உயிர்கள்

இண்டையோட பள்ளிக்கூடம் லீவு. இனிக் கொஞ்ச நாளைக்கு பஸ் ஸ்டான்டுக்குத்தான் போக வேணும். எப்படியாவது எல்லாத்தையும் வித்துப்

போட்டுத்தான் வரவேணும். தங்கச்சி பாவம். அவளிட்ட இருக்கிற ஒரு சட்டையும் கிழிஞ்சுபோச்சிது.

இவள் எழும்பி பள்ளிக்கூடம் போறதற்கு முதல் நான் போக வேணம். அல்லாட்டா என்னட்ட ஏதாவது கேட்பாள். அம்மாவும் என்னைத்தான் எதிர்பார்ப்பா.

அட நல்லாய் விடிஞ்சிட்டுது. எழும்பினதும் முகத்தக் கழுவி தண்ணிய குடிச்சன். நேற் று தேத்தண்ணிக்கு சீனி இல்ல என்டவா. ம்… அம்மாவும் பாவம். ஊரில் இருக்கேக்க அம்மா, அப்ப, தங்கச்சி நான் எண்டு என்னமாதிரி இருந்தம். அப்பா காணாமற் போனதால்தானே நான் கச்சான் விக்க வேண்டி வந்திது.

நேற்றிரவு வறுத்து பைகளுக்குப் போட்டு கட்டி வைச்சிருந்த கச்சான எடுத்துக் கொண்டு போனன். படலை இல்லாததில வீட்டவிட்டு வெளியில வந்ததுமே ரோட்டிக்கு வந்திட்டன்.

அதில வாறத பார்க்க சரியா எங்கட அப்பாமாதிரி தான் கிடக்குது அட! இவரே முத்தண்ணை… அப்பா எண்டா எவ்வளவு நல்லவர். நல்லாயப் படிச்ச மனுசன். உத்தியோகம் பார்த்து தான் காசு வாங்கிறதோ, எண்டிட்டு கிளிநொச்சியில் ஏக்கர் கணக்கில வயல் செய்தவர். எண்டு தான் அப்பாவப் பற்றிக் கதைக்ககேக்க அம்மா அடிக்கடி சொல்லுவா.

எனக்கு இப்பவும் நல்ல நினைவிருக்குது. அப்பா கனக்க கதைக்கமாட்டார். ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டிருப்பார். என்ன பள்ளிக்கூடம் ஏத்திக்கொண்டு போவேக்க சொல்லவார். நல்லாய் படிக்க வேணும். படிச்சி ஐந்தாம் கொலஸ்சிப் எழுதி பாஸ் பண்ணினா அரசாங்கம் படிப்பிற்கும் எண்டு.

நான் சோதின எழுகிறதுக்கு முன்னமே அப்பா இல்ல. என்ர படிப்பும் போச்சிது. கிளிநொச்சிக்க ஆமி வரேக்க வீட்டில் ஒரு சாமானும் எடுக்காமல் ஓடி வந்திட்டம். காசு அம்மாண்ட நகைகள், என்ர சயிக்கில், தங்கச்சின்ர உடுப்பு சப்பாத்து எண்டு ஒன்டுமே எடுக்கேல. இங்க ஓடி வந்தம். கொட்டில் ஒண்டு போட்டு தந்திட்டு அடுத்த நாளே தன்ர சயிக்கிளில அப்பா போனவர். விட்டபோய் நகைகள் காசுகள் எடுத்துக்கொண்டு வாறன் எண்டு. அம்மாட்ட அப்படித்தான் சென்னவராம்.

வீட்ட பாக்க போனவர் இன்று வரைக்கும் கானேல. இப்ப ஆறு வருசமாச் சிது. அந்த சத்ஜெய எண்டு சொன்ன நடவடிக்கையில தான் வீடெல்லாம் குண்டுபட்டு உடைஞ்சிப்; போச்சிது.

அப்ப காசு எடுக்கப் போன அப்பா வரேல எண்டு அம்மா தொடர்ந்து அழுதா. ஏனோ தெரியேல அப்பாவிற்கு சாப்பாடு ஒன்டம் செய்து படைக்கேல கிளிநொச்சி பிடிச்சாப் பிறகு அங்க இருந்து நிறைய எலும்புக் கூடுகள் எடுத்தவை பக்கத்து வீட்டு ஆச்சி வந்து சொன்னவா.

