உடலங்களை மாறி வழங்கிய கிளிநொச்சி வைத்தியசாலை?கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்த பொதுமகனின் உடலம் மாறி வழங்கப்பட்டமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.கொரோனா தொற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்ட உடலமென வேறு ஒருவரது உடலம் வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் நேற்றைய தினம் திருவையாறு பகுதியினைச் சேர்ந்த 55 வயது மதிக்கதக்க கோவிந்தன் மோகனதாஸ் மற்றும் கனகாம்பிகை குளத்தைச் சேர்ந்த கந்தையா செல்வராசா (61) ஆகிய இருவரும் மாரடைப்பு காரணமாக மரணமடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகனதாஸ் கொரோனா சந்தேகத்தின் பெயரில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் இரவு மரணமடைந்துள்ளார்.

இதேவேளை செல்வராசா நேற்றிரவு நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே மரணமடைந்துள்ளார்.

இருவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்த வைத்தியசாலை நிர்வாகம் உயிரிழந்தவர்களது மாதிரிகளை பெற்று பரிசோதனைக்காக அனுப்பியிருந்தது.

ஆய்வில் மோகனதாஸ் உடல பரிசோதனை முடிவுகள் தொற்று இல்லை என்பது கண்டறியப்பட்டிருந்த நிலையில் அவரது உடலை உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை உயிரிழந்த மற்றையவரான செல்வராசாவின் உடல மாதிரிகள் பரிசோதனைக்கு இன்று காலையே அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வைத்தியசாலையின் பிரேத அறையில் மோகனதாஸின் உடலம் மீதான பிரேத பரிசோதனைக்கு பதிலாக செல்வராசாவின் உடலம் பிரேத பரிசோதனைக்;குட்படுத்தப்பட்டு இன்று பிற்பகல்; திருவையாறில் உள்ள அவரது இல்லது எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எடுத்துச் செல்லப்பட்ட உடலம்; வீட்டில் பெட்டி திறந்து வைக்கப்பட்ட நிலையில் மோகனதாஸின் 15 வயது மகள் உடலம் மாறுதலாக அனுப்பபட்ட விடயத்தை  தெரியப்படுத்தியிருந்தார். இதனையடுத்து உடலம் வீட்டிலிருந்து கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. 


No comments