திலீபன் நினைவு நாளில்! ஐ.நா முன் போராட்டம்!

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனிவா ஐ.நா.முன்றலில் இன்று நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் அணிதிரண்ட நூற்றுக்கணக்கான மக்கள்.

பிற்பகல் 14:30 மணியளவில் ஆரம்பமான கவனயீர்ப்பு போராட்டத்தில் சுமார் ஒருமணி நேரமாக தமிழ் உறவுகள் நீதி கேட்டு உரத்தகுரலில் உரிமைக்குரல்களை எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

ஈகைப்பேரொளி முருகதாசன் உயிர் பிரிந்த இடத்திலிருந்து தியாகதீபம் திலீபனின் தியாகத் திருவுருவப்படம் பதித்த பீடத்தை உணர்வாளர்கள் கைகளில் தாங்கியவாறு முன்செல்ல, அதன் பின்னால் மக்கள் அணிவகுத்து "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என்ற கோசத்துடன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் உயிர் பிரிந்த இடத்தில் அமைக்கப்பெற்ற பிரத்தியேக அரங்கை நோக்கி எடுத்து வந்தனர்.

பொதுச்சுடரேற்றல், தமிழீழ தேசியக் கொடியேற்றல், தியாகதீபம் திலீபன்  மற்றும் ஈகைப் பேரொளிகளுக்கான ஈகைச்சுடரேற்றல், மலர்மாலை அணிவித்தல், அகவணக்கம் செலுத்துதல் ஆகியவற்றுடன்  நிகழ்வுகள் ஆரம்பமாகின.

தொடர்ந்து பிரகடனம் வாசிக்கப்பட்டதுடன், மனிதநேயப் பயணம் தொடர்பான சிறிய தொகுப்பு என்பவற்றுடன் 

ஆங்கிலம், பிரெஞ்ச், தமிழ் மொழிகளில் தமிழின அழிப்புக் குறித்த உரைகள் இடம்பெற்றன. 

அத்தோடு ஐ.நா மனித உரிமையாளர் அலுவலத்துடன் ஏற்பட்ட சந்திப்பு தொடர்பான தொகுப்பும் இடம்பெற்றதோடு, நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் இசைக்கப்பட்டு இறுதியாக தமிழீழ தேசியக்கொடி கையிலேந்தலுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றன.

கொரேனா தொற்று உச்சம் பெற்றிருக்கும் இந்நிலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் பல நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு தமது உணர்வினை வெளிப்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

No comments