“ பிள்ளை நீயும் ஒருக்காய் போய்ப்பாருமன் உம்மட மனுசண்ட எழுப்புக்கூடேதும் கிடக்கும்… அடையாளம் கண்டிட்டா உமக்கும் நிம்மதி. குமச்சளில்லாமல் இருக்கலாம்” எண்டு.

அம்மா அக்கராயன் ஆசுபத்திரிக்கும் காவல் துறைக்கும் யார் போறது எண்டா. பேந்து அவர் இருப்பார். எப்படியும் எங்களிட்ட வருவார். எண்டிட்டு இருந்திட்டா. அப்படி என்டா அப்பா உயிரோட இருந்தா இத்தனைக்கும் வந்திருக்க வேணுமே.

அல்லாட்டா அப்பா வந்து நாங்கள் வீட்டில இல்லை எண்டு தேடித்திரியிறாரோ? தெரியேல இயக்கத்திலை இருந்து பிடிபட்டவையக் கூட ஆமி விட்டிட்டான் எண்டு போன கிழமை ரீச்சரவை கதைச்சிக் கொண்டு போச்சினம்.

அட அங்க நான் வாறகுக்கிடையில அந்தக் கிழவி வந்திட்டுது. இது வயது போனகாலத்தில கச்சான் வித்து யாருக்குத்தான் காசைக் கொடுக்குதோ தெரியேல. நானென்டாலும் தங்கச்சி படிக்க, வீட்டில சாப்பிட எண்டுவேணும்.

இப்ப கிழவி “ இங்க ஏன் வாராய் என்ர பிழைப்ப கெடுக்கவோ” எண்டு தொண தொணவெண்டு கதைக்கப் போகுது. அதுக்கெங்க என்ர கஸ்ரம் தெரியப்போகுது.

நான் ஒரு நாளுமே அவலின்ர பிழைப்பக் கொடுக் கேல ஆனா பள்ளிக்கூடம் விட்டு வாற ரீச்சரவையும், பிள்ளைகளும் என்னிட்டதான் கச்சானை வாங்குகினம்.

அந்த மாஸ்டர் வந்தால் எனக்கு நல்ல அதிஸ்டம்தான் நிறைய வாங்குவார். என்னப்பாக்கேக்க அவரின்ர மகன் மாதிரித் தெரியிறதோ என்னவோ.

அங்க அந்த அக்கா வாறா. சரி நாசம் தான் என்னக் கண்டதுமே கேட்பா. “ வாரீரே உம்மக் கொண்டுபோய் நல்ல இடத்தில விட்டுப் படிப்பிக்கிறன்” எண்டு. அவவும் மூன்று நாளுதரம் கேட்டவா. ஏன் நீர் படிக்கிற வயதில கச்சான் விக்கிறீர் எண்டு. நான் சிரிச்சுப் போட்டு பேசாமல் விட்டிட்டன் இண்டைக்குதம் கேட்பாவோ….

“ அண்ண… கச்சான் வாங்குங்கோ” அவரின்ட சைக்கில இருக்கிற பையிக்குள்ள வல்லாரை இருக்குது அப்பா இருக்கேக்க மதியச் சாப்பாட்டு நேரம் தன்ர வல்லாரையையும் எடுத்து என்ர கோப்பைக்கப் போடுறவர் “ சாப்பிடு சாப்பிடு அப்பதான் உனக்கு நல்ல நினைவாற்றல் வரும் நல்லாய்ப் படிப்பாய் என்பார்… .”

வல்லாரை திண்டு கன வருசமாய் போச்சிது இண்டைக்கு தங்கச்சிக்கு ஒருபிடி வாங்கிப் போய் கொடுக்கவேனும்.

உயிரப் பிடிச்சிக் கொண்டு ஒரே ஒரு கோழிதான் இரக்குது. அது இடுற முட்டையை தங்கச்சி எனக்கெண்டு தான் வைச்சிருக்கிறவள். நேற்றுச் சென்னநான் பள்ளிக்கூடத்தால வந்ததும் முட்டையை எடுத்து அவிச்சிச் சாப்பிடு எண்டு. சுட்டிக்கு பின்னுக்கு நாயுண்ணிப் பத்தை எண்டதில் இந்தக் காத்திற்கு ஏதாவது வந்து போகும் எண்டு சொன்னன்.

