ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு எனும் சித்ரவதை முறை: அகதிதியின் புதிய ஆவணப்படம்
நவுருத்தீவில் செயல்படும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் தஞ்சம் கோரிய மக்களை ஆஸ்திரேலிய அரசு எப்படி நடத்துகிறது என்பதை அம்பலப்படுத்தும் புதிய ஆவணப்படம் ஒன்றை அத்தடுப்பில் இருந்த முன்னாள் கைதியான Elahe Zivardar எனும் ஈரானிய அகதி வெளியிட்டிருக்கிறார்.
Searching for Aramsayesh Gah என்ற தலைப்பிலான படத்தில், படகு சிக்கல் முதல் அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ள முறை வரை நவுருத்தீவில் உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முறை குறித்த பல்வேறு அம்சங்கள் இதில் பேசப்பட்டுள்ளது.
“என்னை எப்படி அறிமுகப்படுத்திக் கொள்வது என உண்மையில் எனக்குத் தெரியவில்லை. என்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என்பதில் பெரும் சிக்கலை சந்திக்கிறேன். நான் ஒரு ஈரானிய பெண், பொறியியல் துறையில் பட்டம் பெற்றவள், பத்திரிகையாளர். ஆனால் இவையெல்லாம் மாறி கடைசியில் IVL-057 என்ற எண் மட்டுமே தடுப்பில் எனது அடையாளம் ஆகிப்போனது,” எனக் குறிப்பிட்டுள்ளார் Elahe Zivardar.
எனது நாட்டிலிருந்து புலம்பெயர்வதற்கு முன்பிருந்த என்னை நினைவுப்படுத்திக் கொள்வது இப்போது பெரும் சவாலாக உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
“சிறைகள் எல்லாம் ஒரே மாதிரியாகவே இருக்கும். அவை அனைத்தும் மோசமானவை, தண்டனை வழங்குவதற்காக கட்டப்பட்டவை. ஆனால் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு என்பது தனித்துவமானது. தஞ்சம் கோரியவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்குவது என்பது நவுருத்தீவுக்கு அனுப்பும் முன்பே கிறிஸ்துமஸ் தீவு தடுப்பில் தொடங்கிவிட்டது. மிகவும் சிறிய, வெப்பம் மிகுந்த தீவில் உள்ள தடுப்புக்கு நீங்கள் மாற்றப்படுவார்கள் என அங்கு நடந்த தினக்கூட்டங்களில் அதிகாரிகள் அச்சுறுத்தவும் மிரட்டவும் செய்தார்கள். உங்களால் ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முடியாது என்றார்கள். உங்கள் நாட்டுக்கே திரும்பி போய் விடுங்கள் என்றார்கள்,” என ஈரானிய அகதி Elahe Zivardar குறிப்பிட்டிருக்கிறார்.
Post a Comment