இராணுவ மயமாகும் ஆட்சிக்கு துணைபோகிறாரா துணைவேந்தர்? பனங்காட்டான்

தென்னிலங்கையில் நுகேகொடையிலுள்ள சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும், குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்திலும் அக்காலத்தில் ஆயுதப் போராட்டம் செய்த ஜே.வி.பி. போராளிகளின் நினைவுத் தூபிகள் இப்போதும் இருக்கின்றன என்பது யாழ்ப்பாணத் துணைவேந்தருக்கு தெரியாதா? மாணவர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்தையும் தமிழரான ஒரு துணைவேந்தர் மடையர்களாக்குகிறாரா? அல்லது, தரப்படுத்தலால் உருவான மாணவர் எழுச்சிக்கு மீண்டும் விதை தூவுகிறாரா?

ஜனநாயகம் என்ற பெயரில் ராணுவ ஆட்சி எவ்வாறு உருவாகும் என்பதை இலங்கையில் இப்போது நேரடியாகக் காணக்கூடியதாகவுள்ளது. 

ராணுவத்தில் உயர் அதிகாரியாகப் பணியாற்றி சுடுகலன்களுடன் விளையாடிய ஒருவர், அந்நாட்டின் பாதுகாப்பச் செயலாளராக இருந்தவேளை பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் நடத்திய படுகொலைகளை சில வருடங்களாக நேரில் தரிசிக்க நேர்ந்தது. 

அதற்கான பொறுப்புக்கூறலை சர்வதேச மையத்தில் ஏற்க மறுத்த அதற்குப் பொறுப்பானவரே அந்த நாட்டின் ஜனாதிபதியாக மாறிய காட்சியையும் பார்த்து வருகிறோம். 

இப்போது எல்லாமே படைத்துறை வசமாகி வருகிறது. பாதுகாப்புச் செயலாளர், ராணுவத் தளபதி பதவிகள் மட்டுமன்றி இதுவரை நாற்பதுக்கும் அதிகமான நிர்வாக அலகுகளின் தலைமைப் பதவிகளுக்கும் படைத்துறையினரே தகுதியானவர்களென நியமனமாகி வருகின்றனர். இந்தப் பட்டியல் நீளும் நிலை காணப்படுகிறது. 

இதன் விளைவுகளை அந்தச் சின்னத்தீவு கடந்த ஒரு வருடத்துள் நன்றாகவே அனுபவிக்க நேர்ந்துள்ளது. மிருசுவிலில் பொதுமக்களை படுகொலை செய்து மரண தண்டனை பெற்ற ராணுவ இடைநிலை அதிகாரி விடுதலை செய்யப்பட்டதிலிருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பராராஜசிங்கம் கொலை தொடர்பாக ஐந்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த பிள்ளையான் என்ற சந்திரகாந்தன் உட்பட அவருடன் ஐவர் விடுதலையானதுவரை சொல்வதற்கு பல உண்டு. 

மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய சகாவான அமைச்சர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர 2011ம் ஆண்டில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைதாகி மரணதண்டனை பெற்ற, கோதபாய ராஜபக்சவின் அந்நியோன்ய நண்பரான துமிந்த சில்வா என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் விடுதலை செய்யப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது. இவைகளுக்குப் பெயர் பொதுமன்னிப்பா அல்லது பாவமன்னிப்பா என்று புரியவில்லை. 

அண்மையில் நிறைவேற்றப்பட்ட இருபதாவது அரசியல் திருத்தம் நீதித்துறையில் நன்றாகவே புகுந்து விளையாடுகிறது என்பதற்கு இனியும் பல விடயங்கள் காத்துள்ளன. 

எதிர்க்;கட்சியைச் சேர்ந்த ஹரின் பெர்னாண்டோவுக்கு மறைமுக கொலை பயமுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை விடுத்தவர் வேறு யாருமல்ல - கோதபாய ராஜபக்சவே. நாடாளுமன்றத்தில் ஹரின் பெர்னாண்டோ நிகழ்த்திய ஓர் உரை அவரைக் கொதிநிலைக்கு உட்படுத்தியதால் இந்த கொலைப் பயமுறுத்தலாம். 

தமக்கு இரண்டு முகங்கள் உண்டெனக் கூறியுள்ள கோதபாய, ஒன்று ஜனாதிபதி என்ற முகமென்றும் - மற்றையது விடுதலைப் புலிகளின் தலைவரைக் கொலை செய்த முகமென்றும் கூறியுள்ளதோடு, இதில் எந்த முகம் வேண்டும் என்ற பாணியில் ஹரின் பெர்னாண்டோவிடம் கேட்டுள்ளார். 

அம்பாறையில் இடம்பெற்ற பொதுநிகழ்வொன்றில் இந்தப் பயமுறுத்தலை பகிரங்கமாக விடுத்த கோதபாய தம்மை எவ்வாறு நாட்டு மக்களிடம் அடையாளம் காட்டியுள்ளார். ஜனாதிபதி எனப்படும் நாட்டின் தலைவர் ஒரு கொலைஞன் என்றா? அல்லது கொலைஞன் ஒருவன் நாட்டின் ஜனாதிபதி ஆகியுள்ளான் என்றா?

