திலீபன் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை!!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு யாழ்பாணம் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இன்று யாழ்ப்பாணம் காவல்துறையினரால் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்குமாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் மணிவண்ணன் உட்பட 20 பேர்கள் மீது பிரதிவாதிகளாக பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தபோதும், இந்த வழக்கு தொடர்பில் குறித்த நபர்களுக்கு எதுவித அறிவித்தல்களும் கிடைக்கப்பெறவில்லை.

இதனையடுத்து நீதிமன்றில் சட்டத்தரணிகளான மணிவண்ணணும், சுகாஸ் அவர்களும் முன்னிலையாகியிருந்தனர்.

காவல்துறையினரின் முறைப்பாட்டை நிராகரிக்கும் வகையில் குறித்த சட்டத்தரணிகளால் விண்ணப்பம் வைக்கப்பட்டது.

காவல்துறையினர் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதிகளை நினைவுகூருவதாகவும், நினைவேந்தலால் கொரொனா பரரும், விடுதலைப் புலிகளின் மீளெழுச்சிக்கு துணை போவதாகவும் காரணங்களை முன்வைத்தார்கள்.

இதேநேரம் இக்காரணங்களை மறுத்தலித்த மணிவண்ணன் மற்றும் சுகாஸ் தங்களின் நியாயமான கருத்துக்களை முன்வைத்தார்கள்.

திலீபன் மக்களுக்காக அகிம்சை வழியில் உயிர் நீத்த ஒருவர். திலீபன் உயிரிழந்த நேரம் ஒரு சமாதான காலம். இலங்கை இந்தியா ஒப்பந்தம் நிலவிய காலம். அக்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்கவில்லை.  இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார்கள். அந்த வகையில் தீலீபன் அவர்கள் தடைசெய்யப்பட்ட நபர் இல்லை.அவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் எவையும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வகைப்படுத்த முடியாக கோரிக்கைகள் எனவும் நீதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.

இதேபோன்று கடந்த வருடங்களிலும் குறித்த நினைவேந்தல்களை தடை செய்ய முன்பட்ட போதும், நீதிமன்றம் அனுமதித்திருந்தது. நினைவேந்தல் நிகழ்வுகள் சுமூகமாக நடைபெற்றிருந்தன. மக்கள் அமைதியாகவும் எழுச்சியாகவும் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வை நடத்தியிருந்தார்கள்.

திலீபன் அவர்களின் நினைவாலயம் புனரமைப்பதற்கு அமைச்சரவை ஒப்புதலுடன் நிதி ஒதுக்கீடு செய்திருந்ததது என்ற விடயத்தையும் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இருந்தபோதிலும் நீதிமன்றினால் எங்களின் வாதங்கள் மறுக்கப்பட்டு கால்துறையினர் கோரியது போன்று திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனைய பிரதிவாதிகளுக்கும் உடனடியாக தகவலை தெரிவிக்குமாறு நீதிமன்றினால் பணிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கம் செய்யும் நிகழ்வு இல்லை என்றும் இந்நிகழ்வு முற்றிலும் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடித்து நடைபெறும் எனவும் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்ற போதும் நிகழ்வை நீதிமன்றம் தடை செய்துள்ளது.

இத்தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக சட்த்தரணி மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

No comments