேச நீதி விசாரணையையும் வலியுறுத்தும் தீர்மானத்தை ஏன் எடுக்க முடியாது? இதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் அரசியல் சார்ந்த, பக்கம் சார்ந்த, பாரபட்சமான, நீதிக்குப் புறம்பான முடிவெடுக்கும் சூழல் அமைந்திருப்பதே இதற்கான முக்கிய காரணம்.

தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சிலற் அம்மையார் தமது சகல அறிக்கைகளிலும் இலங்கையின் சகல மனித உரிமை மீறல்களையும் அப்பட்டமாக எடுத்துக்கூறி, போர்க்குற்றம் புரிந்த ராணுவத்தினர் மீது எவ்வகையான தடைகளை கொண்டுவர வேண்டுமென நீதியின்பாற்பட்ட பரிந்துரைகளை முன்வைத்திருந்தார். 

இலங்கை மீதான தீர்மானத்தை சமர்ப்பித்த கூட்டுத் தலைமை நாடுகள் (பிரித்தானியா, கனடா உட்பட) இந்தப் பரிந்துரைகளை உள்வாங்கியிருந்தால் ஏதாவது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். 

ஜனநாயகப் பொதுவெளியிலுள்ள இடைவெளியை இந்த நாடுகள் சரியாகப் பயன்படுத்த முன்வரவில்லை. தாயக தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளும் அப்படித்தான். 

பேரவையின் 46வது அமர்வு கடந்த மாதம் ஆரம்பமானபோது ஏதோவொரு புள்ளியில் ஒன்றுபட்டு, மூன்று கட்சிகளின் தலைமைகளும் ஒப்பமிட்டு பேரவைக்கு கடிதம் (மகஜர்) அனுப்பினர். ஆனால், பேரவையின் இந்த அமர்வு முடிவடைவதற்கு முன்னரே அவர்கள் பிரிந்துவிட்டனர். இது, பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒட்டாது என்ற பழைய கதைதான். 

கூட்டமைப்பின் சுமந்திரன் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுகளை, அதன் தலைவரெனக்(?) கூறப்படும் சம்பந்தன் கண்களை மூடிக்கொண்டு ஆதரித்து அறிக்கை விடும் செயற்பாடு தொடர்கிறது. கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சுமந்திரனின் அறிக்கையை வாட்டியெடுத்ததுடன் இனிமேல் அவர்களுடன் கூட்டுச்சேர முடியாதென அறிவித்தது. சம்பந்தனின் அறிக்கையை கண்டித்துள்ள ரெலோவின் செல்வம் அடைக்கலநாதன், அந்த அறிக்கைக்;கும் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோவுக்கும் சம்பந்தம் இல்லையென அறிவித்துள்ளார்.

தாயக அரசியல் விமர்சகர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டவாறு, இருக்கவும் எழும்பவும் நிமிரவும் படுக்கவும் தூக்கிவிட ஒருவர் உதவிக்குத் தேவைப்படும் நிலையிலுள்ள சம்பந்தனால், எவ்வாறு நிலைதடுமாறாது தமிழரின் இனநலன்சார் விடயங்களில் தலைமை தாங்கி இயங்க முடியுமென்ற கேள்வி இப்போது பொதுவாக எல்லோரிடமும் எழுந்துள்ளது. 

இலங்கையில் தொடர்ச்சியாக பலவேறு வகையான அரசியல் போராட்டங்களை - சாத்வீக வழியாகவும் ஆயுத ரீதியாகவும் முன்னெடுத்தவர்கள் தமிழர்களே. அவ்வேளையில், மதரீதியில் தம்மைப் பிரித்துப் பார்க்கும் இஸ்லாமியர்கள் இப்போராட்டங்களை ஆதரிக்கவில்லை. மாறாக, இப்போராட்டங்களைக் காட்டிக் கொடுப்பவர்களாக, சிங்கள அரசாங்கங்களின் சுவீகார துணைப்படையாளர்களாக இயங்கி வந்தனர். ஆனால், கத்தோலிக்க மதகுருமார் அவ்வப்போது தமிழர் போராட்டங்களுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். 