இப்போது ஹரின் பெர்னாண்டோவுக்கு மேலதிக பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளார். மகிந்தவின் மகனும் அமைச்சருமான நாமல் ராஜபக்சவும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார்.

காலப்போக்கில் மகிந்த குடும்பத்து அரசியலாளர்கள் கூட கோதபாயவிடமிருந்து பாதுகாப்பு கோரும் நிலை ஏற்பட்டாலும்; ஆச்சரியப்பட நேராது. அவ்வேளையில் எதிர்க்கட்சிகள் என்பதே இல்லாமலும் போயிருக்கலாம். 

நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க சிங்கள திரையுலகின் புகழ்பெற்ற நட்சத்திரம். சிலவேளைகளில் சண்டியன் பாணியில் அரசியல் நடத்தும், அரச எதிர்ப்புகளின் முதன்மையாளர். 

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இவருக்கு நான்கு வருட கடூழிய சிறை விதிக்கப்பட்டுள்ளது. மைத்திரி - ரணில் கூட்டு நல்லாட்சிக் காலத்தில் பலவேறு வழக்குகளில் சிக்குப்பட்ட தமது கட்சிக்காரரை அமைச்சர்களாக்கி, அவர்களை ஒவ்வொருவராக வழக்குகளிலிருந்து சட்டமா அதிபர் உதவியோடு விடுவித்துக் கொண்டுவரும் கோதபாய, இப்போது எதிர்கட்சியினரை ஒவ்வொருவராக பதம் பார்த்து வருகிறார். 

ஆளும் கட்சி - எதிர்க்கட்சி என்று எதுவுமே இல்லாத, ஜனநாயக சோசலிச ராணுவ சிறிலங்கா அரசாட்சி மெதுமெதுவாக இலங்கையில் மலர்கிறது. பாகிஸ்தானையும் சிரியாவையும் இலங்கை காணும் காலம் தூரத்தில் தெரியவில்லை. 

கடந்த ஒரு வாரத்து நிகழ்வுகளில் முக்கியமாகப் பார்க்கப்பட வேண்டியது யாழ்ப்பாண பல்கலைக்கழக வளவுக்குள்ளிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட விடயம். 

ராஜபக்ச சகோதரர்களால் கொடூரமாகவும் குரூரமாகவும் 2009ல் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவாக பல்கலைக்கழக மாணவர்களால் இந்தத் தூபி அமைக்கப்பட்டது. அவ்வேளை துணைவேந்தராகவிருந்த பேராசிரியர் விக்னேஸ்வரன் கடந்த வருடம் அப்பதவியிலிருந்து காரணம் கூறாது தூக்கி வீசப்பட்டார். 

இ;ந்த நினைவுத் தூபியை இடிக்குமாறு சிங்கள ஆட்சிபீடம் விடுத்த கோரிக்கையை (உத்தரவை) அவர் நிறைவேற்ற மறுத்தமையே இதற்குக் காரணமென்பது இப்போதுதான் பகிரங்கமாகியுள்ளது. 

அப்படியானால், தூபியை இடித்தழிப்பதை நிறைவேற்ற ஒப்புக்கொண்டதன் அடிப்படையில்தான் புதிய துணைவேந்தராக சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டாரா என்ற நியாயமான கேள்வி பலரிடமும் ஏற்பட்டுள்ளது. 

இந்தக் கருத்துநிலையில் பார்க்கின், பல்கலைக்கழக வாயில் கதவுகளை இழுத்து மூடி, பொலிசாரையும் ராணுவத்தையும் வாயிலில் ஆயுதங்களுடன் காவலுக்கு நிறுத்தி, மாணவர்கள் எவரையும் உள்வர அனுமதிக்காது, அமைதியான இரவு வேளையில் மின்விளக்குகளை அணைத்து, இருட்டில் புள்டோசர் மூலம் தூபியை இடித்துத் தரைமட்டமாக்க துணைவேந்தர் சிறிசற்குணராஜா எடுத்த முடிவு, அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பதவிக்கான நிபந்தனைக்குட்பட்டது என்று கொள்ளலாம். 

இந்தத் தூபி 2018ல் நிறுவப்பட்டபோது மாணவர் ஒன்றியத் தலைவராகவிருந்த கிருஸ்ணராஜா கிருஸ்ணமேனனின் தகவலின் பிரகாரம், மாணவர்கள் அவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கிய குறைந்தளவு வளங்களே இதனை நிறுவப் பயன்பட்டது. பல்கலைக்கழகம் எந்த உதவியும் வழங்கவில்லை. 

மாணவர்கள் இரவு பகலாக ஓய்வின்றிப் பணியாற்றி இருபது நாட்களில் தூபியை நிறுவினர். அப்போதைய துணைவேந்தர் விக்னேஸ்வரனுக்கு கொழும்பு உயர்பீடம் நெருக்கடிகளைக் கொடுத்தவேளை அதனைப் பொருட்படுத்தாது - தூபி அமைப்பு வேலையை விரைந்து முடிக்குமாறு அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியதோடு அதனை அவரே திறந்தும் வைத்தார். 

அதே தூபியை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டபோது தற்போதைய துணைவேந்தர் என்ன செய்திருக்க வேண்;டும்? பல்கலைக்கழக சமூகத்தை - முக்கியமாக அதனை நிறுவிய மாணவர்களை, அவர்களின் பிரதிநிதிகளை அழைத்து கொழும்பு உயர்பீடம் அனுப்பிய உத்தரவுகளைக் காண்பித்து கலந்துரையாடியிருக்க வேண்டும். 

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவானவர்களை அழைத்து இவ்விடயத்தில் தலையிட்டு சுமுகமான முடிவை எடுத்து நிலைமையைச் சீராக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டிருக்க வேண்டும். 

உயர்பீட நெருக்குதல்களை ஊடகங்களுக்கு மெதுவாகக் கசியவிட்டு, பொதுமக்களிடம் இவ்விடயத்தை எடுத்துச் சென்று அவர்கள் ஊடாக மக்கள் எழுச்சியை ஏற்படுத்தி நிலைமையை மாற்றியிருக்க வேண்டும். 

இவற்றில் எதனையும் செய்யாத - செய்ய விரும்பாத சிறிசற்குணராஜா என்ற துணைவேந்தர் முதலில் உயர்பீடத்தின் விருப்பை சிரமேற்கொண்டு இரவோடிரவாக தூபியை துடைத்தழித்துவிட்டு, அதன்பின்னர் மாணவர்களுடன் கலந்துரையாடிதுடன் தமிழ் அரசியல்வாதிகளின் பங்களிப்பையும் கோரியுள்ளார். 

இறுதியில், அதே இடத்தில் தூபியின் உடைந்த ஒரு கல்லை தாமே எடுத்து வைத்து, அதற்கு திருநீறு சந்தனம் குங்குமம் பூசி, மலர்தூவி, தேங்காய் உடைத்து, கற்பூரதீபம் காட்டி, தேவார திருவாசகம் பாடி மாணவர் புடைசூழ பக்தி சொரூபராய் காட்சி கொடுத்தார். 

அப்போது அங்கு நின்ற சிங்கள பொலிஸ் அதிகாரி என்ன நடைபெறுகிறது என்று கேட்டதற்கு - தமிழ் நாட்டில் கலவரம், மாணவர் எனது பிள்ளைகள், பிரச்சனையை ஒருவாறு தீர்க்குமாறு கொழும்பிலிருந்து அறிவிப்பு வந்துள்ளதென்று தட்டுத்தடுமாறி பதிலளித்ததும்.....

இப்போது கல் மட்டுமே வைக்கப்படுகிறது, கொழும்பிலிருந்து அனுமதி வந்தபின்னரே மற்றைய வேலைகள் என்று கூறியதும்....

மறுபுறத்தில், கொழும்பில் உயர் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், பல்கலைக்கழகங்களின் மானியக் குழு தலைவர் சம்பத் அமரதுங்க, அமைச்சரவை பேச்சாளர் உதய கம்பன்பில, ராணுவத் தளபதி சவேந்திர சில்வா ஆகியோர் தங்களுக்கும், அரசாங்கத்துக்கும் தூபி இடித்தழிப்புக்கும் சம்பந்தம் இல்லையென்று கூறியதும்.....

ஆனால், அனுமதி பெறாது நிறுவப்பட்ட ஒரு கட்டிடத்தை அகற்ற துணைவேந்தர் எடுத்த முடிவில் தவறில்லையென்று தெரிவித்ததும்.....

இனி அமையப்போவது முன்னைய முள்ளிவாய்க்கால் தூபியை ஒத்ததா அல்லது கொழும்பு  விரும்பும் சமதானத் தூபியா என்ற சந்தேகம் எழும்பியிருப்பது, துணைவேந்தர் சிறிசற்குணராஜாவின் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகிறது.

தென்னிலங்கையில் நுகேகொடையிலுள்ள சிறிஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்திலும், குளியாப்பிட்டி வயம்ப பல்கலைக்கழகத்திலும் அக்காலத்தில் ஆயுதப் போராட்டம் செய்த ஜே.வி.பி. போராளிகளின் நினைவுத் தூபிகள் இப்போதும் இருக்கின்றன என்பது யாழ்ப்பாணத் துணைவேந்தருக்கு தெரியாதா?

மாணவர்களை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழினத்தையும் தமிழரான ஒரு துணைவேந்தர் மடையர்களாக்குகிறாரா? அல்லது, தரப்படுத்தலால் உருவான மாணவர் எழுச்சிக்கு மீண்டும் விதை தூவுகிறாரா?

No comments