அரசியல் கைதிகளிற்காக தொடர்ந்தும் சி.வி!


தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம், கலந்தாலோசித்தல் மூலம் ஏற்படக் கூடிய ஒரு அரசியல் செயற்பாட்டிற்கான பொருளுள்ள பொறுப்பு மிக்க முன்னோடியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தலைவர்கள்.
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நேற்று (11.06.2020) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இது குறிப்பிடப்பட்டுள்ளது.

அந் கடிதத்தில், எமக்குக் கிடைக்கும் தகவலின் அடிப்படையில் குற்றவாளிகளாகக் காணப்பட்டு மேன்முறையீடு செய்து அம் மேன்முறையீடுகளும் முடிவுற்று தண்டனையை அனுபவிப்போர் – 29, குற்றவாளிகளாகக் காணப்பட்டு தற்போது மேன்முறையீட்டின் முடிவை எதிர் பார்த்திருப்போர் – 17, குற்றஞ்சாட்டப்பட்டு அவர்களுக்கெதிரான விளக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்போர் – 38, குற்றத்தை ஏற்று, தண்டனை வழங்கப்பட்டு தற்போது சிறையில் இருப்போர் தொகை 7 – மொத்தம் 91. அவர்களுள் மிகப் பெருவாரியானவர்கள் 12 வருடங்களுக்கு மேல் சிறையில் அடைபட்டுக் கிடக்கின்றார்கள்.
இவர்களுள் பெரும்பான்மையினர் கைதாகப்படும் போது அவர்களுக்கு வயது இருபது சார்ந்தோ முப்பது சார்ந்தோ தான் இருந்தது. அவர்களின் தொடர் சிறைப்படுத்தலானது அவர்களை வெகுவாகப் பாதித்துள்ளது என்பது மட்டுமன்றி அவர்களின் குடும்பங்களும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.
சிறையில் இருந்த இரு சிறையாளிகள் சில காலத்திற்கு முன்னர் உயிர் நீத்தார்கள்.
ஏனையவர்களுக்கிடையில் மேல் மட்ட இயக்கத் தலைவர்கள் கருணா அம்மான், பிள்ளையான் மற்றும் கே.பத்மநாதன் போன்றோர் விடுவிக்கப்பட்டமையால் 2009 மே மாதம் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் தாமும் விரைவில் விடுவிக்கப்படுவோம் என்ற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு தமிழ் அரசியல் கைதிகளுக்கு அப்போது இருந்தது.

10 – 15 வருடங்கள் தொடர் சிறையில் இவர்கள் இதுகாறும் இருந்து வந்துள்ளதின் காரணமாக அவர்களின் நிலைமை கருணையுள்ளத்துடனும் இரக்க சிந்தனையுடனும் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.
தமது இளமையின் பெரும்பாகத்தை தொடர்ந்து சிறைகளில் கழித்துள்ள இந்த அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் தீர்ப்பது என்பது இந் நாட்டின் மக்கட் பிரதிநிதிகள் இடையில் உரையாடல், கருத்துப்பரிமாற்றம், கலந்தாலோசித்தல் மூலம் ஏற்படக் கூடிய ஒரு அரசியல் செயற்பாட்டிற்கான பொருளுள்ள பொறுப்பு மிக்க முன்னோடியாக அமையும் என்பதில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம் என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.
பொதுத் தேர்தலின் பின்னரும் உங்கள் தலைமைத்துவக் காலத்தின் போதும் எமது தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அமைதித் தீர்ப்பைப் பெற குறித்த நாதியற்ற கைதிகளின் பிரச்சனைகளைத் தீர்பதானது எமது தமிழ் மக்களிடையே நம்பிக்கையையும் நம்பத்தகுந்த ஒரு சூழலையும் உருவாக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே இது சம்பந்தமாக உறுதியான தீர்மானம் எடுத்து குறித்த நல் வாய்ப்புப் பெற எமது நாட்டின் குடிமக்களை உடனே விடுவித்து அவர்கள் தமது குடும்பங்களுடன் சேர்ந்து மீண்டும் சமூக வாழ்க்கையைத் தொடர உரிய நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் மாண்புமிக்க உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்களை விடுவிக்க விசேட பொது மன்னிப்பு அவசியம் என்பதையும் மற்றவர்களை தங்களுக்கிருக்கும் அதிகாரம் மூலம் விடுதலை செய்யலாம் என்பதையும் வேண்டுமெனில் அது நீதிமன்றங்கள் மூலம் நடைமுறைப்படுத்தலாம் என்பதையும் நாம் அறிந்துள்ளோம்.
உங்கள் நற்றீர்மானம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாங்கள்
இப்படிக்கு
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
செயலாளர் நாயகம், தமிழ் மக்கள் கூட்டணி
க.பிறேமசந்திரன்
தலைவர், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி
ந.சிறீகந்தா
தலைவர், தமிழ் தேசியக் கட்சி
அனந்தி சசிதரன்
செயலாளர் நாயகம், ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்

No comments