வெள்ளை வானல்ல:கறுப்பு வான் வருகின்றது!



தனியார் தொலைக்காட்சியொன்றி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாடசாலை மாணவி, தன்னுடைய சுற்றுசூழல் தொடர்பில் தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில் அம்மாணவியின் வீட்டுக்குத் தேடிச்சென்று பொலிஸார் அவரிடம் வாக்குமூலம் பெறும் அளவுக்கு கருத்துச்சுதந்திரம் மலிந்துவிட்டதெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி. அலவத்துவல, மணல், மரக்கொள்ளைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன. 

'வெள்ளை வான்களில் கடத்தும் செயற்பாடுகள் மலையேறிவிட்ட நிலையில், கறுப்பு வான்களின் கடத்தல் தலைவிரித்தாடுகின்றது' என்றார். 

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர்,  அரச்சாங்கத்தின் சில நடவடிக்கைகளைப் பார்க்கும் போது புதுமையாகவுள்ளது என்றார்.

 'நாட்டின் சகல பிரதேசங்களிலும் சட்ட விரோத மணல் அகழ்வுகள், கல் உடைப்பு மற்றும் காடழிப்பு என்பன வியாபாரத்தை நோக்காக் கொண்டு இடம் பெற்று வருகிறதன.  இதற்கான அனுமதிப் பத்திரங்களை மீளவும் வழங்கியுள்ளனர். சுற்றாடல் அமைச்சரும் இதை பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்' என்றார்.

'இவ்வாறு, சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் நிலையில், தன் வாழ்விடத்தைச் சுற்றிஇ இடம்பெற்ற காடழிப்பு குறித்து உண்மையைக் கூறிய மாணவிக்கு பின்னால் சென்று வாக்குமூலம் பதிவுச்செய்யும் அளவுக்கு, அரசாங்கம்  கீழ்த்தரமான நிலைக்கு சென்றுள்ளது' என்றார். 

2015க்கு முன்னர் வெள்ளைவான் கலாசாரம் இருந்தது.  இன்று மீண்டும் இந்த அரசாங்கம் வெள்ளை வானுக்குப் பதிலாக கறுப்பு வான் கலாசாரத்தை ஆரம்பித்துள்ளது. ஊடகவியலாளரான சுஜீவ கமகேயை, கண்களை கட்டி , கறுப்பு வானில் கடத்திச்சென்று தாக்கிவிட்டு வீதியில் போடப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், பின்னணியைத் தேடிப்பார்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்கள் கண்மூடித்தனமாக செயற்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் சீனாவுடன் இணைந்து 10 பில்லியன் யுஆன் பணமாற்றத்திற்கு முயற்சிக்கின்றனர். அதற்காக, பகிரங்கமாக சீனாவுக்கு எந்த இடத்தை விற்கப்போகிறார்களோ தெரியாது என்றார். 


No comments