“ கச்சான் கச்சான்” இதென்ன கச்சான் கச்சான் என்டதும் அவர் அப்பிடி அந்தப் பார்வை பாத்திட்டுப் போறார்.

ஐயோ… தலைச் சுத்துரமாதிரிக் கிடக்குது. ஒரு பிளேன் ரீ குடிப்பம் அந்த தேத்தண்ணிக் கடைக்காரனுக்குத்த தெரியும் நான் பிளேன் ரீ குடிக்கத்தான் வாறன் எண்டு நான் கேக்கிறகுக்கு முதலேயே பிளேன்ரீயா எண்டு கேட்பார். சோடா எல்லாம் விதம் விதமாய் வந்து கிடக்குது. இங்க இப்பதான் நல்ல மலிவு.

ம்… பிளேன்ரீ ச்சா, இண்டைக்கு தங்கச்சிக்கு ஐந்து ரூபாவிற்கு வல்லாரை வாங்கிப் போகேலாது. தண்ணிய குடிச்சி வயிற்ற நிரப்பிக் கொண்டு திரும்பவும் கச்சான் விக்கிற இடத்திற்கு போனன்.

அந்தா… . பள்ளிக்கூடம் விடுறதிற்கு மணி அடிக்குது கடவுளே இண்டைக்கு இவ்வளவு கச்சானும் வித்து முடிச்சிப் போடவேணும்.

தங்கச்சிக்கு இண்டைக்கு தான் நல்ல சந்தோசமாய் இருக்கும் எனக்கில்லாட்டிலும் பரவாயில்லை. அவள் தான் பள்ளிக்கூடம் போறவள் பாவம்.

அந்தா சுயந்தன் வாறான் ரிப்போட்ட காட்டுவான். இந்த முறையும் அவன்தான் முதலாம் பிள்ளயா வருவான். ரீச்சரவை நேற்று அவனக் காட்டி ஏதோ கதைச்சவையள். அவனும் நானும் ஒன்டாத்தான் ஒரு பள்ளிக்கூடத்தில படிச்சம். நேசரியில இருந்த அப்பா இல்லாமல் போகும் மட்டும் ஒண்டாத்தான் படிப்பம். விளையாடுவம். கடவுளே சுயந்தன் முதலாம் பிள்ளையா வரவேனும்.

சுயந்தன் கொலசிப் எழுதி பாஸ் பண்ணினதும் அவனைப் பாக்கப் போனன். போவேக்க என்னட்ட கிடந்த கச்சானத்தான் கொண்டு போனன்.

நான் கையிலை வைச்சிருந்த கச்சான பறிச்சான். “ உனக்குத்தான் கொண்டந்தன்” என்டிட்டு கொடுத்தன் அவன்ர அப்பாவும், அம்மாவும் அத உடைச்சி சாப்பிட்டவையள்.

“ குசேலன்ட அவல்பொரி மாதிரிக் கிடக்குது. கண்ணன் விரும்பிச் சாப்பிட்ட மாதிரி நான் சாப்பிடுறன்” எண்டு அவண்ட அம்மா சொன்னா. அது பழிக்கிறமாதிரிக் கிடந்திச்சிது.

அதென்ன அது குசேலன் கதை எண்டு அம்மாட்டப் போய் கேட்டன். அம்மா வடிவாய் கதையச் சென்னா. அது போலத் தான் சுயந்தனும் எனக்கு தன்ர உடுப்பில தாறவன். அவன்ர அம்மா, அப்பா தம்பி எல்லாருமே நல்லவை. அப்பாயிருந்திருந்தா நானும் அப்படித்தான் இருந்திருப்பன்.

அந்த பெரிய வகுப்பு அண்ணாவும் வாறார். என்னப் பாத்து அடிக்கடி சிறிப்பார். அவர் சிரிச்சா எனக்கு நல்ல வருப்பம். நானும் சிரிப்பன் ஒருநாளும் கதைக்கேள. கச்சானும் வாங்கேல்ல.

