யாழ்ப்பாணம் மீண்டும் முடங்குகின்றது?


யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதனிடையே திருநெல்வேலி பொதுச்சந்தையில் 24 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மட்டும் 33பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதேவேளை வவுனியாவில் 82 வயது வயோதிபர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் , திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம்; பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது. 

அதன் அடிப்படையில் இன்றைய தினம் காலை யாழ்.மாநகர முதல்வரிடமும் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் மாநகர முதல்வர் வி.மணிவண்ணிற்;கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. 

அதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்பு பட்டோர் தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்கள் விபரங்களை வழங்குமாறும்  மாநகர முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். 

ஏற்கனவே யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று செவ்வாய்க்கிழமை மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே திருநெல்வேலி பொதுச் சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

நல்லூர் திருநெல்வேலி சந்தைத் தொகுதியில் எழுமாறாக சிலரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டதில் 24 பேருக்கு தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் மரக்கறி வியாபாரிகள் மற்றும் சந்தைத் தொகுதியில் உள்ள கடைகளின் வியாபாரிகளும் அடங்குகின்றனர்.

அதனால் திருநெல்வேலி பொதுச் சந்தை உள்ளிட்ட சந்தைத் தொகுதி முழுமையாக இன்று முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments