13 கதிரைகள்: 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள்?


இலங்கையில் ஓகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இருந்து 13 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் வன்னி ஆகிய இரு மாவட்டத்திலும் 5 நிர்வாக மாவட்டங்கள் உண்டு . இதில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் நிர்வாக மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 584 வாக்காளர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 92 ஆயிரத்து 264 வாக்காளர்களுமாக மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 848 பேர் வாக்காளிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதன் மூலம் 7 நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொள்வர்.

இதேபோன்று வன்னித் தேர்தல் மாவட்டத்திலே உள்ளடங்கும் மூன்று நிர்வாக மாவட்டங்களில் வவுனியா மாவட்டத்தில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 811 வாக்காளர்களும் , மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 வாக்காளர்களும் உள்ள அதேநேரம் முல்லைத்தீவு மாவட்டத்தில் 78 ஆயிரத்து 360 வாக்காளர்களுமாக மொத்தம் 2 லட்சத்து 87 ஆயிரத்து 13 வாக்காளர்களின் வாக்களிப்பின் மூலம் 6 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே மொத்தமாக 8 லட்சத்து 58 ஆயிரத்து 861 வாக்காளர்கள் வாக்களித்து 13 உறுப்பினர்களை பெறவுள்ளது.

இதேநேரம் இறுதியாக 2015ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டில் செல்லுபடியான 3 லட்சத்து 309 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2 லட்சத்து 7 ஆயிரத்து 577 வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்களிப்பின் 69 விகிதமாகும். அடுத்த படியாக 30 ஆயிரத்து 232 வாக்குகளை ஈபிடிபி பெற்றுக்கொண்டது. இது 10 வீத வாக்காக கானப்பட்டதோடு ஐ.தே.கட்சி 20 ஆயிரத்து 69 வாக்குகளைப் பெற்று 6.69 விகித்த்தை எட்டிப் பிடித்து இறுதி ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

இருந்தபோதும் ஐ.ம.சு.முன்னணி 17 ஆயிரத்து 309 வாக்குகளையும் ததிழ்த் தேசிய மக்கள் முன்னணி 15 ஆயிரத்து 22 வாக்குகளையும் பெற்று ஆசனங்களைப் பெறும் வாய்ப்பினை இழந்தனர். இதேபோன்று வன்னி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றது. அதாவது வன்னி மாவட்டந்தில் செல்லுபடியான ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 775 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 89 ஆயிரத்து 886 வாக்குகளைப் பெற்றது. இது மொத்த வாக்களிப்பின் 54 விகிதத்தினையும் தாண்டியது . அடுத்த படியாக 39 ஆயிரத்து 513 வாக்குகளை ஐ.தே.கட்சி பெற்றுக்கொண்டது. இது 24 வீகித வாக்கினை தொட்டது. ஐ.ம.சு.மு 20 ஆயிரத்து 965 வாக்கில் 12.77விகித்த்தை எட்டிப் பிடித்து இறுதி ஆசனத்தையும் பெற்றுக்கொண்டது.

No comments