பனங்காட்டான் எழுதிய ''இந்திய அரசின் மறைமுகத்தை துகிலுரித்த தியாகியின் காலம் - 2''


1987 செப்டம்பர் 28ம் திகதி, அதே சுதுமலை அம்மன் கோவில் முன்றலில் திலீபனின் தியாகத் திருவுடல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கையளிக்கப்பட்டது. தேசியத் தலைவரின் அதிகாரப்பூர்வ கடிதத்தை மூத்த போராளிகளான சங்கரும் தேவரும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ். சிவபாலனிடம் கையளித்து திருவுடலை ஒப்படைத்தனர். 33 வருடங்களின் பின்னர் திலீபனின் தியாக மரணத்தைக் கொச்சைப்படுத்தும் சிங்கள தேசம், தங்கள் அரசாங்கத்தின் ஆளுமையிலுள்ள பல்கலைக்கழக நிர்வாகத்துடன் தங்கள் கூற்றின் உண்மையை பரீட்சித்துப் பார்ப்பது காலத்தின் தேவை மட்டுமன்றி அவசியமும்கூட. 

1987 செப்டம்பர் 16ம் திகதி - திலீபன் நீராகாரமுமின்றி உண்ணாவிரதம் ஆரம்பித்த இரண்டாம் நாள். 

அன்றைய நாள் வழமையான ஒரு பொழுதாக விடியவில்லை. அதிகாலையில் இருந்தே விடுதலைத் தாக பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. ஆலய மணிகள் ஒலிக்கும் நல்லூர் சுற்றாடல் விடுதலை நாதத்துடன் அன்று விடிந்தது. 

எனது வீடு கோவில் வீதியில் நல்லூர் கோவிலுக்கு ஒரு மைல் தூரத்துக்குள் இருந்ததால், திலீபனின் உண்ணாவிரதம் காரணமாக குடாநாட்டில் சற்று வித்தியாசமான ஒரு உணர்வலை உருவாகியிருப்பதை உணர முடிந்தது. 

காலை பத்து மணியளவில் முரசொலி பத்திரிகை அலுவலகம் செல்வதற்கு முன்னர் திலீபனைச் சென்று பார்க்க மனம் விழைந்தது. சுமார் ஒரு மணி நேரம் அந்த மேடைக்கருகே நின்றிருந்தேன். 

கோவிலின் நான்கு வீதிகளும் மக்கள் திரட்சியால் முட்டி வழிந்தது. வவுனியா, மன்னாரிலிருந்து தனியார் வாகனங்களிலும் பேருந்துகளிலும் ஆயிரக்கணக்கான மக்கள் நல்லூர் நோக்கி குவிந்து கொண்டிருந்தனர். 

மாணவரின்மையால் குடாநாட்டின் பாடசாலைகள் தாமாகவே மூடப்பட்டன. சீருடையில் வந்த மாணவர்கள் வரிசையாக நின்று உண்ணாவிரதப் போராளிக்கு கைகூப்பி வணக்கம் செலுத்திச் சென்றனர். 

உரையாற்றுபவர்களுக்கென உண்ணாவிரத மேடைக்கருகே தனியாக இன்னொரு மேடை அமைக்கப்பட்டிருந்தது. கவிஞர் காசி ஆனந்தன் அங்கு உரையாற்றினார். மிகப்பெருமளவான மாணவர் அறிவுபூர்வமாக செய்திகள் கூறினர். மாணவமணிகள் பலர் எதனையும் எழுதி வாசிக்காது சுயமாகக் கவிமழை பொழிந்து திலீபனை நிமிரச் செய்தனர். 

பணிக்கென நின்ற போராளிகள் பலர் அடிக்கடி திலீபனின் உடல்நிலையைக் கவனித்தவாறு இருந்தனர். நீராகாரம் இன்மையால் சிறுநீர் கழிக்க வருந்தினார் எனினும் அன்றைய பத்திரிகைகளை படிப்பதை நிறுத்தவில்லை. ஓரிரு நிமிடங்கள் அன்று உரையாற்றினார். 

