பருத்தித்துறையில் கடற்படையால் கைது?


சட்டத்துக்குப் புறம்பாக படகு ஒன்றில் இந்தியாவுக்கு தப்பிக்க முயன்ற ஒருவர் மற்றும் படகு ஓட்டி என இருவர் பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்துக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியாவைச் சேர்ந்த 35 வயதுடைய சந்தேக நபர், பருத்தித்துறையைச் சேர்ந்த ஒருவருடைய படகு ஒன்றில் இந்தியாவுக்கு பயணிக்க முற்பட்டுள்ளார்.

மருத்தித்துறை கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர், சந்தேகத்துக்கு இடமான படகை மறித்து விசாரணை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். படகு ஓட்டியும் கைது செய்யப்பட்டார்.

மனைவி மற்றும் பிள்ளையை கொலை செய்த குற்றச்சாட்டில் திருகோணமலை மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலுவையில் அதன் எதிரியே பருத்தித்துறை கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு தப்பிக்க முயன்றுள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். படகும் சான்றுப்பொருளாக பொலிஸாரின் பொறுப்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.

No comments