வேலணையில் மக்கள் வீதிகளில்?


இலங்கை கடற்படைக்கான காணி சுவீகரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தியதாக இடமாற்றம் செய்யப்பட்ட வேலணைப் பிரதேச செயலர் சோதிநாதனை மீண்டும் வேலணைக்கு நியமிக்க கோரி மக்கள் போராட்டம் இலங்கை அரசிற்கு எதிராக இன்று நடத்தப்பட்டுள்ளது.

அரச விசுவாச அதிகாரிகள் மூச்சுப்பேச்சின்றி மண்டியிருக்க மக்கள் களமிறங்கி போராட்டத்தில் குதித்திருந்தனர். 

வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மண்கும்பான், மண்டைதீவு உள்ளிட்ட இடங்களில், கடற்படை முகாம் விஸ்தரப்பிற்கென பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நோக்கில், நில அளவைத் திணைக்களத்தால் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொதுமக்களும், காணி உரிமையாளர்களும் இணைந்து, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர்.

மண்டைதீவில் நடைபெற்ற மக்கள்  போராட்டத்தின் போதும், வேலணைப் பிரதேச செயலகத்தின் முன்பாக நடைபெற்ற போராட்டத்தின் போதும், போராட்டக்காரர்களை நேரடியாகச் சந்தித்த பிரதேச செயலாளர் சோதிநாதன், மக்களது எதிர்ப்புகள் காரணமாக, காணி அளவீட்டுப் பணிகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், சுவீகரிப்பு தொடர்பில் காணி அமைச்சின் செயலாளருக்கு தெரியப்படுத்தப்படும் என்றும், இதற்கான பதில் வரும் வரையும் காணி அளவிடுதல் பணிகள் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும், சோதிநாதன்; அறிவித்திருந்தார்.



இவ்வாறான நிலையில், கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்காக நிலஅளவைத் திணைக்களத்தால் காணி அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு, பிரதேச செயலாளர் தடையாக இருப்பதாகவும் அவரே தடுத்து நிறுத்தியதாகவும், முறையிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேலணை பிரதேச செயலாளருக்கு, திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது.


இந்நிலையிலேயே அரசிற்கு எதிராக இன்று மக்கள் போராட்;டத்தில் குதித்திருந்தனர்.

அவர்கள் அரசிற்கு எதிராக சுலோக அட்டைகளை தாங்கியிருந்தனர்.


No comments