நான் அலுவலகம் சென்றபோது எனக்கு பெருவியப்பு காத்திருந்தது. கொழும்பில் ஆங்கில பத்திரிகைகளில் கடமையாற்றிய விஜித யாப்பா, காமினி வீரக்கோன், அஜித் சமரநாயக்க உட்பட பல பத்திரிகை நண்பர்கள் அடுத்தடுத்து தொலைபேசியில் தொடர்புகொண்டு உண்ணாவிரத தகவல்களைப் பெற்றனர். நான் முன்னர் கொழும்பு ஊடகங்களில் பணியாற்றிய காலத்து நண்பர்கள் இவர்கள். 

யாழ்ப்பாணம் சுபாஷ் விடுதியில் தங்கியிருந்த சில இந்திய பத்திரிகை - வானொலிச் செய்தியாளர்களும் நேரடியாக அலுவலகம் வந்து விபரங்களைப் பெற்றனர். 

எந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்ய வேண்டுமென இலங்கை - இந்திய அரசுகள் திட்டம் போட்டு மறைக்க முனைந்தனவோ, அவைகளை வெளிவரச் செய்வதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தை என்னால் நிறைவேற்ற முடிந்தது திருப்தியைத் தந்தது. 

அன்றிரவும் தேசியத் தலைவர் திலீபனிடம் சென்று சிறிது நேரம் பேசிச் சென்றதாக அங்கிருந்த எனது பத்திரிகைச் செய்தியாளர்கள் தெரியத்தந்தனர். இரவு சுமார் ஒரு மணியளவில் நான் அவ்விடம் சென்றபோது திலீபன் களைத்து அயர்ந்து காணப்பட்டார். சாதுவான மழைத்தூறலும் குளிருமாக இருந்ததால் அவர் மீது போர்வையிடப்பட்டிருந்தது. 

இப்பத்தியின் விரிவஞ்சி அடுத்த பத்து நாட்களின் முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன். (நான் எழுத ஆரம்பித்திருக்கும் திலீபன் பற்றிய நூலில் அனைத்தும் விபரமாகத் தரப்படும்).

ஒவ்வொரு நாளும் காலையில் அலுவலகம் செல்லும்போதும் நள்ளிரவு வீடு திரும்பும் போதும் தவறாது திலீபனைத் தரிசித்துச் சென்றதால், இந்தப் போராட்டத்தின் முடிவு திலீபனின் துணிகரமான விருப்பத்துடன் அமைந்துவிடுமோ என்ற சிந்தனை எனக்குள் வளர்ந்தது. அந்தப் பன்னிரண்டு நாட்களும் நான் எழுதிய ஆசிரியர் தலையங்கங்களில் இதனைப் படிமுறையாக குறிப்பிட்டு வந்தேன். 

ஏழாம் நாள் எழுதிய தலையங்கத்தின் தலைப்பு, 'திலீபனுக்கு ஏதாவது நிகழ்ந்தால் இந்தியாவே பொறுப்பு" என்பது. இது கொழும்பிலிருந்த இந்தியத் தூதரகம்வரை சென்று அன்று பிற்பகலே எனக்கு எச்சரிக்கை மணியை அடித்தது. இதனுடன் சம்பந்தப்பட்ட தூதரக குடும்ப அதிகாரி தற்போது இந்திய மோடி அரசாங்கத்தில் ஓர் ராஜாங்க அமைச்சராகவுள்ளார். 

அதேபோல எங்களின் பத்திரிகைச் செய்திகளை உன்னிப்பாகக் கவனித்து அவை பற்றி மேலிடத்துக்கு தகவல்களை வழங்கிய இந்திய புலனாய்வுத்துறை அதிகாரி இப்போது இலங்கை விவகாரங்களின் கட்டுரையாளராகவும் விமர்சகராகவும் இயங்குகிறார். இவை பற்றி பின்னொரு கட்டுரையில் பார்க்கலாம். 

இந்தியாவும், இந்தியத் தூதுவரும் திலீபனின் உண்ணாவிரதத்தை பாராமுகமாகக் கையாண்டனர். ஆனால் குடாநாட்டிலிருந்த இந்திய ராணுவக் கேர்ணல் தரார், மற்றொரு உயர் அதிகாரியான கோவாவைச் சேர்ந்த பெர்னான்டஸ் ஆகியோர் வெவ்வேறு நாட்களில் திலீபனைப் பார்க்க வந்தனர். 

