நேட்டோப் படைகளை தாக்க பணம் வழங்கியதை மறுத்தது ரஷ்யா

ஆப்கானிஸ்தானில் செயற்பட்டுவரும் அமெரிக்கப்படையினர் மற்றும் நேட்டோ படைகள் மீது தலிபான் படையினர் தாக்குதல்களை நடத்துவதற்கு தலிபான் போராளிகளுக்கு ரஷ்யாவின் படையப் புலனாய்வுப் பிரிவு பணம் வழங்கியது என்ற குற்றச்சாட்டை ரஷ்யாவும் தலிபான்களும் மறுத்துள்ளன.

கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்படையினர் மற்றும் நோட்டோப் படையினர் மீது வெற்றிகரமான தாக்குதல்களை நடத்திய தலிபான் போராளிகளுக்கு ரஷ்யாவின் படையப் புலனாய்வுப் பிரிவு வெகுமதியாக பணத்தினை வழங்கியது என்று அமெரிக்கப் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பல மாதங்களின் முன்னர் முடிவுக்கு வந்தாக நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் இவ்விடயமாக சுயாதீனமாக செய்தி வெளியிட்டிருந்தது.

குறிப்பாக தனிபான்களுடன் நெருக்கமாகத் தொடர்பில் இருக்கும் போராளிகள் மற்றும் நெருக்கமானவர்களுக்கு ரஷ்யர்களிடமிருந்து வெகுமதியாகப் பணத்தை பெற்றுள்ளதாக நம்பப்படுகிறது. ஆனால் இப்பணம் எத்திட்டத்திற்கு வழங்கப்பட்டது என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை என செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இக்குற்றச்சாட்டுக்களை வாசிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரம் நேற்று சனிக்கிழமை மறுத்ததுடன் தனது கண்டனத்தை கீச்சகப் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இது ஓர் ஆதாரமற்ற மற்றும அநாமதேய தகவல் எனக் குறிப்பிட்டிருந்தது.

இத் தகவல்களால் வாஷிங்டன் மற்றும் லண்டனில் உள்ள ரஷ்ய தூதரங்களில் பணியாற்றும் பணியாளர்களின் உயிருக்கும் அச்சுறுத்தலுக்கும் இது வழிவகுத்துள்ளது என ரஷ்யா தனது கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளது.

No comments