இன்று உருவாகியிருக்கும் அரசியல் நிலைமை முற்றிலும் மாறானது. சிங்கள பௌத்த காவலர்களாக ராஜபக்சக்கள் தங்களை அடையாளம் காட்டுவதும், எதேச்சாதிகார தலைவராக கோதபாய ஒரு கையில் துப்பாக்கியுடன் காட்சி கொடுப்பதும், மக்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினரான பௌத்தர்கள் அல்லாதவர்களை ஒன்றுபட வைத்துள்ளது. 

ஜனநாயக சோசலிச குடியரசு என்னும் இலங்கை இப்போது இனநாயக நாடாக மாறியுள்ளதால், சிங்கள பௌத்த ஆட்சியில் நீதியைப் பெற முடியாத பௌத்தர்கள் அல்லாதவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் என்ற பொறிமுறையை கோருகின்றனர். இ;வ்வாறான ஒரு சூழ்நிலை இக்காலத்தில் வருமென ராஜபக்சக்கள் நினைத்திருக்க மாட்டார்கள். 

இவ்வாறான சாதகமான சந்தர்ப்பத்தில் இதனை சரியாகப் பயன்படுத்த முடியாத கூட்டமைப்பின் தலைமை, உப்புச் சப்பற்ற ஜெனிவா தீர்மானத்தை உறுப்பு நாடுகள் ஆதரிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுப்பதை அனுமதிக்க முடியாது. 

ஐந்தாண்டு காலம் மைத்திரி - ரணில் நல்லாட்சிக்கு முண்டு கொடுத்த கூட்டமைப்பு, இப்போது ராஜபக்சக்களின் தனியாட்சிக்கு பக்கபலமாக மாறிவருவதை இதனூடாகக் காணலாம். 

இலங்கை விவகாரத்தைக் கையிலெடுத்த ஆறு நாடுகளும் இதுவரை இரண்டு வரைபுகளை பேரவையின் முன்னால் வைத்துள்ளன. முதலில் வெளியான வரைபே, முதற்கோணல் முற்றுங்கோணலாக அமைந்தது. 2015ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையான பேரவை அமர்வுகளில் நிறைவேற்றப்பட்ட 30:1 இலக்க, 34:1 இலக்க 40:1 தீர்மானங்களின் அச்சொட்டான தொடராகவே இந்த வரைபுகளைப் பார்க்கலாம். 

இதனை எழுதிக் கொண்டிருக்கும் மார்ச் மாதம் 11ம் திகதி வியாழக்கிழமை இரண்டாவது வரைபு பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. முடிந்தால் சில திருத்தங்களை இதில் கொண்டுவர வாய்ப்புண்டு. இல்லையேல், இந்த மாத இறுதியில் இதன் மீது வாக்கெடுப்பு இடம்பெறும். 

'நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் என்பவற்றுக்கு இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை பற்றி எழுத்து மூலமான அறிக்கையை பேரவையின் 49வது அமர்வில் மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன் பொறுப்புக்கூறல் தொடர்பாக பேரவையில் விவாதிப்பதற்கு அனைத்தையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை ஆணையாளர் 51வது அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும்" என்பதே இந்த வரைபுகளின் இறுதி வாசகம். 

2022ம் ஆண்டு மார்ச் மாதம் 49வது அமர்வு இடம்பெறும். 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 51வது அமர்வு இடம்பெறும்.

அப்படியென்றால், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிப்பொறிமுறை என்பவை ஒரேயடியாக 18 மாதங்களுக்கு பின்னோக்கித் தள்ளப்படுகிறது. அதற்குப் பின்னரும் 2023, 2024 என்று செல்லுமானால், இது இலங்கை இலகுவாக தப்பிச் செல்வதற்கு வழங்கப்படும் அதிர்ஸ்ட காலமாகவே அமையும். 

