பனங்காட்டான் எழுதிய ''இருண்ட ஆட்சிக்கான இருபது ஜே.ஆரை விஞ்சும் ஜி.ஆர்!''


225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு 150 வாக்குகள் தேவை. ஐக்கிய தேசிய கட்சியும், ஜனபல பக்சய கட்சியும் இதுவரை நியமன எம்.பிக்களை அறிவிக்காததால் இப்போது மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 223 மட்டுமே. எனவே 149 ஆதரவே இருபதை நிறைவேற்றத் தேவை. அது கோதாவிடம் உள்ளது. சறுக்கினால் அதற்கானவர்களை பசில் தயாராக வைத்திருக்கிறார். 

இலங்கை இப்போது பல வைரஸ் தொற்றுகளுக்குள்ளாகி பெரும் அவலத்துக்குட்பட்டு நிற்கிறது. மூடன் எதையோ உழக்கினால் அதனை எல்லா இடமும் தேய்ப்பான் என்பது போன்ற நிலைமையே இப்போது உருவாகி வருகிறது. 

கடந்தாண்டு நவம்பரில் குடும்பத்தினரோடு சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற கோதபாய ராஜபக்ச, இப்போது தன்னிச்சையாக ஆட்சி நடத்த முற்படுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. 

இதற்கு ஏதுவாக அவரது சகோதரரான பசில் ராஜபக்ச ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் இவரது அணிக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொடுத்தார். 

இலங்கையில் ஜனாதிபதி பதவியேற்றவர்களில் கோதபாய மட்டுமே ராணுவ அதிகாரி என்ற பின்புலத்தைக் கொண்டவர் என்ற வகையில், தமிழினத்துக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அராஜகப் பாதையில் நாட்டின் அரச இயந்திரத்தை கையாள ஆரம்பித்துள்ளார். 

இதில் முக்கியமானது இருபதாவது திருத்தம். நீதிமன்றத்தின் சில கடப்பாடுகளைச் சந்தித்துள்ள இந்தத் திருத்தம் கோதபாய விரும்பும் எதேச்சாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் என்பதை இலங்கையர் அனைவரும் புரிந்துள்ளனர். 

ஆரம்பத்தில் தமிழர் தரப்பிலிருந்தும் முஸ்லிம் தரப்பிலிருந்துமே இருபதாவது திருத்தத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. நீதிமன்றுக்கு 40 வரையான ஆட்சேப மனுக்கள் சென்றன. நான்கு விடயங்களுக்கு மட்டுமே நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. 

இவைகளைத் திருத்தி அல்லது நீக்கி இருபதாவது திருத்தத்தை எப்படியாவது நிறைவேற்றுவதே கோதபாயவின் இலக்கு. இதற்காக என்ன விலை (பேரம்) கொடுக்கவும் தயாராகவுள்ளார். இதனை எதிர்க்கும் உள்வீட்டுக்காரரை பழிவாங்கவும் அவர் தயார். ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு மட்டும் அவர் உடன்பாடில்லை. 

எதிர்பாராதவிதமாக வேறு சில கோணங்களிலிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அரசியல் பலம் பெற்ற சிங்கள பௌத்த பீடங்களான அமரபுர மற்றும் ராமன்யா என்பவை இருபதாவது திருத்தத்தை கைவிடுமாறு கோரியுள்ளன. பெருமளவு அரசியல் பலமற்ற கத்தோலிக்க பேராயர் அவையும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளது. 

முன்னாள் அமைச்சர் றிசார் பதியுதின் குடும்ப உறுப்பினரை ஈஸ்டர் குண்டுத்தாக்குதலிலிருந்து விடுவித்ததை கண்டிக்கும் நோக்குடனேயே கத்தோலிக்க அவை இருபதை எதிர்ப்பதாகக் கூறப்படுவதில் உண்மையுண்டு.

இருபதை எதிர்க்கும் இந்த மதபீடங்கள் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருமாறு கேட்டுள்ளன. இதனூடாக வெளிப்படும் உண்மை என்னவெனில், நல்லாட்சி என்ற பெயரிலான முன்னைய ஆட்சிக்காலத்தில் ரணில் - சுமந்திரன் கூட்டில் உருவான அரசியலமைப்பு குளிர்சாதன பெட்டிக்குள் தள்ளப்பட்டுவிட்டது என்பதுதான். 