திரண்டிருந்த மக்களுக்கு இது நம்பிக்கையை ஏற்படுத்தியதாயினும் அப்படி எதுவும் நடக்கவில்லை. பெர்னான்டஸ் வருகை தந்தபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு கல் அவரது மணிக்கட்டைப் பதம் பார்த்தது. நிலைமையை உணர்ந்த அவர், 'மக்கள் மிகவும் கொதிப்படைந்திருப்பதை உணர்கிறேன்" என்று கூறியவாறு மெதுவாக அங்கிருந்து அகன்று விட்டார். 

இந்தியத் தூதுவர் டிக்சிற் பாதுகாப்பு அதிகாரி கப்டன் குப்தா சகிதம் 22ம் திகதி யாழ்ப்பாணம் வருவதாக கிடைத்த ஒரு தகவல் அன்றைய நாள் முரசொலியின் தலைப்புச் செய்தியாக இடம்பெற்றது. இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பின்னணியில் இருந்து இயக்கிய டிக்சிற் நேரில் வருவதால் தமது அரசின் சார்பில் திலீபனை வந்து பார்த்து உறுதிமொழி வழங்குவார் - திலீபனின் உயிர் பறிபோகாது தடுக்கப்படும் என்ற நம்பிக்கையை இந்தச் செய்தி மக்களுக்கு வழங்கியது. 

வழமையிலும் பார்க்க மிகமிக அதிகமான மக்கள் யாழ்ப்பாணத்து வீதிகள் எங்கும் திரண்டிருந்தனர். அதேசமயம் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் டிக்சிற் நல்லூர் வரலாமென நம்பி வாகனப் போக்குவரத்துக்கு ஏற்றதாக வீதிகளை நேர்படுத்தியிருந்தனர். பலாலியில் வந்திறங்கிய டிக்சிற் அங்கிருந்த இந்திய ராணுவத் தலைமையகத்தில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கத்தையும் சந்தித்துப் பேசினார். 

ஏறத்தாழ இரண்டு மணிநேரம்வரை இச்சந்திப்பு இடம்பெற்றது. பலாலிக்கு அனுமதிக்கப்பட்ட (பேச்சுவார்த்தை மண்டபத்துக்குள் அல்ல) பத்திரிகையாளர்களில் நானும் ஒருவன். இச்சந்திப்பு முடிவடைந்து வெளியே வரும்போது தேசியத் தலைவரதும் அரசியல் ஆலோசகரதும் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லையென்பதை அவர்களது முகபாவம் காட்டியது. 

தமிழ் மக்களை இந்திய அரசுக்கு எதிராகத் தூண்டி விடுவதற்காகவே திலீபனின் உண்ணாவிரதத்தை விடுதலைப் புலிகள் ஏற்படுத்தியதாக எடுத்த எடுப்பிலேயே டிக்சிற் குற்றச்சாட்டை இச்சந்திப்பில் முன்வைத்தார். உண்மை அப்படியல்ல என்பதை தெளிவுபடுத்திய தேசியத் தலைவர் மிகமிகப் பொறுமையாக திலீபன் எடுத்த முடிவை விளக்கிய போதிலும் டிக்சிற் அதனை ஏற்கவில்லையென்பதை அவரது உடல்மொழி வெளிப்படுத்தியது. 

நல்லூருக்கு நேரடியாக வந்து மரணித்துக் கொண்டிருக்கும் திலீபனிடம் இந்தியாவின் கடப்பாட்டுக்கான உறுதிமொழிகளைத் தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை டிக்சிற் ஏற்கவில்லை. தமது வழமையான திமிர்த் தன்மையையும், வளைந்து கொடுக்காத இறுக்கப் போக்கையும் காட்டியவாறு, 'அது தனது யாழ்ப்பாண விஜயத்தின் அதிகாரத்துள் (கட்டளைக்குள்) இல்லை" என்று கூறிவிட்டு டிக்சிற் கொழும்பு திரும்பிவிட்டார். இதனை, அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் தமது பதிவொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்: 

'Mr. Pirabakaran shown remarkable patience and pleaded with the Indian diplomat to pay a visit to Nallur and talk to the dying young man to give up his fast by assuring him that India would fulfil its pledges. Displaying his typical arrogance and intransigence, Mr. Dixit rejected the LTTE leader's plea, arguing that it was not within the mandate of his visit". 

முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதோடு தாமே எல்லாம் என்று மமதையில் செயற்படுபவரான டிக்சிற் தமக்கு நெருக்கமான சிலருடனான சந்திப்பில் வேறுவிதமாக இதற்கு விளக்கம் கொடுத்தார். 'நான் திலீபனைச் சென்று சந்தித்து அவருக்கு பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தை முடிக்க தனிப்பட்ட முறையில் விரும்பியிருந்தேன். ஆனால் அந்த பழசர கிளாஸை எனது முகத்தில் வீசி எறிய அங்கு திட்டமிடப்பட்டிருந்ததாக எனக்கு புலனாய்வுத் தரப்பு தெரிவித்திருந்தது. அவ்வாறு நடைபெற்றிருந்தால் நான் பெரிதுபடுத்தியிருக்க மாட்டேன். ஆனால் அது இந்திய நாட்டை அவமானப்படுத்தியதாக அமைந்திருக்கும்" என்று வசதி கருதிய பொய்யைக் கூறி தம்மை நீதியானவராகக் காட்ட முயற்சித்தார். 

உண்ணாவிரத காலத்தில் குறிப்பிடப்பட வேண்டிய அரசியல் விவகாரங்களும் உண்டு. சிங்கள அரசியல்வாதிகளில் வாசுதேவ நாணயக்கார திலீபனை நேரில் வந்து பார்வையிட்டார். தமிழ் மக்களின் தலைவர்களென்று அன்றும் இன்றும் கூறிக்கொள்ளும் தமிழரசுக் கட்சியினரோ தமிழர் விடுதலைக் கூட்டணியினரோ அந்தப் பக்கமே வரவில்லை. 

இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக உறவாடிய இவர்கள் பின்னர் இ;ந்திய அரசின் கைக்கூலிகளாகவும் பொம்மைகளாகவும் இயங்கிய ஆயுதக் குழுக்களுடன் இணைந்து தேர்தல்களில் போட்டியிட்டதும், மண் கவ்வியதும், ஒற்றைத் தேசியப் பட்டியலூடாக நாடாளுமன்றக் கதிரையில் அமர்ந்ததும் இன்னொரு தனி வரலாறு. 

ஒவ்வொரு நாளும் வேகமாகச் செல்ல திலீபனின் உடல்நிலையும் மோசமாகிச் சென்றது. களைப்புற்று மயக்க நிலைக்கு வந்தபோதிலும் மருத்துவ சோதனை செய்ய வைத்தியர்களை அவர் அனுமதிக்கவில்லை. உண்ணாவிரதம் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவர் விதித்த நிபந்தனைகளில் இது முக்கியமானது. 

செப்டம்பர் 26ம் திகதி - 12ம் நாள். இந்நாளை மீள்நினைவுக்கு உட்படுத்துவதற்கு முன்னர் திலீபனின் இளம்பராயம், குடும்பம் பற்றி சிறிது குறிப்பிட வேண்டும். இவரது தந்தையார் இராசையா ஆசிரியராகக் கடமையாற்றிய நல்லதொரு பண்பாளர். தாயார் பெயர் பர்வதபத்தினி. தந்தை ஊரெழுவையும், தாயார் உரும்பிராய்க்கு அருகிலுள்ள கரந்தனையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். 

திலீபனுக்கு மூன்று அண்ணன்மார். இளங்கோ, நம்பி, அசோகன் என்பது இவர்கள் பெயர். கனடாவில் வசிக்கும் இவர்களின் இளைய சகோதரனாகப் பிறந்தவர் பார்த்திபன். இவர் தமக்கு விரும்பியிட்ட பெயர் திலீபன். தங்களின் நான்கு மகன்மாருக்கும் பெற்றோர் வழங்கிய பெயர்கள் வழியாக அவர்களின் வரலாற்றுப் பார்வையை புரிந்து கொள்ளலாம். 

