மணி காங்கிரஸில் இல்லை?



தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி. மணிவண்ணனை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின்

உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் , ஊடக பேச்சாளருமாக இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் மத்திய குழு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூம் செயலி ஊடாக கூடி தீர்மானம் எடுத்தது. தீர்மானம் எடுக்கப்பட்டு இரு தினங்களுக்கு பின்னரே தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால் தமது தீர்மானம் குறித்து மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது. 

கட்சியின் பதவிகளில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டமை தொடர்பில் கடும் சர்ச்சைகள் எழுந்தன. மணிவண்ணனுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் குரல் கொடுத்தனர். 

இதனால் கட்சிக்குள் பிளவு ஏற்படும் நிலைமை தோன்றிய போதிலும் பலரும் கட்சி பிளவு படாது ஒற்றுமையாக பயணிக்க வேண்டும் என விரும்பி தலைவருடன் பேச்சுக்களை நடாத்திய போதிலும் , கட்சி தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எந்த சமரசத்திற்கும் உடன்படாத நிலையில் , சர்ச்சை நீடித்தது. 

இந்நிலையில் கடந்த 22ஆம் திகதி மணிவண்ணன் ஊடகவியலாளர் சந்திப்பினை நடாத்தி இருந்தார் அதில் , "எனக்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் ஜனநாயகத்திற்கு எதிரானது, இயற்கை நீதிக்கோட்பாட்டுக்கு எதிரானது என்பதனால் நான் தொடர்ந்து கட்சியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடக பேச்சாளர் பதவிகளில் தொடர்ந்து நீடிப்பேன் என தெரிவித்திருந்தார். 

தற்போது மீண்டும் மத்திய குழு சூம் செயலி ஊடாக கூடி மணிவண்ணனை தற்காலிகமாக உறுப்புரிமையில் இருந்து நீக்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

அதேவேளை மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் உள்ளூராட்சி உறுப்பினர்களை பதவி விலகுமாறும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருவதாக நேற்றைய தினம் இணைய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

உறுப்புரிமையில் நீக்கப்பட்டமை தொடர்பில் தனக்கு உத்தியோகபூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை என சட்டத்தரணி வி,மணிவண்ணனை தொடர்பு கொண்டு கேட்ட போது தெரிவித்தார். 

பதவி விலக்கப்பட்டமை தொடர்பில் மத்திய குழு தீர்மானம் எடுத்தது தொடர்பில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இரண்டு தினங்களுக்கு பின்னரே மின்னஞ்சல் மூலம் தலைவர் செயலாளரின் கையொப்பம் இல்லாத நிலையில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு மேலும் இரண்டு நாட்களின் பின்னரே பதிவு தபால் மூலம் உத்தியோகபூர்வ கடிதம் மணிவண்ணனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

இதே போல உறுப்புரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான அறிவிப்பு நாலைந்து நாட்களின் பின்னரே உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

முடிவெடுப்பதில் இருக்கும் வேகம் அறிவிப்பதில் இருப்பதில்லை என கட்சியின் தலைமையை பலரும் குற்றம் சாட்டினாலும், வெளிநாடுகளில் உள்ள தமது ஆதரவாளர்கள் மற்றும் நன்கொடையாளிகளை சமரசம் செய்வதற்காகவே தாமதமாக அறிவிப்புக்களை உத்தியோக பூர்வமாக அனுப்பி வைக்கப்படுவதாக கட்சியுடன் நெருங்கி செயற்படும் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேவேளை மணிவண்ணனின் பதவி பறிப்பு மற்றும் உறுப்புரிமை நீக்கம் என்பவை தொடர்பில் கட்சி மத்திய குழுவை நேரில் அழைத்து கலந்தாலோசிக்க தயாராக இல்லை எனவும் சூம் செயலி மூலம் தீர்மானம் எடுக்கப்படுவது கூட தம்மை யாரும் கேள்விக்கு உட்படுத்த கூடாது எனும் நோக்கத்திற்காகவே என கட்சியின் செயற்பாட்டாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

அத்துடன் தேர்தல் காலத்தில் மணிவண்ணனுக்கு எதிராக கட்சியை சேர்ந்த சிலரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் , கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கடந்த 09ஆம் திகதி மணிவண்ணனும் அவரது நண்பரான சட்டத்தரணி அர்ஜூனாவும் சென்று சந்தித்து முறையிட்டு சில ஆதாரங்களையும் முன் வைத்திருந்தனர். அது தொடர்பில் இதுவரை தலைவர் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்பதும் , மணிவண்ணன் பிரச்சனை தொடர்பில் தாயக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்க முன் வரவில்லை என்பதும் குறிப்படத்தக்கது. 

No comments