சுமூகமாக முடிந்தது சி.வி - டெனீஸ் விவகாரம்?

நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரனிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை மனுதாரரும் வட மாகாண முன்னாள் அமைச்சருமான டெனிஸ்வரன் இன்று புதன்கிழமை வாபஸ் வாங்கியதை அடுத்து நீண்டகாலமாக நடைபெற்றுவந்த இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.

கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இறுதி விசாரணையின் இரண்டாம் நாள் விசாரணை இன்று ஆரம்பமானபோது நேற்றை தினம் முன்வைத்த விசாரணைகளில் ஒன்றை தவிர ஏனையவற்றை தாங்கள் முன்வைக்கவில்லை என்றும் சமரசத்துடன் இந்த வழக்கை தீர்த்துக்கொள்ளப்போவதாகவும் டெனீஸ்வரனின் வழக்கறிஞர் சுரேன் பெர்னாண்டோ விக்னேஸ்வரனின் வழக்கறிஞர் கனகஈஸ்வரனிடம் தெரிவித்தார். இதனை கனகஈஸ்வரனும் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து நீதிமன்ற அமர்வை 10 நிமிடங்கள் இடைநிறுத்திய நீதிபதிகள் தமக்குள் இந்த விடயத்தை தமக்குள் ஆலோசித்து இரண்டு தரப்பினரினதும் இணக்கப்பாட்டை ஏற்றுக்கொண்டு வழக்கை முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இதற்கமைய, அமைச்சரவையை பதவிநீக்கியது தவறு என மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விக்னேஸ்வரன் தரப்பு வாபஸ் பெறவுள்ளது.

இந்த வழக்கின் பின்னர் தனது முகநூலில் பதிவு ஒன்றை இட்டிருக்கும் டெனிஸ்வரன்

” எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

எமது இனத்தின் ஒற்றுமைக்காக எதையும் செய்வேன். அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்……..” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments