வடமராட்சியில் கடமை விசுவாசத்தில் சுகாதார பிரிவு?

 


மாவட்ட செயலகத்தில் 250 பேர் ஒன்று கூடிய போது மௌனம் காத்த சுகாதார துறை சாதாரண மக்களை வருத்துவதில் மும்முரமாக உள்ளது.

ஏற்கனவே தொண்டமனாறு செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நேற்றும் இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்து வல்வெட்டித்துறை பொதுச் சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

ஆச்சிரமத்தில் 5 பேர் மட்டும் தங்கியுள்ள நிலையில் அவர்கள் வெளியில் வருவதற்கோ வெளியிலிருந்து யாராவது உள்ளே செல்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடமை விசுவாசத்தால் முன்னெடுக்கப்பட்ட இத்தடையால் அங்கு அகப்பட்டுள்ள சுமார் 70 வரையான முதியவர்களான கைவிடப்பட்டவர்கள் பட்டினியில் தள்ளப்பட்டுள்ளனர்.

இதனிடையே புதிதாக வடமராட்சி சாரதி, நடத்துநர் மற்றும்  பஸ் ஆகியன தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை தனியார் போக்குவரத்திற்கு சொந்தமான பஸ் மற்றும் சாரதி, நடத்துநர் ஆகியோரை கரவெட்டி சுகாதார பிரிவினர் நேற்றிலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 13ம் திகதி பருத்தித்துறை தனியார் போக்குவரத்துக் சொந்தமான 750 பஸ் சேவையில் ஈடுபட்ட போது கொவிட் 19 தடுப்பு விதிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றியமைக்காகவென தெரிவித்து தனிமைப்படுத்தி வைத்துள்ளனர்

அளவுக்கதிகமான பயணிகளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றாது ஏற்றி வந்தமைக்காகவே தனிமைப்படுத்தல் சட்டம் பாய்ந்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

வடமராட்சியில் தென்னிலங்கை அமைச்சர்கள் வருகை தந்து முன்னெடுக்கும் நிகழ்வுகள் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத தரப்பு தற்போது அப்பாவிகளை இலக்கு வைத்து வேட்டையாட சுகாதார பிரிவு முற்பட்டுள்ளமை கவனத்தை ஈர்த்துள்ளது.


No comments