மீண்டும் ஊடகங்களிற்கு மிரட்டல்:கோத்தா பதிலடி!
தெற்கில் மிகவேகமாக கோத்தபாய ஆதரவு அலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் ஊடகங்கள் மீது திட்டிதீர்க்க தொடங்கியுள்ளார் கோத்தா.
அவரது குடும்பம் மற்றும் அமைச்சர்கள் காணிகளை காடளித்து சுவீகரிப்பது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளன.
இதன் தொடர்;ச்சியாக கொழும்பில் வைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் தொடர்பான பேனர்களை அகற்ற கோத்தா உத்தரவிட்டமை சுற்றுச்சூழலியாளர்களை சீற்றமடைய செய்துள்ளது.
இதனால் சீற்றமடைந்துள்ள கோத்தபாய ஊடக சுதந்திரம் என்பது ஊடக நிறுவன உரிமையாளர்களின் சுதந்திரமல்ல என்றும் சில ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நாட்டை ஆட்சி செய்ய வேண்டும் என தேவை இருந்தபோதும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.
தான் ஜனாதிபதி என்ற வகையில் ஊடகத் துறைக்கு எவ்வித அழுத்தங்களையும் செய்யவில்லை என்றும் குறிப்பிட்ட ஜனாதிபதி, பல்வேறு குழுக்கள் மற்றும் ஆட்களின் தேவையின் பேரில் பிழையான ஊடக பயன்பாட்டில் ஈடுபட்டு நாட்டையும் மக்களையும் மீண்டும் பாதாளத்துக்குள் தள்ள முயற்சித்தால் அத்தகையவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பின்நிற்கப்போவதில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
யுத்த காலத்தில் நாட்டுக்கு எதிராகச் செயல்பட்ட ஊடக குழுவொன்று ஊடக நிறுவனங்களுக்குள் நுழைந்து தேசியத்துக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
நான் ஒருபோதும் சுற்றாடலுக்கு அழிவை ஏற்படுத்தவில்லை. நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக இருந்த காலப் பகுதி முதல் சுற்றாடல் பாதுகாப்பிற்காக எவருமே செய்யாத பல வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளேன்.
சுதந்திர சதுக்கம் கூட அன்று குப்பை மேடாக காணப்பட்டது. அந்த நிலைமையை இல்லாமல் செய்து கொழும்பு நகரத்தை பசுமை பூங்காவாக மாற்றினேன்.
சுற்றாடலுக்காக எதையுமே செய்யாதவர்கள் என்னை நோக்கி விரல் நீட்டுவது கவலைக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்த சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் ஹந்தானையில் 30 ஏக்கர் காணியை தனது மகளுக்கு அன்பளிப்பு செய்துள்ளார். சுற்றாடலை பாதுகாத்திருந்தால் இன்று அவர்கள் ஊடகங்களுக்கு முன்னால் வந்து அழுது புலம்ப வேண்டி இருக்காது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
2015 – 2019 காலப் பகுதியில் குருணாகலை மாவட்டத்தில் 77 ஏக்கர் வனப் பகுதியும் புத்தளத்தில் 258 ஏக்கரும் மொனராகலையில் 100 ஏக்கரும் அனுராதபுரத்தில் 224 ஏக்கரும் உட்பட மைலேவ, மாத்தளை, லக்கலை, ரிதிகம, வெலிகன்ன உள்ளிட்ட பல பகுதிகளில் காடழிப்பு இடம்பெற்றுள்ளது.
அத்தகையவர்கள் இன்று அரசாங்கத்தை நோக்கி விரல் நீட்டுவது கேலிக்குரியதாகுமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனினும் அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்த காலப்பகுதியில் 44 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டோ காணமலாக்கப்பட்டமையோ அரங்கேறியமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment