வடக்கில் இனி காணி விடுவிப்பு இல்லை?


"வடக்கில் படையினரின் ஒரு முகாமைக்கூட அகற்றவும் மாட்டோம்; குறைக்கவும் மாட்டோம். இராணுவத்தினர் அங்கு தொடர்ந்து நிலைகொள்வார்கள்  என திட்டவட்டமாகத் தெரிவித்தார் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா.


"தமிழ் அரசியல்வாதிகளின் வலியுறுத்தலுக்கமைய நாம் செயற்படமாட்டோம். பாதுகாப்பு அமைச்சரான - முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் பணிப்புரைக்கமையவே நாம் செயற்படுகின்றோம்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"எமக்கு நாட்டின் பாதுகாப்புதான் முக்கியம். எந்தெந்த மாகாணங்களில் எவ்வளவு படையினர் இருக்க வேண்டுமோ அதே எண்ணிக்கையிலான படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் வடக்கு மாகாணத்தில் முப்படையினரின் பாதுகாப்பு மிகவும் அவசியம். இம்மாகாணத்தில் கடல் வழியாகப் போதைப்பொருள்கள் பெருமளவில் கடத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை இம்மாகாணத்தில் வாள்வெட்டுக் குழுக்கள் என சட்டவிரோதக் குழுக்களின் அடாவடிகள் தலைவிரித்தாடுகின்றன. இப்படியான குற்றச் செயல்களைப் பொலிஸாரின் உதவியுடன் படையினர் தடுத்து வருவதுடன் குற்றவாளிகளையும் தப்பவிடாமல் கைதுசெய்து வருகின்றனர்.

இந்தநிலையில் வடக்கிலுள்ள படை முகாம்களை அகற்றவும் முடியாது; குறைக்கவும் முடியாது. இராணுவத்தினரை வெளியேற்றவும் முடியாது; குறைக்கவும் முடியாது.

சிவில் நிர்வாக சேவையின் உயர் பதவிகளில் படை அதிகாரிகளை ஜனாதிபதி நியமித்துள்ளதை தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட எதிரணியினர் கண்டபடி விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி நாட்டின் பாதுகாப்பே முக்கியம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார். அதனால்தான் அவர் பாதுகாப்புத்துறையில் திறமையானவர்களை சிவில் நிர்வாகத்தில் உயர்நிலைப் பதவிகளில் நியமித்துள்ளார். இதுதான் உண்மை.

நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டே செயலணிகளை ஜனாதிபதி நிறுவி வருகின்றார். இதில் படை அதிகாரிகளையும் நியமித்தால் இதை இராணுவ ஆட்சி என்று சொல்வது எந்தவகையில் நியாயம்?" - எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

No comments