இதனைக் குறிப்பிடும்போது, கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளர் சுமந்திரனின் பேய்க்காட்டல் பற்றி குறிப்பிட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. 

இரண்டாண்டுகளுக்கு முன்னர் இவர் கனடாவுக்கு நிதி திரட்டும் நோக்குடன் அரசியல் பயணம் மேற்கொண்டபோது அங்குள்ள தமிழ் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த செவ்வியில், அப்போது தயாரிக்கப்பட்டு வந்த அரசியலமைப்பு பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த சுமந்திரன் பின்வரும் கருத்தை வெளியிட்டார்: 

'எனது தொழில் சட்டத்தரணி. நான் அரசியலுக்கு வந்தது தமிழர் பிரச்சனைக்கு தீர்வு தரும் அரசியலமைப்பை உருவாக்கவே. இது நிறைவேறுவதோடு நான் அரசியலுக்கு வந்த வேலை முடிந்துவிடும். அதன்பின்னர் நான் அரசியலிலிருந்து விலகி மீண்டும் சட்டத்தொழிலுக்கு சென்றுவிடுவேன்" என்று சுமந்திரன் கூறியிருந்தார். 

புதிய அரசியலமைப்பு நிறைவேறாமல் போகுமானால் என்ன செய்வீர்களென்று கேட்டபோது, தோல்வியை ஒப்புக்கொண்டு அரசியலிலிருந்து போய்விடுவேன் என்று பதிலளித்தார். 

இரண்டில் எது நடந்தாலும் தனது அரசியல் பயணம் முடிந்துவிடும் என்று சுமந்திரன் இங்கு தெரிவித்தது வரலாற்றுப் பதிவு. அது மட்டுமன்றி தம்மைச் சந்தித்த சிலரிடம் தமது பொக்கட்டுக்குள்ளிருந்து ஒரு கடதாசியை எடுத்துக் காட்டி தன்னுடைய ராஜினாமா கடிதம் தயாராக இருப்பதாகவும் கூறிவந்தார். 

இப்படியெல்லாம் சொன்னவர், சில மாதங்களுக்கு முன்னைய பொதுத்தேர்தலில் மீண்டும் வெற்றி பெற என்னெ;னவெல்லாம் செய்தாரென்பது நிகழ்கால வரலாறு. 

இப்போது இவரது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நவீன அறிவித்தலொன்றை விடுத்துள்ளார். ஆட்சியிலிருக்கும் ராஜபக்ச அரசு தமிழர் முஸ்லிம்கள் மீதான அடக்குமுறையையும் பழிவாங்கலையும் நிறுத்தி, அடுத்த மார்ச் மாதத்துக்குள் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால் சர்வதேச சட்டங்கள் அரசின் மீது பாயுமென்பதே சம்பந்தனின் காலக்கெடுவுடனான அறிவித்தல். 

நல்லாட்சி அரசில் பங்காளிகளாக இருந்தபோது தீபாவளிக்குள் தீர்வு, பொங்கலுக்குள் தீர்வு, புதுவருடத்துக்குள் தீர்வு என்று ஆருடம் கூறி வந்த இவர் இப்போது ஜெனிவாவை இலக்கு வைத்து எச்சரிக்கை வழங்கியுள்ளார். 

மனித உரிமைகள் பேரவையில் அடுத்த கூட்டத்தொடர் மார்ச் மாதத்தில் இடம்பெறும். இப்பேரவையில் இலங்கை மீதான தீர்மானத்துக்கு ஜெனிவாவில் காலநீடிப்பு கொடுத்த  கூட்டமைப்பின் தலைவர், இன்று ஜெனிவாவைக் காட்டி ராஜபக்ச அரசை பயமுறுத்த எத்தனிப்பது நகைப்புக்கிடமானது. 

சில வாரங்களுக்கு முன்னர் சுமந்திரன் மகிந்த ராஜபக்சவை தனிமையில் சந்தித்து என்ன பேசினாரென்பதை இதுவரை பகிரங்கப்படுத்தவில்லை. மறுதரப்பில் கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோவின் எம்.பிக்கள் செல்வம் அடைக்கலநாதனும் விநோநாகராதலிங்கமும் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்து என்ன உரையாடினார்கள் என்பதும் வெளிப்படுத்தப்படவில்லை. 

