மரியசுரேஸ் ஈஸ்வரிக்கு விசாரணை அழைப்பு?


முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

முல்லைத்தீவு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக கடந்த 2017 மூன்றாம் மாதம் 8 ஆம் திகதியிலிருந்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந் நிலையில் குறித்த போராட்டத்தை வழி நடத்திச் செல்கின்ற முல்லைத்தீவு மாவட்டத்தினுடைய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் உடைய இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி  யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்

குறித்த விடயம் தொடர்பில் ஏற்கனவே குறித்த செய்தியை சேகரித்த ஊடகவியலாளர் பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைத்து விசாரணை செய்யப்பட்டிருந்தார்

அதன் தொடர்ச்சியாக குறித்த ஊடக சந்திப்பை நடத்திய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரி அவர்களை கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்

குறித்த விடயம் தொடர்பில் மரியசுரேஷ் ஈஸ்வரி அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு கொழும்புக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தபோது அவர் தன்னுடைய குடும்ப நிலைமை காரணமாக கொழும்பு வர முடியாது என மறுப்பு தெரிவித்திருக்கிறார்

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் ஊடாக அவருக்கு நேற்று விசாரணைக்கு அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது

இதனடிப்படையில் நாளை 17ம் திகதி முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


No comments