2009 மே மாதம் முள்ளிவாய்க்காலில் மௌனமடைந்த 138 நாள் கொடூர யுத்தத்தை வெளிப்படுத்தும் ஷநோ பயர் சோன்| (ழே குசைந ணுழநெ) என்ற புலனாய்வு விவரணத்தை கலேம் மக்ரே வெளியிட்டு இலங்கை அரசின் படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் அம்பலப்படுத்தினார். 

இது பற்றி 2015ல் விசாரணை நடத்திய நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தமது தீர்ப்பில், ராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் நம்பகமானவையென தீர்ப்பளித்திருந்தார். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? 

ஜெனிவா அமர்வு இடம்பெறும் தற்போது, அமெரிக்க ஓக்லான்ட் நிறுவனம் முடிவுபெறாத போர் (நுனெடநளள றுயச) என்ற விவரண அறிக்கையை போதிய ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது. இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்களின் நிலங்களை சிங்கள மயமாக்குவதையும், ஆக்கிரமிப்பதையும் இந்த அறிக்கை அம்பலப்படுத்துகிறது. 

தமிழர் தாயகத்தில் எங்கெங்கு எத்தனை ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன, எவ்வளவு ராணுவத்தினர் அங்கு குவிந்துள்ளனர் என்பதை விபரிக்கும் இந்த அறிக்கை, இங்கு ஆறு குடிமக்களுக்கு ஒரு ராணுவத்தினர் வீதம் உள்ளதை புள்ளிவிபரங்களோடு சுட்டுகிறது. 

முல்லைத்தீவில் மட்டும் 65 புதிய பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டதையும், இங்கு இரண்டு குடிமக்களுக்கு ஒரு ராணுவம் இருப்பதையும் இந்த அறிக்கை தெரியத்தருகிறது. இதற்கும் அப்பால் கடற்படை, வான்படை, காவற்துறை, புலனாய்வுத்துறை என்பவை மேலதிகமாக தாயக மண்ணை ஆக்கிரமித்துள்ளனர். 

தற்போது ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள வரைபுகள் தொடர்பாக ஓக்லான்ட் அறிக்கையைத் தயாரித்த அனுராதா மிட்டால் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 'தற்போதைய மனித உரிமைகள் ஆணையாளர் பச்சிலற், முன்னாள் ஆணையாளர்கள், ஐ.நா.வின் ஒன்பது முன்னாள் சிறப்புப் பிரதிநிதிகள் மற்றும் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கையைத் தயாரித்த அனைத்து உறுப்பினர்கள் ஆகியோரின் பரிந்துரைகளிலிருந்து இந்த வரைபு முற்றிலும் விலகி நிற்கிறது" என்ற கருத்து, மனித உரிமைப் பேரவையின் வரைபுகளை தமிழர்களும் அவர்களின் அரசியல் தரப்புகளும் சமூக செயற்பாட்டாளர்களும் முற்றாக நிராகரிக்க வேண்டுமென்பதை எடுத்துச் சொல்கிறது. 

இதற்கும் மேலாக பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட வரைபுகள் தொடர்பாக கூட்டுத் தலைமை நாடுகளுக்கும் உறுப்பு நாடுகளுக்கும் எடுத்துக்கூற என்ன இருக்கிறது? 

அரசியல் என்பது அறம் சார்ந்தது. அறம் என்றால் தர்மம் என்று பொருள். இதற்குள் 32 வகையறாக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதில் முதலாவது நீதி. 

அனைத்துலக அரங்கில் சர்வதேச நாடுகளிடம் ஈழத்தமிழர்கள் நீதி என்ற ஷஅற|வியலை வேண்டி நிற்கின்றனர். பன்னிரண்டு ஆண்டுகள் இதற்காகக் காத்திருந்தும் அந்த நீதி கிடைக்கவில்லை. அறம் அழிக்கப்படுகிறது. அறம் அநாதையாக்கப்படுகிறது. அறம் காணாமலாக்கப்படுகிறது. காலம் ஒருநாள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டுமென வலி சுமக்கும் மக்கள் காத்திருக்கின்றனர். 

No comments