பிரிட்டனை கேட்கின்றது முன்னணி!



அம்பிகை செல்வகுமார் லண்டனில் மேற்கொண்டு வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13 வது நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து, தமிழர் வாழ்வில் ஒளியேற்ற முன்வரவேண்டும்” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் முன்னணியால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளை எட்டியிருக்கும் நிலையில், தமிழ் மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அவரது அகிம்சைப் போராட்டத்துக்கு வழங்கிவரும் ஆதரவுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து செயற்பட்டு வருகின்றது. அம்மையாரின் அகிம்சை முறையிலான போராட்டத்தினை சர்வதேச தரப்புக்கள் மதித்து, பாதிக்கப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர இதயசுத்தியுடன் செயற்பட வேண்டும் என்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்துகின்றது.

ஜனநாயகத்தை மதிக்கும் நாடாக சர்வதேச அரங்கில் காட்டிக்கொள்ளும் பிரித்தானியா, சர்வதேச நடவடிக்கைக்கான ஐ.நா. மனித உரிமை ஆணையரின் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை உதாசீனம் செய்வதும், தன்னுடையதும் தனது அணிசார்ந்த நாடுகளதும் பூகோள நலனை மட்டும் கருதி பிரித்தானியா செயற்படுவதும், ஈழத் தமிழ் மக்களுக்கும், புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையளித்துள்ளது. தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு பிரித்தானியாவும் பொறுப்புக்கூறவேண்டிய கட்டாயம் உள்ளது.

அம்பிகை செல்வகுமாரின் உணவு தவிர்ப்பு போராட்டம் 13 வது நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து, தமிழர் வாழ்வில் ஒளியேற்ற முன்வரவேண்டும். அத்துடன், ஏனைய சர்வதேச சக்திகளையும், தமிழர் தரப்பின் நீதிக்காக செயற்பட அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments