இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியில்லையாம்!இலங்கையில் தாம் அறிந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ செயற்பாடுகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஸ் பத்திரண தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்பாடுகளை ஆரம்பிப்பது தொடர்பில் அண்மையில் அந்நாட்டு அரசியல்வாதியொருவரால் அறிவிக்கப்பட்டது.

அக்கருத்து தொடர்பில் இலங்கையிலும் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான சட்டரீதியான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே காணப்படுகிறது.

நாம் அறிந்த வகையில் இலங்கையில் அவ்வாறானதொரு கட்சியை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. எனவே நாட்டு மக்கள் இது தொடர்பில் கலவரமடையத் தேவையில்லை. அவ்வாறான ஏற்பாடுகள் பாரதிய ஜனதா கட்சிக்கு இல்லை என தெரிவித்திருந்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றிருந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கட்சி பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில் தென்னிலங்கையில் பெரும்பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments