3 தொகுதிதானா, விரக்தியில் வைகோ சந்திப்பால், கூட்டணிக்குள் சலசலப்பு!


திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடுவோம் என அறிவித்துள்ளது. இந்தக் கருத்தானது திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த மதிமுக விசிக ஐஜேகே கொமதேக ஆகிய கட்சிகள் திமுகவின் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றது. அவர்கள் வேறு கட்சியாகவே இருந்தாலும், அவர்கள் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவே கருதப்படுவார்கள். அதேபோல வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் இந்த கட்சிகள் அனைத்தும் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என திமுக விருப்பம் தெரிவித்து வருகிறது.  

இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ புத்தாண்டன்று, செய்தியாளர்களை சந்தித்தபோது இந்த தேர்தலில் மதிமுக தனி சின்னத்தில் தான் கண்டிப்பாக போட்டியிடும் என அறிவித்துள்ளார். இதனை திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்தும் தெரிவித்துள்ளார். கட்சியில் உள்ள மற்ற தலைவர்களுடன் பேசி கலந்து ஆலோசித்துவிட்டு தெரிவிப்பதாக கூறிய ஸ்டாலின், அதன்படி வைகோவின் விருப்பத்தை தெரிவித்துள்ளார். தீவிர ஆலோசனைக்குப் பிறகு திமுக தரப்பில் இருந்து நீங்கள் தனி சின்னத்தில் நின்று கொள்ளுங்கள், ஆனால் மூன்று தொகுதிகளை தான் தருவோம் என திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வைகோ திமுகவை மிரட்டுவதற்காக, புதிய யுக்தியை கையில் எடுத்து உள்ளதாக தெரிகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் தங்கியிருக்கும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவை வைகோ சென்று சந்தித்து பேசினார். அவர் சந்தித்த பிறகு வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிராக விவசாயிகள் போராடுவதை குறிப்பிட்டு, விரைவில் மாநிலங்களவையை கூட்ட வேண்டும் என அவர் கூறியதாக தெரிவித்தார். 

ஆனால் தமிழக அரசியலில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றிய வெங்கையா நாயுடுவை வைகோ சந்தித்து பேசியிருப்பது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் எட்டு தொகுதி வரையிலுல், தனி சின்னம் என்றால் மூன்று தொகுதிகள் மட்டும்தான் எனவும், வைகோவிற்கு திமுக தெரிவித்து உள்ளதாக தெரிகிறது. ஆனால் வைகோ இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது

 

No comments