வடமராட்சி கிழக்கில் போராட்டம்:முன்னணியும் இணைவு!


வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென் இலங்கை மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் சங்கங்களின் சமாசத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. மீனவர்கள் தமது கடல் வளங்கள் மீன் வளங்கள் என்பன இதனால் அழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினர். இதில் மீனவர் சமாசத்தால் மகஜர்கள் கையளிக்கப்பட்டிருந்தது.

நேற்றைய தினம் பிரதேச செயலரின்அறிவுறுத்தலையும், நீதி மன்ற கட்டளையை மீறியும் குடாரப்பில் வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபடும் முயற்சிகள் ஆரம்பமாகியிருந்தது.

தென்னிலங்கையிலிருந்து கடலட்டை பிடிப்பதற்காக வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கடலட்டை தொழிலில் ஈடுபட ஏதுவாக நேற்றைய தினம் 18 படகுகள் சகிதம் பலர் வந்து குவிந்திருந்தனர்.அவர்கள் வாடிகள் அமைத்து தொழில் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பில் குடாரப்பு கிராம மக்களும் குடாரப்பு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து பிரதேச செயலாளர் கிராம சேவகர் ஊடாக குறித்த வாடி அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்த வழங்கியிருந்தார்.

எனினும் அவரின் அறிவுறுத்தலையும் மீறி நேற்று கடல் அட்டை தொழிலாளர்கள் வாடி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்.

இச் சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் திரு. சண்முகநாதன் மற்றும் பருத்தித்துறை பிரதேசசபையின் நாகர்கோவில் வட்டார உறுப்பினர் ஆனந்தராசா சுரேஸ்குமார், வேலுப்பிள்ளை பிரசாந்தன் உட்பட்ட பிரதிநிதிகள் குறித்த வாடி அமைத்து கடலட்டை தொழிலில் ஈடுபடுவதை நிறுத்துமாறு சம்பந்தப்பட்டவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் கடலட்டை பிடிப்பாளர்கள் தாம் உரிய முறையில் மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்றே குறித்த தொழிலில் ஈடுபடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்ததுடன். தமக்கு செம்பியன் பற்று பங்குத்தந்தையின் அனுமதியும் கடிதத்தின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் திரு சண்முகநாதன் தமது மீன்பிடி தொழிலாளர்களின் ஜீவனாமோ பாயத்தை கருத்தில் கொள்ளாமல் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சகம் குறித்த கடலட்டை பிடிப்பதற்கான அனுமதியை வழங்கப்பட்டுள்ளதாகவும் இதனை எதிர்த்து நாளை திங்கட்கிழமை வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்படகடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் சமூக ஆர்வலர்கள் பொது அமைப்பு பிரதிநிதிகள் அனைவரும் இணைந்து காலை 10 மணியளவில் வடமராட்சி கிழக்கு கடற் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக சென்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தனர்.

No comments