திலீபன் பதினொரு மாதக் குழந்தையாக இருக்கும்போது தாயார் (29 வயது) காலமானார். பாடசாலைக்குச் செல்ல வேண்டும், இளைய மகனையும் வளர்க்க வேண்டுமென்ற நிலையில் தமது மனைவியின் இளைய சகோதரியான சிவமலரிடம் திலீபனை தந்தை ஒப்படைத்தார். மூன்றரை வயதுவரை கரந்தனில் உள்ள சிறிய தாயாருடன் வளர்ந்து வந்தார் திலீபன். பின்னர் தந்தையுடன் சென்று அவர் ஆசிரியராகப் பணியாற்றிய உரும்பிராய் சைவப்பாடசாலை, சந்திரோதய வித்தியாலயம் ஆகியவற்றில் ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்டு யாழ். இந்துக் கல்லூரியில் இணைந்தார். 

1983 இனவழிப்பில் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் வந்த மக்களுக்குச் சேவையாற்றச் சென்ற திலீபன், அப்படியே விடுதலைப் போராளியானார். இனப்பற்றும், தேசிய உணர்வும், செறிவான அரசியற் சிந்தனையும் குறுகிய காலத்தில் இவரை அரசியற் பொறுப்பாளராக்கியது. 'அவன் எதனைச் செய்தாலும் சரியாகவே செய்வான்" என்ற மூத்த சகோதரர்களின் நம்பிக்கை பொய்யாகவில்லை. 

உண்ணாவிரதப் பன்னிரண்டு நாட்களும் நல்லூர் கோவில் தேரடியின் வடக்குப் புறமாக ஒருவர் சப்பாணி கட்டி அமர்ந்தவாறு நிலம் நோக்கி அமைதியாக இருப்பார். முழுநாளும் உணவெதுவும் உட்கொள்ளாது நி~;டையில் அவர் இருந்ததாக அவரது உற்ற நண்பரான சுப்பையா குமாரவேல் (கல்வி அமைச்சில் பணிபுரிந்தவர்) ஒரு தடவை என்னிடம் கூறினார். 

முற்றும் துறந்த முனிவர் நிலையில் அவ்வாறு இருந்தவர் திலீபனின் தந்தை. அவ்வப்போது வேறு சில நண்பர்களும் சக ஆசிரியர்களும் அவரருகே இருப்பார்கள். 

ஓர் இரவு அந்தத் தந்தையுடன் ஒரு சில நிமிடம் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. உண்ணாவிரத மேடையருகே செல்லாமல் தேரடியில் மட்டும் அமர்ந்திருப்பதை அந்தத் தந்தை சில வார்த்தைகளில் கூறினார். 'நான் மேடையருகே சென்று கண்படும் தூரத்தில் இருவரும் நேருக்கு நேராகப் பார்க்க நேர்ந்தால், தந்தை மகன் உறவுப்பாசம் அவன் மேற்கொண்டிருக்கும் தவத்தை நிலைகுலையச் செய்துவிடும். அதனை நான் ஒருபோதும் செய்யக்கூடாது" என்ற அவரது வார்த்தை, தனது மகனின் முடிவு தரக்கூடிய வேதனையையும், மகனின் முடிந்த முடிவுக்கு வழங்கும் உயர் மரியாதையையும் ஒருவழிப் பாதையில் சந்திப்பதாக அமைந்திருந்தது. 

பன்னிரண்டாம் நாள் - 26ம் திகதி, வழமைக்கு முற்றிலும் மாறாக இனந்தெரியாத பரபரப்பு எங்கும் காணப்பட்டது. திரண்டிருந்த மக்கள் தத்தம் வழிபாட்டுக்குரிய வாசகங்களை உச்சத்தொனியில் ஓதிக் கொண்டிருந்தனர். அதற்கூடாக அடையாளம் புரியாத அமைதி நிலவியது. 

திலீபன் கண்களை மூடியவாறு ஆடாமல் அசையாமல் மேல்நோக்கியவாறு படுத்திருந்தார். மேடையின் மேற்குப்புறத்தில் விடுதலைப் புலிகளின் இலச்சனை பொறித்த கொடி தன் பங்குக்கு அமைதியாகத் தொங்கிக் கொண்டிருந்தது. போராளிகள் பலர் ஒருவர்பின் ஒருவராக வருகை தந்தவாறிருந்தனர். 