மற்றொரு பங்காளரான புளொட் சித்தார்த்தன் என்ன செய்கிறாரென்பது தெரியவில்லை. இருபதாவது திருத்தத்தை நிறைவேற்ற அரசுக்கு ஆதரவாக தமிழர் தரப்பில் கறுப்பு ஆடுகள் இருப்பதாகவும் சில ஊடகங்கள் கூறுகின்றன. 

இந்த மாதம் இருபதாம் திகதி நாடாளுமன்றத்தில் இருபதாம் திருத்தம் தொடர்பான நீதிமன்றத்தின் அறிவிப்பு சமர்ப்பிக்கப்படும். இதனைத் தொடர்ந்து குறுகிய கால விவாதம் இடம்பெறலாம். 

இருபதை உள்வீட்டுக்குள் இருந்தவாறே எதிர்ப்பவர்களுள் வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, விஜேதாச ராஜபக்ச, கெவிந்து குமாரதுங்க, விதுர விக்கிரமநாயக்க ஆகியோர் முக்கியமானவர்கள். 

பிரதமரை ஒரு வருடத்தில் பதவி நீக்குவது, இரட்டைப் பிரஜாவுரிமைக்காரை தேர்தலில் போட்டியிட அனுமதிப்பது என்பவைகளையே இவர்கள் எதிர்ப்பதாகக் கூறினாலும், கோதபாய என்ற தனியொருவரிடம் அதிகாரங்கள் குவிவதையிட்டு அச்சமடைகிறார்கள். 

இந்த மாதம் 16ம் திகதி அலரி மாளிகையில் மகிந்த ராஜபக்ச தமக்கு நெருக்கமான எம்.பிக்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார். இதனை எப்படியோ மணந்து பிடித்த கோதபாய அறைக்குள் புகுந்து தலைமைக் கதிரையில் அமர்ந்து மகிந்தவை ஓரங்கட்டினார். 

கோதபாயவின் வியத்மக அமைப்பினூடாக தேசியப் பட்டியல் எம்.பியான கெவிந்து குமாரதுங்க எழுந்து நின்று ஆக்ரோசமாக இருபதின் சில அம்சங்களை எதிர்த்து உரையாற்றுகையில், அவரை நோக்கி தனது விரலை நீட்டி, பேசாமல் வாயை மூடு என்ற பாணியில் கோதபாய அவரை அடக்கினார். 

இருபதை ஆட்சேபித்து கருத்துக் கூறிய வாசுதேவ நாணயக்காரவும் விமல் வீரவன்சவும் கோதபாய முன்னால் தலைவணங்கிய நிலையில் தாங்கள் இருபதை ஆதரித்து வாக்களிக்கப் போவதாகக் கூறியதோடு எதிர்ப்பலை ஓய்ந்தது. எதிர்த்தால் அமைச்சுப் பதவி பறிபோகும், ஊழல் விசாரணைகளுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பது அவர்களுக்குத் தெரியும். 

அமைச்சர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த விஜேதாச ராஜபக்ச அந்த விரக்தியால்தான் இருபதை எதிர்க்கிறாராம். 

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு 150 வாக்குகள் தேவை. ஐக்கிய தேசிய கட்சியும், ஜனபல பக்சய கட்சியும் இதுவரை நியமன எம்.பிக்களை அறிவிக்காததால் இப்போது மொத்த எம்.பிக்களின் எண்ணிக்கை 223 மட்டுமே. எனவே 149 ஆதரவே இருபதை நிறைவேற்றத் தேவை. அது கோதாவிடம் உள்ளது. சறுக்கினால் அதற்கானவர்களை பசில் தயாராக வைத்திருக்கிறார். 

இந்தச் சூத்திரம் தெரிந்ததால் மகிந்த, ரணில், சஜித் ஆகியோர் மௌனராகம் வாசிக்கின்றனர். 

இருபது நிறைவேறினால் வரப்போவது இருண்ட ஆட்சிதான். அதற்குள் அடியும் முடியுமாகத் தேடினாலும் ஜனநாயகத்தைக் காணமுடியாது. ஜே.ஆரை(ஜெயவர்த்தன) விஞ்சிய ஜி.ஆரையே (கோதா) அங்கு காணமுடியும். 

No comments