நயினை நாகபூசனி ஆலய உற்சவ கலந்துரையாடல்

நயினை  நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த  உற்சவத்தினை  மேற்கொள்ளுதல் தொடர்பான கலந்துரையாடல்  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்  அவர்களின் தலைமையில் நேற்று  (09.06.2020) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இலங்கையின் பிரசித்த ஆலயமான நயினை நாகபூசணி அம்மன்  ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தினை அசாதாரண சூழலில் அரசாங்கங்கத்தினதும்  மற்றும் சுகாதார திணைக்களத்தினதும் அறிவுறுத்தல்களை பின்பற்றி மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பித்து தொடர்ந்து 18 நாட்கள்  இடம்பெறவுள்ளது. குறித்த ஆலய வருடாந்த மகோற்சவத்தில் இவ்வருடம் நயினாதீவு பகுதியிலுள்ளவர்கள்  ஒரு உற்சவ நேரத்தில் 30 அடியார்கள் மட்டும் கலந்து கொண்டு குறித்த உற்சவத்தினை   நடாத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள கொரோனா தாக்க அச்சத்தின் காரணமாக குறித்த நடைமுறை பின்பற்றபடுவதாகவும் குறிப்பாக நயினாதீவு பகுதியானது தனிமையான ஒரு தீவாக இருப்பதன் காரணமாக அந்த பகுதியில் ஏனைய பகுதியை சேர்ந்தவர்களை அனுமதிப்பதன் மூலம் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுவதன் காரணமாக,  இம்முறை நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்திற்கு நயினாதீவிலுள்ள அப்பகுதியைச் சேர்ந்த 30 அடியார்கள் மட்டும் ஒரு தடவையில் ஆலய திருவிழாவில் பங்குபற்ற முடியும். எனவே இம்முறை நயினை நாகபூசணி அம்மன்  ஆலயத்தின் உற்சவத்திற்கு யாழ்மாவட்டம் உட்பட  வெளிஇடங்களைச் சேர்ந்தவர்கள் எவரும் ஆலயத்திற்கு வருவதை இம்முறை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், கொரோனா சமூகத் தொற்றினை தவிர்க்கும் வகையில்  மேலதிக போக்குவரத்து சேவைகளை தவிர்த்தல், அன்னதானத்தினை தவிர்த்தல் வேண்டும் எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
நயினாதீவு ஆலய வருடாந்த உற்சவம்  தொடர்பான  முன்னேற்பாட்டுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட குறித்த தீர்மானங்கள் சுகாதார பிரிவினராலும் பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களினாலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.  இக் கலந்துரையாடலில் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களுடன் அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், வேலணை பிரதேச செயலாளர், பொலிஸார், கடற்படையினர் மற்றும் அதிகாரிகள்  கலந்து கொண்டார்கள்.

No comments