சுமார் பத்தரை மணியளவில் யாழ். பொதுமருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் சபாரத்தினம் சிவகுமாரன் மேடையருகே வந்து, தமது பாதணிகளை வெளியே கழற்றிவிட்டு, எவருடனும் உரையாற்றாது நேரே சென்று திலீபனின் கையைத் தூக்கி நாடி பார்க்கிறார். சில நிமிடங்களின் பின்னர் மெதுவாக அந்தக் கையை திலீபனின் மார்பின் மீது வைத்துவிட்டு, தமது இரு கைகளையும் கூப்பி வணக்கம் செய்கிறார். திலீபனுக்கு புறமுதுகு காட்டாது தமது கைகளைக் கூப்பியவாறே பின்புறமாக நடந்து சென்று மேடையை விட்டு இறங்குகிறார். 

நேரம் காலை 10 மணி 58 நிமிடம். 

தொடர்மலைகள் புரண்டது போன்று, புயலும் சூறாவளியும் திரண்டடித்தது போன்று, சோளகக் காற்றுடன் காட்டுமழை பொழிந்ததைப் போன்று ஓவென்ற அழுகுரல் வானத்தைப் பிளந்து மேலே செல்கிறது. 

''ஓ மரணித்த வீரனே! உன் சீருடைகளை எனக்குத் தா'' என்ற பாடல் மீண்டும் மீண்டும் ஒலித்துத் தொடராகிறது. தனது இலட்சியப் பயணத்தில் திலீபன் வென்றுவிட்டான். அவனின் மரணம் தியாகம் என்ற வரலாற்றின் முன்னுதாரணமானது. 

இரண்டு நாட்களின் பின்னர், செப்டம்பர் 28ம் திகதி - பொழுது சாயும் நேரத்துக்கு சிறிது முன்னர், அதே சுதுமலை அம்மன் கோவில் முன்றல். 

இந்தியாவிடம் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஒப்படைக்கிறேன் என்று இரண்டு மாதங்களுக்கு முன்னர் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பல்லாயிரம் மக்கள் முன்னிலையில் எடுத்தியம்பிய அதே சுதுமலை அம்மன் கோவில் முன்றலில், திலீபனின் தியாகத் திருவுடல் அவரது விருப்பினை நிறைவு செய்யும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கையளிக்கப்பட்டது. 

தேசியத் தலைவரின் ஒப்பமிடப்பட்ட அதிகாரபூர்வ கடிதத்தை விடுதலைப் புலிகளின் மூத்தவர்களான சங்கரும் தேவரும் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ். சிவபாலனிடம் கையளித்ததைத் தொடர்ந்து தியாகத் திருவுடல் மருத்துவ பீடத்துக்கு சொந்தமாகியது. தியாகி திலீபன் அணிந்திருந்த கண்ணாடி, சீருடைத் தொப்பி போன்றவைகளை போராளி காந்தன் பக்குவமாகத் தன் கைகளால் ஏந்தி பொறுப்பேற்றார். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் (தற்போது உலகின் பல பாகங்களிலும் மருத்துவர்களாக உள்ளனர்) உட்பட விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான ராஜன், வாஞ்சி உட்பட பலர் இந்நிகழ்வில் பங்குபற்றினர். 

யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக அப்போது பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (எழுத்தாளர் நந்தி) பணியாற்றினார். மருத்துவ பீடத்தின் உடற்கூற்றியல் ஆய்வுப் பிரிவுக்கு தியாகியின் திருவுடல் மாணவர் கற்கைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. 

குறிப்பு: யாழ்ப்பாண பல்கலைக்கழகம் இலங்கை அரசாங்கத்தின் ஆளுமைக்கும் நிர்வாகத்துக்கும் உட்பட்டது. திலீபன் தியாகியாகி முப்பத்து மூன்று ஆண்டுகளின் பின்னர் அந்தத் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும் சிங்கள அரசியல்வாதிகளும், ராணுவத்தினரும் தங்கள் கூற்றின் உண்மைத் தன்மையை அரசாங்கத்தின் கீழுள்ள பல்கலைக்கழகத்தில் பரீட்சித்துப் பார்ப்பது காலத்தின் தேவை மட்டுமன்றி அவசியமும்கூட.

No comments