தீர்வு வரும்:ஆனால் வராது:டெலோ?
பூகோள அரசியல்நிலையில் தமிழ்மக்களுக்கு வடக்கு - கிழக்கு ஆகிய மாகாணங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ கட்சியின் தவிசாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு, ஒரு முக்கியமான காலட்டமாக இந்தக் காலகட்டம் இருப்பதாகவும் கட்சியை பலப்படுத்திக்கொள்ளும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கட்சிகள், தமிழ் மக்களின் அரசியல் என்பவற்றின் பலம் தானாகவே பலப்படுமெனவும் கூறினார்.
தமிழீழ விடுதலை இயக்கம் இன்றும் கூட்டமைப்புக்குள்ளேயே போராடிக்கொண்டிருப்பதாக் தெரிவித்த அவர் கூட்டமைப்பில் இருந்து பிரிநித்து சென்றவர்கள் இன்று 10 தமிழ் கட்சிகளை உருவாக்கி, தங்களையும் சேர்த்துகொண்டு, சில விடயங்களில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்களெனவும் கூறினார்.
இந்த கட்சிகள் அனைத்தும் இணைந்து, "தமிழ்த் தேசிய பேரவை" என்று ஒன்றை உருவாக்க முயற்சித்துக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலப்பட வேண்டுமெனவும் பதிசெய்யப்பட வேண்டுமெனவும் அதற்கான கட்டமைப்பொன்றை உருவாக்க வேண்டுமெனவும் கூறினார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கான, தமிழ்த் தேசியகத்துக்கான ஒரே குரலாக பிரிந்து சென்ற கட்சிகளையும் நபர்களையும் இணைத்து தமிழ் மக்களின் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்க வேண்டுமென்றும், அவர் வலியுறுத்தினார்.
தற்போதைய நிலையில், பூகோள அரசியல்நிலையில், தமிழ் மக்களுக்கு வடகிழக்கிற்கு ஒரு தீர்வு கிடைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகிக்கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், மாகாணசபை தேர்தல் மிகவிரைவில் வரக்கூடிய நிலையில், ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கூறினார்.
"அந்தவகையில், நடைபெற்றுக்கொண்டிருப்பவை அனைத்தும் நமக்கு சாதகமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதனை நாங்கள் சரியாக பயன்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தி, ஒரே குரலாக மக்களின் உரிமைகளை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்" என்றும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
Post a Comment