அப்பாடா ஒரு மாதிரி எல்லாக் கச்சானும் வித்துப் போட்டன். எல்லாரும் ரிப்போட்டோட போயினம். அம்மாவிற்காவது கால் இருந்திருந்தா நான் படிச்சிருக்கலாம். அவவிற்கு ஏலும் எண்டா என்ன ஏன் கச்சான் விக்;;க விடுறா?

அம்மாவப் பாக்க எப்பவும் பாவமாத்தான் இருக்கும். அப்பா இல்லாததோட கஸ்டப்பட்டு எங்கள எப்படி பாத்தா சீ… சுதந்திரபுரத்தில கிபீர் அடிச்சதில அவவிற்கு காலும் முழக்காலுக்கு மேல இல்லாமல் போச்சிது.

நேரத்திற்கு போகவேணும் சின்னக் கண்ணன்ட கடையில தான் விலைகுறைவு. எண்டு கதைக்கிறவையள். அங்கயே போய் தங்கச்சிக்கு சட்டையை வாங்குவம் அம்மாவிற்கு கட்டாயம் முன்னூறு ரூபா சேத்து வைச்சிருக்கிறன் அதை சந்தைக்க கீரைக்கட வைச்சிருக்கிற வடிவமக்காட்ட கொடுத்துதான் வைச்சிருக்கிறன். அதையும் வாங்கிக் கொண்டு வல்லாரையும் அங்கேய வாங்கிக் கொண்டு போவம்.

அதிலதொங்கிற அந்த சேட்டும் காற்சட்டையும் எனக்கு வடிவாய் கிடக்கும். இப்ப தங்கச்சிக்கு வாங்குவம். இது தான் அவளுக்கு நல்லாயிருக்கும்.

கொண்டு வந்த காசு அப்படியே தங்கச்சிக்குதான் காணும். சின்னப பள்ளிக்கூடத்திலயும் இண்டைக்கு லீவு எண்டுதான் சொன்னவள். நேரத்திற்கு வீட்ட போயிருப்பாள். முட்டைய சாப்பிடு எண்டு தங்கச்சிக்கு சொன்ன நான் அம்மா ஏலாத காலாலே ஏதாவத சமைச்சி வைச்சிருப்பா… கடையில மினக்கட்டதில நல்லா நேரம்போயிற்று நடக்கவும் ஏலாமல் கிடக்குது. வேகமாய் போய் தங்கச்சிக்கு இதைக் கொடுக்க வேணும் எண்டு மனசு நனைக்குது ஆனா நடக்கதான் இயலாமல் வருது.

வீட்டுப்பக்கம் ஆக்களாய் கிடக்குது. முத்தண்ண வீட்டில நிண்டு போறாரோ.. பார்வதி அன்ரியும் போறா… காவல் துறை அண்ணாவும் இயக்க அண்ணையும் மோட்டார் சயிக்கிளில வந்து நிக்கினம்.

வீட்ட ஓடிப் போக வேணும் போல கிடக்குது. ஓடிப் போனன் சாப்பிடாததில கண்ணச் சுத்தி கொண்டு இருட்டா வருகுது. மெல்ல நடந்து தான் போனன்.

அம்மா புசத்திக் கொண்டு இருக்கிறா. வீட்டிலஇருந்த ஒரே ஒரு நீல நிற யு.என்.ஏச்.சி.ஆர். பாயில தங்கச்சி படுத்துக் கிடந்தா.

தங்கச்சிக்கு என்டு வாங்கினதுகளை தலைமாட்டில வைச்சன். தங்கச்சிக்கு என்ன என்டு தலைய தொட்டன். அவளின்ற வெள்ளமேனி நீலம் பாரிச்சிப் போய் கிடந்தது. என்னக் கண்டதுமே அம்மா கூடவா அழுதா.

“… . நாசமாய போன நாகம் முட்டய குடிச்சிட்டுப் போறத விட்டிட்டு என்ர குஞ்சினன்ர உயிர குடிச்சிட்டுப் போயிட்டுதே…” அம்மாவப் பார்த்திட்டு தங்கச்சியின்ர தலையத் தூக்கினன். ஏதோமாதிரி இருந்திச்சி. தங்கச்சிக்கு உயிர் இல்ல. இப்ப எனக்கு எல்லாமே விளங்கிற்றுது.


அ.காந்தா.

No comments